[ திங்கட்கிழமை, 06 மே 2013, 12:09.30 PM GMT ]
அசாத் சாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள 18 முறைப்பாடுகள் விசாரணை செய்து முடிக்கப்பட்டதும் அவர் விடுதலை செய்யப்படுவார் என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுக்குச் சென்று இலங்கைக்கு எதிராக விகடன் ஊடகத்திற்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அசாத் சாலியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு நாடு தொடர்பில் இன்னொரு நாட்டிற்குச் சென்று கருத்து வெளியிடுவது நியாயமான ஒன்று அல்ல எனவும் முஸ்லிம்கள் நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்து வெளியிடுவர் என்று எங்கும் சொல்லப்படவில்லை எனவும் ஹுலுகல்ல தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் அசாத் சாலி வெளியிட்டுள்ள அந்த கருத்து உள்ளிட்ட 18 முறைப்பாடுகள் தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அசாத் சாலிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதெனவும் லக்ஷமன் ஹுலுகல்ல குறிப்பிட்டார்.
2ம் இணைப்பு
அசாத் சாலி உண்ணா நோன்பு போராட்டத்தை கைவிடவில்லை': மகள் அமீனா
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டு விட்டதாக அரசாங்கம் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் துணை மேயருமான அசாத் சாலி, கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டது முதல் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
மருத்துவமனையில் உள்ள அவர், நேற்று மாலைமுதல் உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக இலங்கை பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அசாத் சாலியின் உடல்நிலை இன்றும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் இன்னும் உண்ணாநோன்பைக் கைவிடவில்லை என்றும் அவரது மகள் அமீனா சாலி பிபிசியிடம் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
ஜூனியர் விகடன் பேட்டி உட்பட 18 குற்றச்சாட்டுக்கள்
இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
தமிழகத்தில் சென்னையில் வைத்து ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டி மூலம், அசாத் சாலி 'இன்னொரு நாட்டில் வைத்து இலங்கைக்கு எதிராக கருத்துவெளியிட்டுள்ளதாகவும்' அதனால் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அவர் அவதூறு விளைவித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகமத்திய நிலையத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
அதேவேளை, அசாத் சாலிக்கு எதிரான 18 குற்றச்சாட்டுக்களில் நிதி மோசடி பற்றிய குற்றச்சாட்டு தொடர்பிலும் சிஐடி குற்றத்தடுப்பு புலன்விசாரணையாளர்கள் விசாரித்துவருவதாக ஹுலுகல்ல கூறினார்.
இதேவேளை, இலங்கையில் பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்தவாத அமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில், அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த அமைப்பினர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமளவுக்கு எதனையும் செய்யவில்லை என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ஜூனியர் விகடன் இதழுக்கு அசாத் சாலி அளித்த பேட்டியில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமளவுக்கு எதுவும் கூறப்படவில்லை என்று அசாத் சாலியின் விடுதலைக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், அசாத் சாலி தனது பேட்டி தவறுதலாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாக அனுப்பியுள்ள திருத்தச் செய்திக்குறிப்பும் ஜூனியர் விகடன் சஞ்சிகை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அசாத் சாலி அவரது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிஸன் சமூக வலைத்தளமான டிவிட்டர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்.
கொலைக் குற்றவாளியான இலங்கை பணிப்பெண்ணுக்கு சிங்கப்பூரில் 10 வருட சிறை
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 12:33.00 PM GMT ]
2009 ஆண்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போதே இந்தியரான தனது காதலனை இலங்கைப் பணிப்பெண் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோடி தமது காதல் விவகாரத்தை 2007ம் ஆண்டில் தொடங்கியுள்ளனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்திய பிரஜையான முருகையன் 1998ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றார்.
இலங்கையைச் சேர்ந்த திருமணமான புவனேஸ்வரி தர்மலிங்கம் 2004ம் ஆண்டு சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததுடன் 2009ம் ஆண்டளவில் மனக்கசப்பு வர ஆரம்பித்து பின்னர் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் 34 வயதான புவனேஸ்வரி தர்மலிங்கம் தனது காதலனான 32 வயதான முருகையன் செல்வத்தின் தலையில் பாரம் தூக்கும் பயிற்சியிக்கு பயன்படுத்தப்படும் சுமார் 6.5 கிலோகிராம் நிறைகொண்ட கருவியால் அடித்துள்ளார்.
இதனால் முருகையன் செல்வம் இறந்துள்ளார். முருகையன் மீது தான் தாக்குதல் நடத்தியதை புவனேஸ்வரி ஒப்புக்கொண்டுள்ளார்.
தனக்கு இந்தியாவில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு பணம் எடுப்பதற்காக புவனேஸ்வரியின் காசோலை புத்தகத்தை தருமாறு கேட்டுள்ளார்.
அதனை கொடுப்பதற்கு புவனேஸ்வரி மறுத்ததையடுத்தே இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு பின்னர் அது கொலையில் முடிந்துள்ளது.
புவனேஸ்வரிக்கு இலங்கையில் கணவனும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்று புவனேஸ்வரிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10வருடங்கள் சிறைத்தண்டனை வித்து தீர்ப்பளித்தது.
Geen opmerkingen:
Een reactie posten