பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார்.
பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மத வழிபாட்டு மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாசாரத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது திருத்தவோ யாரையும் அனுமதிக்க கூடாது.
எமது மதத்தையும், கலாசாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் பெருமகனுக்கும் உரிய கடமையாகும்.
இந்த நாட்டில் சிறுபான்மை என்றொரு சமூகம் இருக்க கூடாது. அப்படி இருந்தாலும் அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் மொழியையும், மதத்தையும், கலாசாரத்தையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒருவித விதாண்டா வாதத்துடன் அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊட்டி வளர்க்க நினைக்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை அரசாங்கம் உடனடியாக தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையேல் அன்று தொட்டு இன்றுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட முஸ்லிம் சமூகம் தங்களையும் சமூகத்தையும் மதத்தையும் பாதுகாத்துகொள்ள வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தோன்றலாம்.
ஒரு நாடு ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக இருக்கும் பட்சத்தில் அங்கு வாழும் சிறுபான்மை சமூகம் மத, மொழி சுதந்திரம் உரிமையுடன் வாழ வேண்டும். அவ்வாறான நேரத்தில் அந்நாட்டின் மதிப்பும் அந்தஸ்தும் சர்வதேச மட்டத்தில் மதிக்கப்பபடும். உயர்வடையும், ஆனால் இங்கு நிலைமை வேறாக இருக்கிறது.
ஏற்கனவே மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்றெல்லாம் சர்வதேச மனித உரிமை சபையாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் குற்றம் சுமத்தப்பட்டு திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கள இனவாத அமைப்புகளும். குழுக்களும் அறிக்கைகள் விடுவதும். பேரணிகள் நடத்தி தாக்குதல்கள் நடத்துவதும் நாட்டிக் இறையாண்மையை பாதிக்கும் என்பதால் கண்டிக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten