தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

தமிழர்களின் பூர்வீக பூமியை பௌத்தர்களின் வாழிடமாக காட்ட அரசாங்கம் முயற்சி!- சீ. யோகேஸ்வரன்!


மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாக்கத்தினூடாக வலுப்படுத்தப்பட வேண்டும்: சந்திரகாந்தன்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 12:53.27 PM GMT ]
இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையை பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது உரையாற்றும் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
“கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஷ்டித்து வருகின்றது.
அந்தவகையில் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்ந்திருந்தபோதிலும், கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும் கட்சி என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம்.

இலங்கையில் 13 ஆவது அரசியல் திருத்தத்தினூடாக தோற்றம்பெற்ற மாகாண சபை முறையமையானது சிறுபான்மை சமூகத்தினரின் அரசியல் அதிகாரத்தினை ஓரளவிற்காவது வழங்குகின்ற ஓர் அம்சமாகக் காணப்படுகின்றது. இந்த மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாக்கத்தினூடாக வலுப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் திருப்தியடையக் அதிகூடிய குறைந்தபட்ச தீர்வு என்றால் அதிகாரப் பகிர்வு முறைமையின் வாயிலான 13ம் திருத்தத்தின் ஊடான மாகாண சபை முறைமையே தவிர வேறொன்றும் இல்லை. இதனைத்தான் எமது கட்சி இன்று வலுயுறுத்தி நிற்கின்றது.

அத்துடன் இலங்கையில் சில பேரினவாத சிந்தனை கொண்ட கட்சிகள் இன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக இனவாதத்தையோ, மதவாதத்தையோ கக்குகின்ற நிலையினை அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமன்றி குறைந்த பட்ச அதிகாரத்தையாவது வழங்கும் மாகாண சபை முறைமைக்கு வித்திட்ட 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்குரிய கோசங்களை எழுப்பி வருகின்றன.

ஆனால் அவற்றையெல்லாம் அரசு ஜனநாயக முறையில் அணுகுவதுடன், இலங்கையின் சிறுபான்மையினங்களின் அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் இத்தகைய பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது” எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் பூர்வீக பூமியை பௌத்தர்களின் வாழிடமாக காட்ட அரசாங்கம் முயற்சி!- சீ. யோகேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 01:58.42 PM GMT ]
அரசாங்கம் தான் நினைத்தால் எந்த நடவடிக்கையையும் எடுக்கின்ற அளவுக்கு அதிகாரத்தை வைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி தமிழர்களின் பூர்வீக பூமியை பௌத்தர்களின் வாழிடமாக காட்ட முயற்சி செய்து வருகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புதுவருட கலாசார விளையாட்டு விழா கழகத் தலைவர் வி.சுவேந்திரகுமார் தலைமையில் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று பொதுமக்களின் காணியை இராணுவம் விரும்பினால் சுவீகரிக்கலாம் என்ற சுவீகரிப்பு நடவடிக்கையை கொண்டு வந்து, மக்களின் காணியை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்து வருகிறது.
அதுமட்டுமல்ல, தற்போது மின்சாரத்தை இரு மடங்களாக அதிகரித்துள்ளது இந்த அரசாங்கம். நாங்கள் மட்டுமல்ல இந்த நாட்டு மக்கள் எல்லோரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் நிலையை இவ்வரவு தோற்றுவித்துள்ளது.
மின்சார அதிகரிப்பால் இன்னும் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வரவேண்டிய சூழல் இருக்கின்றது.
பொருட்களுக்கு விலையேற்றம், மின்சாரத்திற்கு விலையேற்றம், அதேபோன்று எரிவாயுவுக்கு விலையேற்றம், இவ்வரசாங்கம் எல்லாவற்றையும் விலையேற்றி மக்களை பஞ்சத்தில் கொண்டு வந்திருக்கின்றது.
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாம் இடத்தில் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, தற்போது அதிகபடியான மதுபாவனையிலும் முதலாம் இடத்திலே நமது மாவட்டம் இருக்கின்றது. எனவே எமது மாவட்டம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
எனவே இந்த அரசாங்கம் எங்களை முட்டாள்தனமாக்கி எங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திலே தமிழர்களின் இருப்பை குறைப்பதற்காக இன்று இராணுவத்தை கொண்டு வந்து அவர்களுக்கு வீடமைத்துக் கொடுத்து, அவர்களது குடும்பங்களை கொண்டு வந்து சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அவ்வாறு செய்தால் மாவட்டத்தில் ஒரு சிங்களவரும் பாராளுமன்ற உறுப்பினராகவும், மாகாண சபை உறுப்பினராவும் மாநகர சபை உறுப்பினராகவும், பிரதேச சபை உறுப்பினராகவும் வரலாம். இதுவரை சிங்கள அரசியல் வாதிகளின் தோற்றம் உருவாகாத மாவட்டம் இது.
அண்மையில் இராணுவத்திற்கு காணி வழங்கும் இராஜதந்திர நடவடிக்கையாக மாவட்ட செயலகத்திலே எல்லா இராணுவ உயர் அதிகாரிகளும் கூடி காணி உயர் அதிகாரிகளும் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலே பன்னிரண்டு இடங்களை அவர்கள் தங்களுக்கென்று எடுத்திருக்கின்றார்கள்.
இவர்கள் விரும்பினால் எந்த காணியையும் சுவீகரிக்கலாம், இதற்காக காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரை நியமித்துள்ளார்கள். இவர் நினைத்தால் தனியார் காணியைக் கூட சுவீகரிக்கலாம்.
இந்த நிலமை இந்நாட்டிலே பூர்வீக குடிகளாகிய எங்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு மண்ணில்தான் இந்நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
எனவேதான் நாங்கள் வாய் கட்டியோ, கை கட்டியோ இந்த அரசாங்கத்திற்கு அடிபணிந்து போகமாட்டோம். எங்கள் மக்களுக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக எங்கள் இனத்திற்காக, எங்கள் இனத்தின் விடுதலைக்காக எங்களை அர்ப்பணித்து செயற்படுகின்றோம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் க.தவராசா, முன்னாள் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி சி.சோமசுந்தரம், கழகச் செயலாளர் ச.ஜெயலவன் மற்றும் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Geen opmerkingen:

Een reactie posten