தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல: இமெல்டா சுகுமார்!


மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல என யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபரும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற மாற்றுவலுவுடையவர்களுக்கு சுயதொழில் உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாற்றுவலுவுடையவர்களுக்கு வழங்க வேண்டிய சேவையை வழங்குவதற்கு அதிகாரம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுவலுவுடைய மக்களை பரிதாபத்திற்கு உரியவர்களாகப் பார்க்கக்கூடாது. மாற்றுவலுவுடையவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய தார்மீகப் பணி சகலருக்கும் இருக்கின்றது.
இவர்களுக்குரிய உதவிகளை கிராமத்தில் இனம்கண்டு கவனம் எடுக்க வேண்டிய பொறுப்பு கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இருக்கின்றது.
மாற்றுவலுவுடையோர் பிரதேச செயலகங்களுக்கு அலைந்து அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து கிராம சேவையாளர்கள் தாமாகச்சென்று உதவிசெய்ய முன்வர வேண்டும்.
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்கின்றவர் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டிய பொறுப்பு உத்தியோகத்தர்களைச் சார்ந்தாகும் என்று சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் இருந்து சுயதொழிலை மேற்கொள்வதற்காக பதின்மூன்று மாற்றுவலுவுடையவர்களுக்கும், நல்லூர் பிரதேச செயலகத்தில் இருந்து இருவருக்கும், உடுவில் மற்றும் நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சுயதொழில் உதவியாக ரூபா 25 ஆயிரம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் சமூக சேவைகள் இணைப்பாளர் திருமதி குறூப், பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


Geen opmerkingen:

Een reactie posten