வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி அம்பலம்!
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:38.05 AM GMT ]
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகர் புல்லுக்குளத்தை புனரமைப்புக்காக பாரியளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் கட்டுமாணப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடமாகாண ஆளுநர் தனக்கு நெருக்கமான ஒரு ஒப்பந்தகாரருக்கு கொடுத்து அதன் மூலம் தானும் நன்மை அடைந்துள்ளார்.
குறித்த ஒப்பந்தக்காரரின் தரமற்ற நிர்மாணப் பணிகளால் புல்லுக்குளம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
யாழ் நகர் புல்லுக்குளத்தின் கிழக்குப் பகுதியின் வீதியோரக் கட்டுக்கள் தரமற்ற கட்டுமாணப் பணிகளால் இடிந்து வீழ்ந்துள்ளன.
யாழ் மாநகர சபையால் அண்மையில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் புல்லுக்குளத்தினை அழகுபடுத்தும் நோக்கோடும், மக்களின் பொழுதுபோக்கினை கருத்திற்கொண்டும் குளத்தை சுற்றிவர கொங்கிறீற் கட்டுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குளப் புனரமைப்புப் பணிகள் பெருமெடுப்பிலும், பாரிய நிதிச் செலவீனத்திலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதன் கிழக்கு வீதியோர கட்டுக்களில் 25 மீற்றர் தூரம் வரையான கட்டுமானப் பணிகள் முற்றாக இடிந்து குளத்தினுள் வீழ்ந்துள்ளது.
மேலும் இக்குளத்தில் பொழுதுபோக்கிற்காக வந்து தினமும் கட்டுக்களில் நடந்து செல்வோர் எப்போது கட்டுக்கள் இடிந்து விழுமோ என்ற அச்ச உணர்வுடனேயே செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட ஒப்பந்தகாரர்கள் உரிய முறையில் கட்டட நிர்மாணம் மேற்கொள்ளாமையே குறித்த கட்டுக்கள் இடிந்து வீழ்கின்றமைக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக்கட்டுமாணப் பணியினை மேற்கொண்ட ஒப்பந்தகாரர்கள் மீது மாநகர சபை உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும், இடிந்த கட்டுக்களை அதே ஒப்பந்தகாரர்களை கொண்டு புனரமைப்பு மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் சமூகவியலாளர்கள் சுட்டிக் கட்டுகின்றனர்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் ஒப்பந்த வேலைகளுக்கு தரமான ஒப்பந்தகாரர்களை ஈடுபடுத்துவதும், அதனை மேற்பார்வை செய்வதன் மூலம் இவ்வாறன செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய காணி அதிகாரிகள் ஊடாக தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் மூலம் தரமான கட்டுமானங்களை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கு உரியதரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நெடுங்கேணி பாடசாலை சிறுமி மீதான வன்கொடுமைக்கு கண்டனம்- படைச் சிப்பாய் ஒருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 12:36.19 PM GMT ]
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளின் மற்றுமொரு வடிவமாகவே அவர்கள் வாழும் பிரதேசங்களில் நடந்தேறும் கலாசாரச் சீரழிவுகளும் கண்டும் காணாது விடப்பட்டு வருகின்றன. அவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வருகின்றனர்.
இதனையே நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவமும் எடுத்துக்காட்டி நிற்கின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு மேலாகியும் இன்னமும் கைது செய்யப்படாதுள்ளர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
வன்னி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவமானது எதிர்கால வாழ்க்கையில் அம்மக்களை அச்சங்கொள்ள வைத்துள்ளது.
வன்னியில் வாழும் சிறுவர்கள், பெண்களுக்கு உறுதியற்ற பாதுகாப்பு சூழல் உள்ளதென்பதை எடுத்துக் காட்டுகின்றது.
தினமும் அச்சத்துடனேயே அவர்கள் காலத்தைக் கடக்க வேண்டியவர்களாகவுள்ளனர்.
இச்சம்பவமானதுபாடசாலைமாணவர்களிடத்திலும் கல்விச் சமுகத்திலும் அச்ச சூழலைத் தோற்றுவித்துள்ளது.
30 வருடகால யுத்த சூழலில் இருந்து விடுபட்டு மக்கள் அனைவரும் மீண்டும் சுமுகமாக ஓர் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த நாட்டில் வாழும் சிறுவர், பெண்கள் மீதான அடக்குமுறை வன்முறைகள் இன்னமும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் இந்தகைய கலாசாரச் சீரழிவுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதே ஏவிவிடப்பட்டுள்ளன. இதனை குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதான சூழ்நிலை எடுத்துக் காட்டி நிற்கின்றது.
இச்சீரழிவுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருகின்றார்கள்.
சிவில் சமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தரப்பினர் இவர்களைக் காலம் தாழ்த்தியே கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
இதனால் சம்பவமும் குற்றவாளியும் வலுவற்றவையாக்கப்படுகின்றன. இது சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றது.
இதனால் மௌனிகளாக்கப்பட்டு வரும் தமிழ் சமுகம் அதிகார வர்க்கத்தின் முன்னால் தோல்வியுற்று வருகின்றனர். அச்சமுகத்தில் உள்ள சிறுவர், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுகின்றது.
எனவே இக்கொடூரமான பாதகச் செயலைச் செய்வோரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்நாட்டு அரசாங்கமும் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு அபிவிருத்தி அமைச்சும் இதில் கவனம் எடுத்து உடனடிச் செயற்பாட்டில் இறங்க வேண்டும்.
நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான மிகக் கொடூரமான பாலியல் வல்லுறவுச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இப் படுபாதக செயலைச் செய்த காமுகனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இப்பிரதேச மக்கள், சிறுவர்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இரண்டாம் இணைப்பு-
நெடுங்கேணி பாடசாலை மாணவி விவகாரம் தொடர்பில் படைச் சிப்பாய் ஒருவர் கைது
நெடுங்கேணி சேனைப்புலம் பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று படைச் சிற்பாய் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி சேனைப்புலம் பகுதியில் கடந்த 13ம் திகதி 7 வயது பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வாரங்களுக்கு மேலாக இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படாமல் இருந்தார். இதனால் இப்பகுதி மக்களும் சமுக அமைப்புக்களும் குற்றவாளியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை நெடுங்கேணி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் படைச் சிற்பாய் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று பாடசாலை பாதுகாப்பு புத்தகத்தில் கையொப்பமிடச் சென்ற பொலிஸை இப்படைச் சிற்பாய் அச்சுறுத்தி விட்டு மாணவியை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றதாக பொலிஸ் கான்ஸ்டபிள் வழங்கிய வாக்குமுலத்துக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான நபரை நாளை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நெடுங்கேணிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவினாலேயே தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தி குற்றவாளிக்கு தண்டனையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten