தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு, நான் மட்டுமே அரசு` என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி. - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 3


 [ விகடன் ]
பிரிந்து போகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, மார்க்சீய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிந்தது. அவர்கள் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு உல்டா​வாகச் செயல்படுகிறது.
என தோழர் உ.வாசுகி சொல்கிறார்.
குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அதாவது, ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்து போவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிஸ தேசக் கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்​பத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து, எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது.
மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை என்கிறார். மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல. அப்படி ஆகிவிடவும் கூடாது.
ஆனால், 'மார்க்ஸ் சொன்னதையும், லெனின் வழிகாட்டியதையும் எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே சொல்ல ஆரம்பித்திருப்பது காலக் கொடுமை. எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழலுக்கும் பொருந்தாத ஒரு தத்துவத்தை வைத்துக்கொண்டு ஏன் கட்சி நடத்த வேண்டும்?
ஏகாதிபத்திய இங்கிலாந்துக்கு மார்க்ஸ் சொன்னது இலங்கை அரசுக்குப் பொருந்தாது என்றால், இலங்கை அரசு என்ன சோஷலிஸ அரசா? அதனிடம் ஏகாதி​பத்தியக் குணாம்சங்கள் இல்லையா?
மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறையை வைத்துக்கொண்டு இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு, நான் மட்டுமே அரசு� என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி.
தனக்கு விரோதமாகத் தீர்ப்​பளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதி மீதே அவதூறுகள் கிளப்பி வீட்டுக்கு அனுப்ப அதிகாரம் படைத்த ஆட்சி.
தேர்தல் கமிஷன்கூட சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்படும் ஆட்சி.
சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லும் ஆட்சி.
பௌத்தம் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழவேண்டியது இல்லை என்று சொல்லும் ஆட்சி.
இந்துக் கோயில் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் ஆட்சி.
ஹலால் முத்திரையிடப்பட்ட கறியை வாங்கத் தடைசெய்யும் ஆட்சி.
ராஜபக்சவின் குடும்பத்தினர் மட்டுமே அனைத்து அதிகார மையங்களிலும் இருக்கலாம் என்று அறிவித்த ஆட்சி.
இராணுவத் தளபதியையே கைதுசெய்து சிறைவைத்த ஆட்சி.
இது சிங்கள, பௌத்த, பேரினவாத ஏகாதிபத்தியம் அல்லவா? ஏகாதிபத்தியம் என்றால், பெரிதாக அமெரிக்கா போலத்தான் இருக்க வேண்டுமா? ஈராக், பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் என்று பல நாடுகளில் அத்துமீறி நுழைந்து குண்டு வீசுபவர்களைத்தான் ஏகாதிபத்தியம் என்பார்களா? மாற்று இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக சொந்த தேசத்து மக்கள் மீதே குண்டுபோட்ட அரச பயங்கரவாதிகள், இங்கி​லாந்து ஏகாதிபத்தியத்தைவிட எந்த விதத்தில் குறைச்சல்?
இங்கிலாந்து ஏகாதிபத்தியம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய பச்சைப்படுகொலைகளைப் போல ஈழத்தில் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.
ஜெனரல் டயர் போல கொழும்புவில் 100 பேரை அடையாளம் காட்ட முடியும். என்ன நிலைமை மாறிவிட்டது?
ஏகாதிபத்திய இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிய வேண்டுமா கூடாதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னால், மார்க்ஸுக்கே குழப்பம் இருந்தது.
இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது நடக்க முடியாதது என நான் கருதியது உண்டு. ஆனால், அயர்லாந்தின் பிரிவினைக்குப் பின்னர் ஒரு கூட்டரசு தோன்ற நேர்ந்தாலும், இத்தகைய பிரிவினை தவிர்க்க முடியாதது என இன்று நான் கருதுகிறேன் என்று எங்கெல்ஸுக்கு மார்க்ஸ் (1867- நவம்பர் 2) கடிதம் எழுதினார்.
உலகப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை வலியுறுத்துவதையே தனது வாழ்க்கை லட்சியமாகக்கொண்ட மார்க்ஸ், இன்னோர் அதிர்ச்சிக்குரிய ஆலோசனையையும் சொன்னார்.
இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்தால், இங்கிலாந்து பாட்டாளிகள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டபோது, 'அயர்லாந்துடன் இங்கிலாந்துகொண்டிருக்கிற ஒன்றியத்தைக் கலைத்துவிட வேண்டியதுதான்� என்று தீர்ப்பளித்​தார். ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் என்று பிரித்துப் பார்த்தார்.
ஒடுக்கும் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள், அயர்லாந்து நாட்டை தேசிய ஒடுக்குதலில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்று மார்க்ஸ் முதலில் நம்பியது உண்டு, சிங்களப் பாட்டாளிகள், தமிழ்ப் பாட்டாளிகளுக்காகப் பேசுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நம்புவதைப் போல. ஆனால் அது சாத்தியமில்லை என்று மார்க்ஸின் சிந்தனை அப்போதே முடிவுக்கு வந்தது. இதை 150 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் நகமும் முகமும் கூர்மை அடைந்த பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர மறுக்கிறது.
அயர்லாந்து விவகாரத்தில் மார்க்ஸ் எடுத்த நிலைப்பாட்டையே சோவியத் நாட்டில் லெனின் அமல்படுத்தினார். இதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருந்தாது என்கிறது. 'சோஷலிஸத் தேசக் கட்டமைப்பில் அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்​பத்தில் லெனின் சொன்னதை நகலெடுக்கக் கூடாது� '' என்கிறார் வாசுகி.
பிரிந்துபோகும் தன்மை​யுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது சோஷலிஸ அரசுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று லெனின் சொல்லவில்லை. 'சோஷலிஸத்தை அடைகிற வரையில் அந்தத் தேசிய இனச்சிக்கலை ஒதுக்கிவைக்காமல்...� என்று அறிவுறுத்தியவர் லெனின்.
சோஷலிஸக் கூட்டமைப்பிலேயே தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டுமானால், பேரினவாதக் கட்டமைப்பில் அதனுடைய அவசியம் இன்னும் முக்கியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி உணரத் தவறுவது ஏன்?
தேசிய இனச் சிக்கல் 19-ம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எழுந்தது. அது கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியது. 1886-ம் ஆண்டு இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது பேராயம் லண்டனில் நடந்தபோது, தேசிய இனங்களின் தனிநாட்டு உரிமை தொடர்பான தீர்மானம் வந்தது. ''தேசிய இனங்கள் எல்லாவற்றுக்கும் தனி நாட்டுரிமை உண்டு.
மேலும், எல்லா நாட்டு தொழிலாளர்களும் சேர்ந்து உலகளவில் வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும்'' என்று தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் தேசிய இனப் பிரச்சினை விவாதம் ஆனது. வர்க்க முரண்பாடுகளை வென்றெடுக்க நினைக்கும் மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இனப் பிரச்னை விவாதப் பொருளானது. அப்போது துணிச்சலாக தேசிய இனப் பிரச்சினையையும், பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமையையும் பேசியவர் லெனின்.
ஒன்றுபட்ட சோவியத் புரட்சியை முன்னெடுத்துக்கொண்டு இருந்த லெனின், அங்கு பெரும்பான்மை இனமான மாருசிய தேசிய இனத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையேபடாமல் தன் கருத்தைச் சொன்னார்.
நம்முடைய சொந்த மாருசிய தேசிய இனத்தைச் சேர்ந்த சொந்த நாட்டவர்கள் கொண்டிருக்கிற தேசிய காழ்ப்புகளை எங்கே புண்படுத்திவிடுவோமோ என்னும் அச்சத்தைக் கருதி இந்த (தனிநாட்டு) உரிமையை முன்வைக்க நாம் மறக்கவோ தயங்கவோ செய்வோமாயின், 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்� என்னும் அறைகூவல் அப்போது உதட்டளவிலான வெட்கங்கெட்ட பொய்யாக மட்டுமே இருக்கும்'' என்று எச்சரித்திருக்கிறார் லெனின்.
தேசிய இன உணர்ச்சி என்பது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சி, சோஷலிஸத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சி என்று லெனின் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் அவரே, ''ஒரு தனித் தேசிய அரசை அமைத்துக்கொள்கிற உரிமையாகிய பிரிந்துபோகிற உரிமையைவிட மிகப் பெரிய உரிமை ஏதேனும் ஒரு தேசிய இனத்துக்கு உண்டா?'' என்று கேட்கும் அளவுக்குப் போனார்.
ஸ்வீடனில் இருந்து நார்வே தனி நாடு ஆவதை (1905-ல்) ஆதரித்தார். பிரியலாமா வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மைத் தீர்ப்புப்படி நார்வே பிரிந்தது. 'நாடுகள் பிரிந்து​போவதை, நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் தீர்த்துவைக்கப்பட்ட ஒரே வழியில் மட்டும் தீர்த்து வைக்க வேண்டும்� என்றும் லெனின் எழுதினார்.
ஸ்வீடனுக்குள் இருந்தாலும், தனக்கெனத் தனியாக நாடாளுமன்றம் வைத்துக்கொள்ளும் உரிமை நார்வேக்கு இருந்தது. 'ஸ்வீடன் மன்னர் எங்கள் மன்னர் ஆக மாட்டார்� என்று தீர்மானம் போடும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக நார்வே நாட்டவர்கள் இருந்தனர்.
ஆனால், ஈழத்தில் பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதியை ஒன்றிணைத்து ஒரு மாகாணம் ஆக்குவதற்கோ, அந்தப் பகுதியில் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கோ, சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை. யாரெல்லாம் நிலம் வைத்திருந்தார்களோ, அவர்களிடம் இருந்து அவையெல்லாம் பறிக்கப்பட்டு, தமிழர் நிலங்கள் அனைத்தும் சிங்களவருக்கு, இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மை இனத்தை வஞ்சத்தோடு வறுத்தெடுக்கிறது. வாழவிடாமல் தடுக்கிறது.
அயர்லாந்து மக்களுக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. அழிவதா அல்லது தனி நாடா?'' என்று கேட்டு உண்மையை உடைத்துச் சொன்னார் மார்க்ஸ்.
தமிழர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சரணடைவது அல்லது கடலுக்குள் விழுந்து சாவது என்று அறிவித்தார் சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
மார்க்ஸ் படம் பிடித்த அதே குணாம்சம்தான் 150 ஆண்டுகள் கழித்து பொன்சேகாவிடம் வெளிப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் மாறவில்லை. மார்க்சிஸ்ட்டுகள் மாறிப் போனார்கள்.
அத்தகைய சூழல் உருவாகிவிடக் கூடாது!
24.4.2013 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இலங்கையைச் சேர்ந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலியின் பேட்டி வெளியானது. அந்தப் பேட்டி தொடர்பாக அவர் இப்போது, நமக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் இலங்கையில் முஸ்லிம்கள் நிலையைச் சொல்லிவந்த நான், 'எங்களை ஒருவித​மான நெருக்கடிக்குத் தள்ளினால், அப்போது முஸ்லிம்களும் ஆயுதங்களைத் தூக்க வேண்டிய ஒரு துரதிஷ்டவசமான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி விடுமோ என்ற ஒரு அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில்தான் நான் பேட்டியளித்தேன்.
அத்தகைய சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய எண்ணம் என்று தெரிவித்திருக்கிறார்.

Geen opmerkingen:

Een reactie posten