நில ஆக்கிரமிப்பு, மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலி,வடக்கு பிரதேச சபை தமது முழுமையான ஆதரவினை வழங்கும் என சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இன்று வலி. வடக்கில் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான போராட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தமது ஆதரவினை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், போராட்டத்தில் தாம் பங்குகொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மிக நீண்டகாலம் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களுடைய வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் இடப்பெயர்வையும், அவல வாழ்வையும் தொடர்ந்தும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
இது போதாதென்று மக்களுடைய நிலங்களை மிகவும் கபடத்தனமான முறையில் ஆக்கிரமித்து அந்த நிலங்களில் படையினருக்கான முகாம்களை அமைக்கும் செயற்பாட்டினை நாம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
எனவே மக்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். அந்த வகையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புதன் கிழமை யாழ்.மாவ ட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு நாம் எமது மக்களுக்காக ஆதரவினை தெரிவிக்க விரும்புவதுடன், அந்தப் போராட்டத்தில் எங்கள் பங்களிப்பையும் வழங்குவோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten