தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

இனி என்ன செய்யலாம்? தமிழீழத்தின் கதவு திறக்கும்.. உங்களால் முடியும் -உங்களால் மட்டுமே!


தமிழக மாணவர்களுக்கு... தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தீர்மானம் என்பது மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த உச்சபட்ச வெற்றி.
ஆனால் இனி என்ன செய்வது? எந்த போராட்டத்தையும் நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது. ஒரு கட்டத்தில் அது நீர்த்துப் போகும் அபாயம் இருக்கிறது.
எனவே மாணவர்கள் ஒரு காலவரையறையை தீர்மானித்து போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
அதாவது இந்திய மட்டத்தில் அனைத்து மாநில மாணவர்களிடமும் போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்.
ஏனெனில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் நிகழ வேண்டும்.  அதற்கு இந்திய மக்கள் முதல் அதை உணர வேண்டும்.
ஒரு தலைமை குழுவை உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் என குழுவை பிரித்து அவர்கள் அந்தந்த மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு சென்று நடந்த - நடந்து கொண்டிருக்கிற இன அழிப்பு குறித்து விளக்கி "தமிழீழம் ஏன் தனிநாடாக வேண்டும்?" என்று புரிய வைக்க வேண்டும்.
சனல் 4 இன் ஆவணப்படங்களுடன் டப்ளின் தீர்ப்பாயத்தின் நகல், மற்றும் ஐநா நிபுணர்கள் குழு அறிக்கை என்பவற்றை காண்பித்து வேற்று மாநில மாணவர்களின் ஆதரவை பெற வேண்டும்.
அவர்களை பிற்பாடு அந்தந்த மாநில மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் விளக்குமாறு கோர வேண்டும்.
நாம் ஒன்றை கவனமாக விளங்கி கொள்ள வேண்டும். இந்திய அரசோ, இந்திய மக்களோ நமக்கு எதிரி அல்ல. எமது எதிரி இந்திய வெளியுறவுக் கொள்கைதான்.
அது தனிப்பட்ட சிலரின் கைகளுக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
இந்திய அளவில் மக்களினதும் மாணவர்களினதும் மாற்றம் இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றமாக வெளிப்படும்.
இதுவே நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.
இன மொழி வேறுபாடுகளுக்கப்பால் அழிவையும் துயரத்தையும் கண்டு கலங்குவதும் தோழமை கொள்வதும்தான் மனித மனம்.
இந்திய மக்களுக்கு தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட கதையை சொல்லுங்கள். அதில் இந்திய அரசின் பங்கிருந்ததை தெளிவுபடுத்துங்கள்.
எனவே தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனதும் கடமை என்று வலியுறுத்துங்கள்.
அவர்கள் நிச்சயம் நம்மோடு இணைந்து கொள்வார்கள்.
போர்க்குற்றங்களை இனஅழிப்பை விளக்குவதுடன் இந்திய நலனுடன் ஒத்துப்போகும் தமிழீழம் எனும் தேசத்தின் பிராந்திய முக்கியத்துவத்தை, இந்து சமுத்திரத்தில் இந்தியாவிற்கு தமிழீழக் கடல் அரண் தரும் பிராந்திய பாதுகாப்பை, இன்ன பிற முக்கியத்துவங்களை விளக்குங்கள்.
விரைந்து செயற்படுங்கள். இந்திய மக்களை மாற்றுவதனூடாகவே இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்றலாம் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.
சர்வதேச மன்னிப்புச்சபை (அம்னெஸ்டி இன்டர்நசனல்) அண்மையில் இந்திய அளவில் ஒரு கையெழுத்து ஆதரவை திரட்டியது உங்களுக்கு தெரியும்.
எனவே  மன்னிப்புச்சபை  போன்ற மனித உரிமை அமைப்புக்களுடன் சேர்ந்து இந்திய அளவிலுள்ள ஒவ்வொரு கல்விக்கூடங்களுக்கும் செல்லுங்கள் - பேசுங்கள் -விவாதியுங்கள்.
தமிழீழத்தின் கதவு திறக்கும்..
உங்களால் முடியும் -உங்களால் மட்டுமே!
- பரணி கிருஸ்ணரஜனி

Geen opmerkingen:

Een reactie posten