தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

ஆசியாவிலேயே இலங்கையில் தான் ஜனநாயக பண்புகளை கொண்ட நிலையான அரசாங்கம்!- ஜனாதிபதி!


இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் உள்ள உடன்பாட்டை ரத்து செய்கிறது இலங்கை?
[ சனிக்கிழமை, 25 மே 2013, 03:48.28 AM GMT ]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எண்ணெய் விநியோகம் தொடர்பாக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் (ஐஓசி) செய்து கொண்டுள்ள உடன்பாட்டை ரத்துச் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை, ஐஓசி நிறுவனத்துடனான உடன்பாட்டை ரத்து செய்து விட்டு சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அராம்கோ நிறுவனத்திடம் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் செயற்பாடுகளை ஒப்படைப்பதற்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே அண்மையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஐஓசிக்கு வழங்கப்பட்ட எண்ணெய் விநியோக உடன்பாட்டை ரத்துச் செய்தால், அதன் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்படும் நிலை ஏற்படும். அதற்குப் பதிலாக அராம்கோ நிறுவனம் 250 எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐஓசி நிறுவனம் தரம்குறைந்த எரிபொருளை விநியோகிப்பதாக அண்மையில் இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.
ஆசியாவிலேயே இலங்கையில் தான் ஜனநாயக பண்புகளை கொண்ட நிலையான அரசாங்கம்!- ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:39.52 AM GMT ]
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 
மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்“டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
இளைஞர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் 18 வயதிலிருந்து 29 வயது வரையிலானவர்கள். இப்பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை அவர்களின் பலத்தைக் காட்டுகிறது.
தேசிய ஒற்றுமையே இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதான இலக்காக வேண்டும் எனவும் தெற்கிலிருந்து தெரிவான பிரதமரும் வடக்கிலிருந்து தெரிவான பிரதிப் பிரதமரும் இச் சவாலை ஏற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
1970ஆம் ஆண்டு மே மாதம் இதேபோன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்ட போது எனது வயது 23 தான். பாராளுமன்றம் என்றாலும் சரி, வேறு நிறுவனங்கள் என்றாலும் சரி தலைவர்களாக விரும்புவோர் இளம் பராயத்திலேயே தமக்கான சிறந்த சரிதத்தை கட்டியெழுப்ப வேண்டியது முக்கியம்.
தலைவர்களாக விரும்பும் எவரும் ஊதாரிகளாகவோ மோசடிக்காரர்களாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறில்லாதவர்களுக்கே சிறந்த எதிர்காலம் உள்ளது. எனது இளம்பராயத்தில் பெளத்த மத குரு ஒருவர் எனக்கு கற்பித்த இந்த வாசகம் இன்றும் என்னால் மறக்க முடியாதது.
இது எனது வாழ்க்கைக்கு மிக உறுதுணையானது. அதனையே இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் கூற விரும்புகிறேன். பல கருத்துக்கள் நிலவலாம். எனினும் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய செயற்பாடே நான் சிறந்த அரசியல் பயணத்தை மேற்கொள்ள உதவியது.
சர்வதேச கருத்துக்கள் எவ்வாறாக இருந்தாலும் சிறந்த கல்விமான்கள் எம்மத்தியில் இருந்தனர். அவர்கள் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா என்பதைவிட எமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் என்பதே முக்கியம்.
உடனடி ‘நூடில்ஸ்’ தயாரிப்பதைப் போன்று அவசரமாக தலைவர்களை உருவாக்க முடியாது. இது தொடர்பில் மிகுந்த அவதானிப்புகளும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.
ஒன்றை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். தலைமைத்துவப் போட்டி 20 x 20 கிரிக்கெட் போட்டியல்ல. அதேபோன்று ஒரே மூச்சில் 100 மீற்றர் ஓடுவது போலல்ல. அது டெஸ்ட் போட்டியைப் போன்று அல்லது மரதன் ஓட்டம் போன்றதாகும்.
தலைமைத்துவம் என்பது ஏணிப்படிகளில் ஒவ்வொரு படியாக ஏறி வரும் பயணம். உச்சிக்கு வந்த பின் முதற்படியை மறக்கக்கூடாது. நாம் எப்போதும் எங்கிருந்து வந்தோம் என்பதையும் எமக்கு கைகொடுத்தவர்களையும் மறந்து விடக்கூடாது.
தலைவன் என்பவன் தன்னை நிர்வகிக்கக் கூடியவனாக இருப்பது முக்கியம். தம்மை நிர்வகிக்கக் கூடியவர்கள்தான் பிறரை நிர்வகிக்க முடியும். சிறு பராயத்திலேயே தம்மை சிறப்பாக வளர்த்துக் கொள்ளத் தவறுபவர்கள் தலைவரான பிறகு அதனை சரிசெய்ய முடியாது.
சிலர் நினைப்பதுண்டு நாம் பாராளுமன்றத்துக்கு சென்று அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டு பின் பிரதமர் பதவியைப் பெற்று தம்மை வளர்த்துக் கொள்ளலாம் என்று. ஜனாதிபதியாகி தம்மை சரிப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களும் உண்டு.
அரச மாளிகையில் பிறந்து அரசராக முடிசூட்டிக் கொண்டாலும் காலையில் எழுந்து உரிய கடமைகளை நிறைவேற்றாதவர் அவரை மட்டுமன்றி அவர் ஆட்சி செய்யும் நாட்டையும் ஒழுங்காக நிர்வகிக் முடியாது என்பதே எனது நம்பிக்கை.
தமது குழு தோல்வியுற்றாலும் தலைவரே அதனை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். இது தொடர்பில் எமக்கு மிகுந்த அனுபவமுள்ளது. நாம் கடந்த யுகத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. உலகில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன் வங்கிகள் வீழ்ச்சியடைந்ததால் பெருமளவிலானோர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
இத்தருணத்தில் நாம் உலகில் மிக கொடூரமான பயங்கரவாதத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. சர்வதேச ரீதியில் பெரும் அழுத்தங்கள் வந்த போதும் நாம் தெளிவுடன் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளோம்.
இப்போதும் எம்மை சர்வதேசம் குற்றவாளிகள் போல் பார்க்கிறது. எனினும் இவை அத்தனையையும் நநாம் நாடின் மீது சுமுத்தியிருந்தால் நாட்டு மக்கள் அதனால் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்பர். அவ்வாறிருந்திருந்தால் எந்த வெற்றியையும் நாம் பெற்றிருக்க முடியாது.
தலைவன் என்பவன் ஏனையவரின் பிரச்சினைகளை தாம் பொறுப்பேற்க வேண்டும். பிரச்சினைகளில் தலைவன் தான் துயரத்தில் அல்லது குழப்பமடைந்திருந்தால் உடனிருப்போர் மேலும் குழப்பமடைவர். ஒருவர் தம்முடைய பிரச்சினைகளை குழப்பமடையாத ஒருவரிடமே கூற முற்படுவர். இதனை சகலரும் உணர வேண்டும்.
பூரணமான மனிதர்கள் மத்தியிலன்றி குறைபாடுகளுள்ள சமூகத்தை தான் நாம் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. மாணிக்கக் கல் கூட முதலில் சேறுடனேயே இணைந்திருக்கும். சிறந்த மாணிக்கக் கல் அகழ்வோர் சேற்றை நோக்கமாட்டார்கள், மாணிக்கக் கல்லையே பார்ப்பர்.
அதேபோன்று பூரணமானவர்களை தேடிக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் தமது முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள். குறைபாடுகளோடு குழுவைப் பொறுப்பேற்பவர்களே பலம் பெறுவர்.
உலகின் மோசமான பயங்கரவாதத்தை தோற்கடிக்க எமக்கு அமெரிக்காவைப் போன்று அதியுயர் தொழில் நுட்பமோ அங்கு போல் கூலிப் படைகளும் எம்மிடமிருக்கவில்லை. நாம் அவர்களைக் கொண்டு வரவுமில்லை. வெளிநாட்டுப் படைகள் வந்து எமக்கு நேர்ந்த கதியை நாம் உணர்ந்துள்ளோம்.
கிராமங்களில் சேனையிலும் வயல்களிலும் வேலை செய்த இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை நாம் வீரர்களாக உருவாக்கினோம். அவர்களே உலகம் பிரமிக்கும் வெற்றியை பெற்றுத் தந்தனர். அனைத்திலும் வெற்றிபெற முடியும் என நினைக்கக் கூடாது.
சிலவேளை வீழ்ச்சியையும் எதிர்கொள்ள நேரிடும். வீழ்ச்சியிலும் தளராது எழுச்சிபெற வேண்டும். கைவிட்டுவிடக்கூடாது. தோல்வியுற்றால் வெற்றியடைந்தோரை குறைகூறும் தரப்பினர் எமது நாட்டில் உள்ளனர். இத்தகையோரால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
இப்போது எமது நாட்டில் நான்கில் ஒரு வீதமானோர் இளைஞர்களாவர். அபிவிருத்தியில் முன்னேறியுள்ள நாடுகள் இளைஞர் பலத்தினாலேயே இலக்கை அடைந்துள்ளன. எமது நாடும் இளைஞர்களைக் கொண்ட நாடு. இதனால் நாட்டின் எதிர்காலத்தை எம்மால் சுபீட்சமானதாக சிந்திக்க முடியும்.
எமது நாடுதான் ஆசியாவிலேயே விகிதாசார தேர்தல் முறையை முதலில் நடைமுறைப்படுத்தியது. பிரிட்டனுக்கு சர்வஜன வாக்கெடுப்பு கிடைத்த சில வருடங்களிலேயே எமக்கும் சர்வஜன வாக்கெடுப்பு கிடைத்தது.
அன்றிலிருந்தே ஆசியாவில் வெற்றிகரமான ஜனநாயகத்தை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten