தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

மரணத்தின் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது!- பூநகரான்


தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.
ஆனால் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. கருத்தூன்றி அவதானிக்கவில்லை. துறை சார்ந்த தேடலுடன் அவர்களுடைய பார்வைகள் ஆராயவில்லை எனபதே உண்மை. அவ்வாறே எத்தனை இறுதிச் சடங்குகளிற்கு போனாலும் எங்களது துள்ளல்களை நாங்கள் எள்ளளவும் குறைக்காத பிறவிகளாகவே உள்ளோம்.
ஆம், மரணம் ஆய்வுடன் பார்க்கப்பட வேண்டிய ஒரு இயற்கை நிகழ்வு. இது அமங்கலமானது என்று கண்களை மூடுபவர்களும் ஒரு நாள் கண்களை மூடியே ஆக வேண்டும். நாங்கள் மூடாவிட்டால் வேறு யாராவது தங்கள் கைகளால் எங்கள் கண்களை மூடி விடுவார்கள். பின்னர் வாய்க்கு அரிசியும் போடக்கூடும். இருந்தும், இந்தக் காட்சிகள் அடங்கிய பல திரைப்படங்களையும் பார்த்தும் நாங்கள் சுடலை ஞானத்தைக் கூடப் பெறுவதில்லை. ஆம், கவிஞன் கண்டாலே கவிதை. காண்பவன் கண்டாலே காதல்.
எழுபதுகளின் இறுதி ஆண்டுகளில் யாழ் பல்கலைக்கழகத்தை ஊடறுத்து ஒரு கவிமாணவன் நடந்து கொண்டிருந்த போது, ஒரு பட்ட மரத்தை கடந்து போக வேண்டியிருந்தது. அதனைப் பார்த்த அந்த இளம்கவி தன்னுடன் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தான்.
இந்தப் பட்ட மரத்தை ஒரு விறகுவெட்டி கண்டால் ஆனந்தத்துடன் தறித்து விறகுக் கட்டுகளாக்கி பிழைக்க வழி தேடிக் கொள்வான். ஒரு தாவரவியல் ஆய்வாளன் கண்டால் இதை ஆராயவே தொடங்கிவிடுவான்.
இந்த மரத்தின் மரணத்திற்கு என்ன காரணமாக இருந்திருக்கும் என்று கூட இன்னும் ஒரு துறை சார்ந்தவன் ஆராயக் கூடும். ஆனால் காதல் வயப்பட்ட ஒரு கலையுள்ளம் இதனை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி பார்க்கவும் இடமுண்டு.
இலைகளோ பூககளோ அற்ற அந்த கிளைகள அவன் கைகளாகவும் கால்களாகவும் காணக் கூடும். ஆக பார்க்கும் பார்வையிலேயே பலதும் தங்கியுள்ளன. இந்த இளம் கவி இன்று வட துருவத் தமிழ்க் கவியாக மிளிர்கிறது.
ஒரு நோயாளியை ஒரு மருத்துவனால் தான் பார்க்க முடியும். பொறியியலாளனாலோ, வழக்கறிஞனாலோ அந்த நோயாளியைப் பார்க்க முடியாது. அவர்கள் அதி திறமையுள்ள பொறியியலாளராக இருந்தாலும், அவர்களது பார்வையும் எங்களது பாமரப் பார்வையாகவே இருக்கும். ஆக காணல் என்பது பார்வையாக மாற அறிவும் ஆய்வும் தேவை.
பொதுவாகவே தமிழராகிய எங்களிடம் இந்த இரண்டும் குறைவாகவே காணப்படுகிறது. காரணம், நாம், நம் முன்னோர் கண்டு அறிந்துள்ளவற்றையே கற்கும் தேசியச் சிந்தனைப் போக்குள்ளவர்கள். ஏற்கனவே அனேகமானவை தயாராக இருப்பதால் எதையும் புதிதாக தயாரிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை.
தமிழர், கிரேக்கர், உரோமர் போன்ற பண்டைய இனங்கள் இன்று வீழ்ந்து போயக் கிடப்பதற்கு இதவும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ் மொழி எல்லாவற்றையும் கொண்ட செம்மொழியாக இருப்பதால் தேடலிற்கும் கண்டு பிடிப்பிற்குமுரிய தேவை எழுவதில்லை. இதனாற் தான் ஆய்வின்மை தமிழர்களின் தேசியக் குறைபாடாக உள்ளது.
உலகிற்கே பகுத்தறிவுக் கண்ணைத் திறந்து விட்ட கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழைச் சேரியாக உள்ளது. எங்களது சிந்தனை பழைமையை நோக்கி செல்லும் போது, வளர்ச்சியற்றிருந்த வெள்ளையினம் புதுமைகளைத் தேடி அலைவதாற் தான் அவர்கள் அதியுயர் விஞ்ஞானத்தின் அதிபதிகளாக உள்ளனர்.
 நாங்கள் கொடி கட்டிப் பறந்த போது, நீங்கள் காடுகளில் அலைந்தீர்கள் என்று சுவாமி விவேகானந்தர் கிழக்கிலிருந்து வந்து மேற்கில் முழங்கியது இங்கு நினைவூட்டலிற்குரியதாகிறது.
தமிழராகிய எங்களிடம் கடின உழைப்பும், விருந்தோம்பலும, காதலும் வீரமும் உண்டு. அதீத தியாகமும் உண்டு ஆனால் தந்திரம் அறவே கிடையாது. தந்திரத்தை கையாள்வதை கபடமாக முறைகேடாக பார்ப்பது தமிழர் வழமை. ஆனால் உதாரண புருஷனாக வந்த இராமனோ மறைந்திருநதே வாலியைக் கொன்றான். அதை ஆரியர்கள் முறைகேடாகக் கருதாது இராஜதந்திரம் என்கிறார்கள்.
நாங்களோ நெஞ்சில் வேல் ஏந்தி புறமுதுகு காட்டாது வீழ்வதே மேல் என இன்றும் நினைக்கிறோம். வாழ்வதா சாவதா என்பதை விட நாம் எப்படி வாழ்கிறோம் என்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது.
மானமும் ரோச உணர்வும் எம்மை மாய்த்தே வருகின்றன. மரணங்களை அழைக்கின்றன. மரணம் அழைக்க முன் நாம் நாமாக மரணங்களை அழைக்கிறோமா? இந்த உணர்ச்சி மயப்படு;த்தும் வழமையான அரசியலிருந்து நம்மை வழி நடாத்துவோர் மாற வேண்டுமா? நிற்க!
அனேகமாக எல்லா மதங்களும் இந்த மரணம் பற்றியே அதிகம் பேசியுள்ளன. தேவபாலனிற்கும் மரணத்தின் அழைப்பிலிருந்து விதிவிலக்கில்லை என்பதையே இயேசுபிரானின் உயிர்த்தெழுமையும் காட்டுகிறது. இந்து சமயம், மட்டுமல்ல, அனைத்துச் சமயங்களுமே மரணம் பற்றிப் பேசுகின்றன
சைவர்கள் திருநீறு பூசுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலொன்று பிறந்தோம் என்ற முகவுரையுடன் தொடங்கும் நம் வாழ்க்கை என்றோ ஒரு நாள் மரணம் என்ற முடிவுரையுடன் நிறைவடையப் போகிறது என்பதை தினமும் நமக்கு நினைவூட்டவே. இதனால் நமது ஆணவமும், தன் முனைப்பும் நிறைந்த கருமங்கள் குறைகின்றன அல்லது முற்றாகத் தவிர்க்கப்படுகின்றன. இருந்தாலும் இதை அடிக்கடி நாம் மறவாதிருக்கவே தினமும் திருநீறு பூசுதலை நம் சமயம் வலியுறுத்துகிறது.
திருடனாயப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றான் பட்டுக் கோட்டை. இவ்வாறே மானிடரின் அடாவடித் தனங்களும் இயேசு குறிப்பிட்டதைப் போல் மனந் திருந்துதலால் மட்டுமே மட்டுப்படுத்த வல்லதாக உள்ளது.
இந்த மனந் திரும்புதலையும், வாழ்வின் நிலையாமையும் இடித்துரைப்பது மரணம் ஒன்றே. ஆகவே மரணத்தைப் பற்றிய நினைப்பு எந்த மனிதனையும் பக்குவப்படுத்த வல்லது. அதாவது, அல்லாவின் சமயம் அடங்கலாக எல்லாச் சமயங்களும் இந்த மரணம் பற்றி சற்று அதிகமாகவே பேசியுள்ளன.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் மனிதா! மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும்....... என்றே கீதை போதனையும் உரைக்கிறது. இதைத் தான் எதையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று விஞ்ஞானமும் கூறுகிறதோ என்னமோ.
அனுபவம் மட்டுமல்ல, மரணம் நிச்சயம் ஏற்படும் என்ற அனுபவ எதிர்பார்ப்பும் கூட நல்லாசானி விடுகிறது. ஆகவே அது அமங்களமானது என்று ஒதுக்காது அது பற்றியும் நாம் அடிக்கடி சிந்திக்க வேண்டும். அது பற்றி பேசுவதும், எழுதுவதும் கூட மன ஆரோக்கியத்தையும, வைராக்கியத்தையும் தர இடமுண்டு. இதனால் போவது எங்கே என்று தெரியாத இந்த மர்மான மரணத்தை புரிய முடியாவிடினும் அது நிச்சயமானதானதால், அடிக்கடி நினைத்துக் கொள்வோம் நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம்.
நாமெல்லாம் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வரழப் போவதாக மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இயற்கையோ வேறு விதமாக நகர்கிறது. நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் காலையில் எழந்து, மரணம் என்ற புள்ளியை நோக்கியே பயணிக்கிறோம் என்ற பார்வை அவசியமானது.
இந்த இடத்தில், பிறந்த தினம் கொண்டாட்டத்திற்கு உரியதா என்றொரு கேள்வியும் மறு புறத்தில் எழுகிறது. இதனாற் தான் கவிஞர்கள் யாவரும், காதலையும், வீரத்தையும் பற்றி மட்டுமல்லாது மரணம் பற்றியும் பாடிக் குவிக்கிறார்கள். இருந்தாலும், பின்னையவர்களில் கண்ணதாசன் அதிகமாகவே பட்டினத்தார் ஆகியிருக்கிறார்.
இயமனின் மரணம் என்னும் அழைப்பிதழ்த் தூது வந்தால், வீடு வரை தான் உறவு...., வீதிவரை மணைவி......, காடு வரை பிள்ளை ......, கடைசி வரை யாரோ....? என்கிறான் கண்ணதாசன். நாங்களும் ஒரு நாள் கொள்ளி வைக்கப்பட்டு எரிந்து சாம்பராவோம் என்ற யதார்த்த்தை இறப்பவர்களே திறந்து காட்டுகிறார்கள்.
மறு புறத்தில் 'படக் படக்' என அடிக்கும் இதயமோ நான் ஒரு நாள் துடிக்க முடியாமல் அடங்கிவிடக் கூடும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் மரண பயத்திற்கு பதிலாக சுடலை ஞானமே பிறக்க வேண்டும். ஆம், மரணம் ஒரு முடிவுப் புள்ளியோ, முடிந்த முடிவோ அல்ல. மறையும் சூரியன் மறுநாள் உதிப்பதைப் போல நாமும் இந்த பழைய உடலைக் களைந்து புதிய உடலாடையை அணியப் போகிறோம்.
கனியாதல் ஒரு வட்டத்தின் முடிவாகும் போது அடுத்த பிறப்பு விதையாகிறது. இதையே கிருஸ்ணரும் 'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவன் உடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவனுடையதாகும்.' என்று உலகின் நியதியை வலியுறுத்துகிறார். ஆக, பகவற் கீதையே மரணத்தைப் பற்றியும் தோற்ற மறைவு மாயை மயக்கங்கள் பற்றியே தெளிவை ஏற்படுத்த முயல்கிறது எனலாம்.
இயேசுவின் மறுபிறப்போ இன்னும் விரைவாக உடனடியாக நடந்ததாகவும் பாரக்கலாம். இப்படி இயேசு புத்தர் போன்றவர்கள் எல்லாம் மரணம் பற்றி கரிசனை கொள்கையில, இந்துக்களின் உருவ வெளிப்பாடுகளில் கிருஸ்ணரே பிறப்பு இறப்பு கோட்பாடுகள் பற்றி அதிகம் ஈடுபாடுள்ளவராக காணப்படுகிறார்.
அண்மையில் காலமான ஒரு நண்பன் இளைஞனாக இருக்கும் போதே அடிக்கடி ' நாராயணா நாராயணா ' என்று அழைத்துக் கொண்டிருப்பார். ஒரே நாம உச்சாடனத்தை பல விதமன தொனிகளில் வெளியிட்டு மாறுபட்ட பொருள்களை அவர் வெளிப்படுத்தி வந்தார்.
கடவுளே ! இப்படி ஆகிவிட்டதே! என்பதற்கு பெருமூச்சுடன் கூடிய ஒரு தொனியில் நாராயணா என்பார். பாவம், இவனைக் காப்பாற்று என்பதற்கு இன்னொரு தொனியில் நாராயணா இவனைக் கொஞ்சம் நீ கவனிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு நாராயணா உண்டு.
ஆனால் அந்த நண்பன் இன்று இல்லை. படியால் விழுந்தவர் எழுந்திருக்காது ஈற்றில் விழுந்தே விட்டார். சத்ய நாராயணா பக்தனான அவர் அவரின் பின்னாலேயே போய்விட்டார். அவரது அஸ்தி இராமேஸ்வரத்தை நோக்கி செல்ல உள்ளது.
இன்னொருவர், கடந்த ஆண்டு இதே நாட்களில், இலண்டன் மாநகரில் கணக்கை முடித்துக் கொண்டார். கணக்காளரான இவரோ தன் கணக்கு இவ்வளவு விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மறைய முன் ஒரு வாரத்திற்கு முன் கனடா வந்த இவர் (மகளின்) கல்யாணத்திற்கு முதலே சொல்லுங்கே நான் வருவேன் என்று விட்டுப் போனவர், விமானத்தால் இறங்கி மருத்துவமனைக்குத் தான் போனார் அவரது உடல் தான் வீடு திரும்பியது. உயிர் திரும்பவே இல்லை.
எங்களைப் போன்ற விவகாரம் பிடித்தவர்கள் தான் இன்னும் இருக்கிறோம். நல்லவர்கள் சீக்கிரமே அழைக்கப்பட்டு விடுகிறார்கள். உள்ளங்களில் நல்லவை தான் இப்போதெல்லாம் விரைவில் உலர்ந்து விடுகின்றன. மரணத்தின் அழைப்பிதழ்கள் அவர்களை விரைந்தே வந்தடைகின்றன போலும்.
அழுது பிறக்க முன்னரே உணரப்படுபவள் தாய். அறிவு வர வர, வளர வளர உணரப்படுபவர் தந்தை. ஞானத்தால் மட்டும் காணக்கூடியவர் கடவுள். இந்த மாதா பிதாக்கள் அழைக்கப்படட காலமாகவும் இது அமைவதால் மரணம் பற்றி பாரக்க வேண்டியேற்படடது.
மரணம் நம் எல்லோரையும் தேடி என்றோ ஒரு நாள் வந்தே தீரும். அப்போது போவது எங்கே என்று தெரியாமல் நாம் போகத்தான் போகிறோம். எனவே மரணம் பற்றிய ஒரு பார்வை அவசியமானது. ஆனால் அந்தப் பார்வை சாமான்ய மானிடப் பார்வையாக அல்லாமல் ஆய்வுப் பார்வையாக அமைய வேண்டும்.
ஓரிரு வாரங்களிற்கு முன், ஊடக சுதந்திர தினத்தையொட்டி பல ஊடகங்களும் பல கருத்துக்களை வெளியிட்டன. நானறிந்த வரையில் யாரும் பத்திரிகைத் தர்மம் பற்றியோ தரம் பற்றியோ பேசவோ எழுதவோ இல்லை. என்னைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் தான் ஒரு ஊடக நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பத்திரிகைத் தர்மமாக இருக்க வேண்டும். தர்மம் என்னும் போது அங்கு தரமும, திருத்தமும் அடங்கி விடுகின்றன.
முள்ளிவாயக்கால் பேரழிவு முடிந்த கையுடன் கனடாவிலிருந்து ஒரு முன்னாள் பொலிஸ்காரர் தாயகம் சென்று விட்டு வந்து, 'அங்கு ஒரு பிரச்சினையுமில்லை ஊர் அமைதியாக இருக்கிறது எங்கட சனம் இப்ப குண்டு வெடிப்பு அது இது எண்டு எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருக்குதுகள்' என்று வானொலி ஒன்றின் வாயிலாக தெரிவித்தார். அதை பல சாமான்ய மக்களும் நம்பினர்.
எனவே இவ்வாறான தப்பான கணிப்புப் பார்வை உள்ளவர்களின் கருத்தக்களை எல்லாம் ஒலி பரப்பலாமா என்ற பார்வை அவசியமானது. கருத்தச் சுதந்திரம் என்ற கோதாவில் நாமான்யர்களின் பாமரப் பார்வைகளை புலம்பெயர் தமிழர் ஊடகங்கள் அனுமதிக்கின்றன....! இல்லை ஊக்குவிக்கின்றன.
ஒரு பொலிஸ்காரரைப் பொறுத்தவரை அமைதி என்பது குழப்பமற்ற புறநிலை தான். அடி தடி சண்டை சச்சரவு செல்லடி குண்டு வெடிப்பு .... இவற்றை அவர் காணாதவரை அந்தப் பிரதேசம் அமைதியாக இருக்கிறது என்பது தான் அவரது அறிவின் முடிவாகும். ஆனால் அந்தத் தவறான கருத்தை ஒலிபரப்புவது முறையா?
ஆம் பேச்சுச் சுதந்திரம் என்பது தான் இன்றைய அநேகமான புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்களின் முடிவாகவும் சாட்டாகவும் இருக்கிறது. யாரும் வந்து தப்புத் தப்பாய் எதையும் சொல்விவிட்டுப் போகலாம். காரணம் அவரிற்கு அவரது கருத்தை சொல்ல சுதந்திரமும் உரிமையும் இருக்கிறதென்ற சமாதானம் தவறுகளை தவறாது ஒலிபரப்புகின்றன.
புலம்பெயர் தமிழர்களின் கருத்துச் சுதந்திரம் வளர்கையில் உண்மைகள் தான் கொல்லப்படுகின்றன. ....!?. இனி நான் வேண்டுமானால் அந்தப் பொலிஸ்காரரிற்கு வெற்றுக் கண்ணிற்கும், நெற்றிக் கண்ணிற்கும் உள்ள வேறுபாட்டை புரிய வைக்க முடியக்கூடும்.
அமைதியாக இருப்பதற்கும், அடக்கப்பட்டு இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரியாதவர்கள் எல்லாம் நிலைவரத்தை சொல்ல அழைக்கும் அல்லது அனுமதிக்கும் பாங்கை தொடர்ந்தால் ஊடக நிகழச்சிகளின் பயன்பாடு பூஜ்ஜியமாகிவிடும்.
ஒருவன் சொர்க்கத்திற்கு போகவேண்டுமானால் அவன் மரணித்தாக வேண்டும். சமாதி அடைவோரின் நோக்கமும் இது தானோ என்னமோ? எந்த விடயத்திலும் நன்மையும் தீமையும் கலந்திருக்கும் என்பதற்கிணங்க மரணத்திலும் நன்மைகள் உள்ளன. தவிர, மதங்கள் யாவும் மரணம் பற்றி சற்று அதிகமாகவே பேசியுள்ளன.
எனவே நாங்கள் சந்தித்தே தீர வேண்டிய இந்த அழையா விருந்தாளி பற்றி சிந்திப்பது ஆரோக்கியமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட. இருந்தாலும் கடமைகள் முடிய முன் இந்த மரணம் வருவதும் , பெற்றாரிருக்க இளையோர் மறைவதும் தாங்கக் கடினமானவையே.
தவிர இந்த இதயங்கள் இறக்கும் போது இதயத்துள் இருக்கும் இதய தெய்வங்களிற்கு என்ன நேரப் போகிறது என்ற கவலை வேறு நமக்கு. ஆனால் மரணமோ உனக்கு புதுவாழ்வு தருகிறேன் என்று விரைந்தே பயணிக்கினற்தா ...... அதுவும் எருமை வாகனத்தில்.... மரணம் ஆய்விற்கு மட்டுமல்ல அறிவிற்கும் ஞானத்திற்கும் உரிய ஒரு அரிய காட்சியாகும்.
ஆனால் அதன் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது


தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:14.38 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.
விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் திட்ட வட்டமாக, பிரதியமைச்சர் முரளிதரனிடம் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten