தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

தமிழ் மக்களின் மனதைச் சிதைக்கும் ஆனையிறவு டாங்கியை அகற்றுக! போர் நினைவுச் சின்னம் வேண்டாம் என்கிறார் தம்பர அமில தேரர்!


போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் காயங்களை ஆற்றாது, நான்கு வருடங்களின் பின்னரும் அதை நினைவுபடுத்தும் வகையில் ஞாபகச் சின்னங்களை அரசு நிறுவுவது பெரும் தவறான செயலாகும். இது தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தினூடாக இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இடைவேளை அல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்குள்தான் உலகம் இருக்கின்றது என்ற நிலைப்பாட்டில் அரசு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினூடாக சர்வதேசத்திலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகத்துக்குள்தான் இலங்கை இருக்கின்றது என்பதை மறந்து, இலங்கைக்குள்தான் உலகம் இருக்கின்றது என்று அரசு நினைக்கின்றது.
குத்துச்சண்டை வீரர் மைக்டைசன், பாதாளக் கொள்ளையரான ஜுலம்பிட்டிய அமரே ஆகியோர் போன்று சர்வதேசத்துடன் செயற்பட முடியாது.
சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து செயற்பட புத்திக்கூர்மை வேண்டும். ஆனால் அது இந்த அரசிடம் இல்லை.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய 2014ம் ஆண்டுவரை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இடைவேளை அல்ல. அது ஒரு "கமா'தான் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு அரசு செயற்படவேண்டும்.
போர்க்கள ஆடையை அரசு கழற்ற வேண்டும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ளன.
அதனால் யுத்த காலத்தில் அரசு அணிந்திருந்த ஆடையை, கொண்டிருந்த மனநிலையை இப்போது கொண்டிருக்கக் கூடாது.
எனவே, அந்த போர்க் கள ஆடையை அரசு உடனடியாகக் கழற்றிவிட வேண்டும்.
போர்க் காலத்தில் புலிகள் பயன்படுத்திய போர் டாங்கியொன்றை ஆனையிறவில் அரசு காட்சிப்படுத்தியுள்ளது. இது உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.
ஏனெனில், அதைப் பார்க்கும்போது தமிழர்கள் மனதில் ஒரு தாக்கம் ஏற்படும். போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்த பின்னரும், அதனை மறுபடியும் நினைவுபடுத்தும் வகையில் ஞாபகச் சின்னங்களை அமைப்பது தவறு.


Geen opmerkingen:

Een reactie posten