முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் சிறிலங்காவிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளனர்.
முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் இந்தப் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் மேலும் தெரிய வருகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விசேட குழு ஒன்று அமைத்துள்ளதாக ஏற்கனவே பாரிஸ்தமிழ்.கொம் செய்தி வெளியிட்டிருந்தது.
சமகாலத்தில் சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ரீதியான குழப்ப நிலையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் பலமானால் அது தற்போதைய ஆளும் அரசு பெரும் சவாலாக இருக்கும் என அரசியில் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் எதிர்ப்புக்களையும் மீறி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து பொது நலவாய மாநாட்டினை புறக்கணிக்குமாறு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் மாநாட்டில் கலந்து போவதாக அறிவித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலை தொடர்பில் பிரித்தானிய தூதுவராலயத்துடன், தமிழக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தமிழக மாணவர்கள் அணி இது தொடர்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். இதேவேளை மே 18 நிகழ்வுகளில் பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தினை கைவிடுமாறும் கோரப்படவுள்ளது.
குறித்த மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் சிறிலங்காவின் மனித உரிமை மீறல் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது. அதற்கு மாறாக சிறிலங்காவுக்கான விஜயத்தை அந்த நாட்டின் மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள டேவிட் கெமரோன் எண்ணியுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten