தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

13வது திருத்தச் சட்டமும், இடைக்கால நிலைமாற்று நிர்வாகமும்!- ச. வி. கிருபாகரன் !


புதிய விடயங்களை முன்மொழியும், அரசியல்வாதிகள் முதலில், மக்களுக்கு அவைபற்றிய தகவல்கள் விளக்கங்களை கொடுப்பதை, நாம் வாழும் ஜனநாயாக நாடுகளில் காண்கின்றோம்.
அரசியல்வாதிகள் தமது சுயநலங்களுக்காக பேசும் விடயங்கள் என்ன? அவற்றின் வரைவிலக்கணக்கம் என்ன? அவை எப்படியாக, எந்தச் சந்தர்ப்பங்களில் காணப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்றவற்றை ஊதாரணங்களுடன் மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். இவை மேற்குநாடுகளில் அரசியல் வாதிகள் மக்களிடையே நடைமுறையில் காணப்படும் சிறப்பு அம்சமாகும்.
இன்று நொந்து தொந்து, தொடர்ந்து பாரிய அபாயங்களை சந்தித்து வரும் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழீழ மக்கள், எம்மை இனிமேல் யார் கவனிப்பார்களென்று தினமும் ஏக்கத்துடன் வாழ்வை கழிக்கும் நேரம் பார்த்து, தவிச்ச முயல் அடிப்பதுபோல் - தேசியம், சுயநிர்ணயம், இடைகால நிலைமாற்று நிர்வாகம், 13வது திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்புவென நாளுக்கு நாள் பல புதிய விடயங்களை, குழப்பத்தில் உள்ள அரசியல்வாதிகளினால் ஊளையிடப்படுவதை காண்கிறோம்.
முள்ளிவாய்க்கால் முடிந்ததும், எல்லாமே முடிந்து விட்டதுவென ஏக்கம் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் பலர் மீண்டும் தலைதூக்கியுள்ளனர். அரசியலில் இவற்றை சந்தர்ப்பவாதக் கொள்கை என்பார்கள். அரசியலை பொறுத்தவரையில் என்ன விடயமானாலும் சரித்திரத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இவற்றை செய்ய தவறுவோமேயானால், அது பித்தலாட்டல் அரசியலாகும்.
13வது திருத்தச் சட்டம்
1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி, சிறிலங்காவின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவிற்கும், இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தந்தை நடைமுறைப்படுத்துவதற்காக, சிறிலங்காவின் அரசியல் யாப்பின் 13வது சாரம் திருத்தியமைக்கபட்டது. இவ் 13 திருத்தச் சட்டமூலம், இலங்கை-இந்திய ஒப்பந்தந்தில் கூறப்பட்டது போல் சகல மாகாணங்களிற்கும் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, சில அதிகாரங்களை உள்ளடக்கிய மாகாண சபைகள, முதலமைச்சரினால் நிர்வகிக்கப்படவேண்டும்.
இந்த அடிப்படையில், ஜனாதிபதியில் விசேட அங்கீகாரத்துடன் தமிழர்களது தாயக பூமியான வடக்கு-கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டு, 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி, அங்கு ஊழல்கள் நிறைந்த தேர்தல் ஓன்று நடாத்தப்பட்டு, வடக்கு கிழக்கு இணைந்த ஓர் நிர்வாகம் நிர்வகிக்கப்பட்டது.
ஆனால் இவ் தேர்தலில் பங்கு கொண்டவர்கள், இந்தியப் படையின் உதவியுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் கொன்று குவிப்பதிலும், பழிவாங்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்களே தவிர, வடக்கு கிழக்கு வாழ்மக்களின் ஆதரவை பெறவோ, அல்லது பௌத்த சிங்கள சிறிலங்கா அரசிற்கு சவாலாகவோ, இணையாகவோ, வடக்கு கிழக்கு மாகாணசபையை வளர்த்து எடுப்பதற்கு முன்வரவில்லை. இதனால் இலங்கை-இந்திய ஒப்பந்தம், இந்திய இராணுவம் என்பவற்றை தமிழீழ மக்கள் ஓர் கசப்பான விடயமாக பார்த்தார்கள்.
1987ல் தமிழீழ விடுதலை புலிகள் தவிர்ந்த மற்றைய ஆயுதக் குழுக்கள் யாவும் இலங்கை-இந்திய ஒப்பந்தந்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் பல தரப்பட்ட இந்திய அழுத்தங்களினால், இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சில நிபந்தனையின் அடிப்படையில்  தமது ஆயுத ஒப்படைப்பிற்கு உடன்பட்டனர்.
இதேவேளை, சிறிலங்கா அரசு இவ் ஒப்பந்தத்தை ஒருபொழுதும் நடைமுறைப்படுத்த முன்வராது என்பதை, 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி, சுதுமலையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பொதுக் கூட்டத்தில், இதுபற்றி பகிரங்கமாக அறிவித்தனர்.
அவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளது தலைவர் திரு. பிரபாகரன் கூறியதாவது: (சுருக்கம்)
இவ் ஒப்பந்த்ததை இனத்துவேசம் கொண்ட சிங்கள அரசு ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதை நான் இந்திப் பிரதமருக்கு எடுத்து கூறியிருந்தேன்.... இந்தியப் பிரதமர் சில உறுதிகளை எனக்கு அளித்துள்ளார்..... இந்தியப் பிரதமரின் நேர்மையிலும் அவரினால் கொடுக்கப்பட்ட உறுதிமொழியிலும் எனக்கு நம்பிக்கை உண்டு..... இந்தியாவின் முயற்சியுடன் ஒத்துப்போவதை தவிர எமக்கு வேறுவழியில்லை..... எமது ஆயுதங்களை எம்மிடமிருந்து ஏற்றுக்கொள்வதன் மூலம், தமீழீழ மக்களது பாதுகாப்பை, எம்மிடமிருந்து இந்தியா ஏற்றுக்கொள்கிறது.... இவ் ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென நான் எண்ணவில்லை..... சிங்கள இனவாத அரசு இவ் ஒப்பந்தந்தை அலட்சியம் செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை.... சுதந்திர தமிழீழத்திற்காக நான் தொடர்ந்து போராடுவேன்..... போராட்ட வழிகள் மாறாலாம், ஆனால் இலட்சியம் ஒருபொழுதும் மாறாது.” (இவ்வுரையை முழுதாக பார்க்க விரும்பியோர், சுதுமலை பிரகடனத்தை வாசிக்கவும்)
அவ்வேளையில், இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கிற்கு வருகை தந்து இந்திய இராணுவம், இவர்கள் மீண்டும் இந்தியா செல்லும்வரை, செய்தவற்றை நடந்தவற்றை, யாவரும் நான்கு அறிவார்கள். சமாதான படையென்ற பெயருடன் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து, இந்தியாவிற்கு பல அவமானங்களை தேடிக்கொடுத்துவிட்டு, இறுதியில் பொதுமக்களை கொல்லும் ஓர் இனஅழிப்பு இராணுவம் என்ற பெயருடன் திரும்பியது.
அவ்வேளையில், பெரும்பான்மையான மக்கள் ஆதரவை பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தொடர்ந்தும் ஆயுத ரீதியாக போராடக்கூடிய வலுவை பெற்றிருந்ததனால், அவர்கள் தொடர்ந்து இரு சகாப்தங்களுக்கு மேல் பெரும்பான்மையான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சகல கட்டுமானங்களும் அடங்கிய ஓர் நிர்வாக அலகை (de-facto) மிகவும் திறம்பட நடத்தி உலகையே வியக்கவைத்தார்கள்.
புலிகளை அழிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது
தமிழீழ மக்களது தலைவிதி, சாத்தான்களின் திட்டங்களுக்கு அடங்க, பல நிலைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, இன்று நாம் அனைவருமே அனாதரவாக உள்ளோம். புலம் பெயர்வாழ் தமிழர்களாகிய எமக்கு சில குறைகள் இருக்கலாம். ஆனால் நாம் எமது தினசரி வாழ்க்கையில் பீதியுடன் வாழவில்லை. அப்படியாக எம்மை யாரும் அழித்தாலும், எமக்கு பின்னிற்கும் ஆயிரம் புலம்பெயர்வாழ் உறவுகள் எமது சேவையை தொடர்வார்கள்.
ஆனால் தழிழர் என்ற அடையாளத்துடன் பிறந்த ஓரே காரணத்திற்காக, வடக்கு கிழக்கில் வாழும் பாலகர், பிள்ளைகள், பெண்கள் உட்பட இன்று சகலரும் தமது உயிரை பணயம் வைத்து, எந்தநேரம் என்ன நடக்குமோ என்ற பீதியில் வாழ்வதை, தெரியாதவர் அறியாதவர் யாரும் இருக்க முடியாது.
இதை மறைமுகமாக சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைநின்று, தமது சுயநலத்திற்காக, வடக்கு கிழக்கு வாழ் மக்களை குழப்ப முடியாவிடிலும், சிலர் யாழ்வளை குடாவிலிருந்து, புலம்பெயர்வாழ் மக்களை வேதாந்தங்கள் பேசி, குழப்புவது புரியாத புதிராகவுள்ளது. இவர்களது ஒவ்வொரு செயற்பாடுகளும், சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு மறைமுகமாக துணையாகவுள்ளது. இவற்றில் சில:
சிறிலங்கா அரசு ஐ. நா. வின் கண்டனத் தீர்மானம், 13வது திருத்தச் சட்டம், இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை எதிர்க்கிறது, இவர்களும் எதிர்க்கிறார்கள். சிறிலங்கா அரசு தினமும் தமக்கு எதிரானவர்களை விசாரிப்பதும் தொல்லை கொடுப்பதுமாகவுள்ளது. ஆனால் இவர்கள் மீது சிறிலங்கா அரசு எந்தவித விசாரணை நடத்துவதாக நாம் அறியவில்லை. இதற்கு முக்கிய காரணம், மிக அண்மைக் காலமாக, சிறிலங்கா அரசு இவர்களது செயற்பாடுகள், அறிக்கைகள், உரைகளை சர்வதேசத்திற்கு காண்பித்தே, அரசியல் தீர்வை அடைவதற்கு, தமக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக கூறிவருகிறது.
கோமாளித்தனம்
தேசியம், சுயநிர்ணயம் பற்றி பேசியவர்கள், திடீரென கடந்த பெப்ரவரி மாதம் முதல், இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் பற்றி பேசுவது இன்னுமொரு கோமளித்தனமாகவுள்ளது. இவர்கள் முதலில் இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் என்றால் என்ன? இது எவ்வேளையில் சாத்வீகமானது, இதை யாரால் முன் வைக்க முடியும் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களது அரசியல் போக்கிற்கும் - பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவனந்தாவின் அரசியல் போக்கிற்கும் எந்த வித்தியாசங்கைள நாம் இன்று காணமுடியாது. இவர்கள் யாவருமே வடக்கு கிழக்கு வாழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்கள். தினமும் தாம் எண்ணியவற்றை தமிழர் கொள்கையாக பிரகடனப்படுத்துவதுடன், தமிழர் ஒருபொழுதும் ஒற்றுமையாக வாழப்படாது என்ற கொள்கையையும் கொண்டவர்கள்.
கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவனந்தா ஆகியோர் நேரடியாக சிறிலங்கா அரசுடன் ஒத்துப் போபவர்கள். ஆனால் இவர்களோ, நசுக்காகவும் மறைமுகமாகவும் சிறிலங்கா அரசுடன் ஒத்துப் போவதுடன், ஏதோ ஒரு வழியில், இனப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு தன்னும் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படாதவாறு தினமும் குழப்புகிறார்கள்.
வடக்கு கிழக்கிற்கான இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் பற்றி இவர்கள் ஊளையிடுவதையிட்டு, உலகில் முதலில் சந்தோஷப்படுபவர்களானால், அது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கமே. காரணம் வடக்கு கிழக்கு வாழ் மக்களிடையே சிலர், 13வது திருத்தச் சட்டம், அரசின் 13 பிளஸ், இலங்கை இந்திய ஒப்பத்தம் போன்றவற்றை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு பறைசாற்றுவதற்கு இவர்கள் துணைபோகிறார்கள். உண்மையில் இவர்கள் சொந்த அறிவுடன் தான் பேசுகிறார்களா? அல்லது இவர்களை யாரும் பப்பா மரத்தில் ஏற்றிவிட்டு கூத்துப் பார்க்கிறார்களா?
இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் என்றால் என்ன?
இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் என்றால் என்ன? இது எவ்வேளையில் சாத்வீகமானது? இதை யாரால் முன் வைக்க முடியும் என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
1987 இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒர் இடைக்கால நிர்வாகத்தை வழங்க முன்வந்தனர். இச் சந்தர்ப்பம் தமிழீழ விடுதலை புலிகளிற்கு கிடைப்பதற்கு முன்னர், துர்அதிஷ்டவசமாக இந்திய இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்குமிடையில், சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் சதித்திட்டத்திற்கு அமைய, போர் ஆரம்பமாகியது.
1995ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா குமரதுங்கா அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதபலம், மக்கள் பலம் ஆகியவற்றுடன், அவர்கள் நடாத்திய நிர்வாக கட்டமைப்பின் அடிப்படையில், ஓர் இடைக்கால நிர்வாகம் பற்றி பேசினார், ஆனால் அதை ஜனாதிபதி சந்திரிக்கா வழங்க முன்வரவில்லை.
இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் என்பது, ஓர் நிரந்தர தீர்விற்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தற்காலிகமாக உருவாக்கப்படுவதையே இடைக்கால அல்லது நிலைமாற்று நிர்வாகம் என கூறுவார்கள். இது பல தரப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
அன்று ஈரான், பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபொழுது, ஓர் ஜனநாய அரசை, தேர்தல் மூலம் அமைப்பதற்கு முன்னர், இடைக்கால அரசு அல்லது நிர்வாகம் உருவாக்கப்பட்டது.
இதேபோல் இனவிடுதலைப் போராட்டங்கள் நடந்து முடிந்த பின்னர், உள்வாரியான அல்லது வெளிவாரியான சுயநிர்ணயமா என்பதை தீர்மானிப்பதற்கு முன்னர், அன்று எரித்தீரியா, கிழக்கு-தீமூர் பின்னர் கொசோவோ, தென்சூடான், போகன்வில் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டது.
ஓர் நாட்டின் ஆட்சி மாற்றம் ஏற்படும் வேளையில், ஆட்சியை ஏற்போரும், இனவிடுதலைப் போராட்டங்களின் முடிவில், அதற்குரிய அரசாங்கத்தின் அனுமதியுடன், பிணக்குகள் தொடரும் இடங்களில், கூடுதலாக ஐ. நா. பாதுகாப்புச் சபையினாலேயே இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க முடியும்.
விடுதலைப் புலிகளும் இடைக்கால நிர்வாகமும்
இதன் அடிப்படையில், 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி, ஏற்றபட்ட யுத்த நிறுத்த வேளையில், சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருந்த நிலையில் - இரு சகாப்தங்களுக்கு மேல் பெரும்பான்மையான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சகல கட்டுமானங்களும் அடங்கிய ஓர் நிர்வாக அலகை, மிகவும் திறம்பட, பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடனும், ஆயுதபலத்துடனும் நடத்துபவர்கள் என்ற அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகள், 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி, இடைக்கால நிர்வாகத்திற்கான ஓர் திட்டத்தை, அவ்வேளையில் மத்தியஸ்தம் வகித்த நோர்வே அரசு மூலமாக, சிறிலங்கா அரசிற்கு கையளித்தார்கள்.
ஆனால் இவ் இடைக்காலத் தீர்விற்கான திட்டம், சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு வெளியானதாகவோ, அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் நடைபெற வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபொழுதும் முன்நிபந்தனை வைத்ததில்லை.
மிகவும் வேடிக்கையான விடயம் என்னவெனில், தற்பொழுது வடக்கு கிழக்கு வாழ் மக்களிடையே ஓர் நிர்வாக அலகோ, ஆயுதபலமோ இல்லாத நிலை மட்டுமல்லாது, தாயகபூமியில் மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஓர் சிறிய அரசியல் குழு, புலம்பெயர்வாழ் மக்களிடையே எந்த ஒற்றுமையும் காணப்படாத நிலையில், இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் பற்றி பேசுவதும், இதற்கு சில வங்குரோத்து ஊடகங்கள், கோமாளி இணையத்தளங்கள், கற்பனை பந்தி எழுத்தாளர்களும் முக்கியத்துவம் கொடுப்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகும்.
இவர்கள் கூறும் இடைக்கால நிலைமாற்று நிர்வாகம் என்ற விடயத்தை உலகில் சர்வதேச சமுதாயம் ஆதரிக்கிறதா? அல்லது பெறுமதி வாய்ந்த யாரும் ஆதரிக்கிறர்களா? அல்லது ஐ. நா. பாதுகாப்புச் சபை தன்னும் ஆதரிக்கும் நிலையில் எமது நிலை உள்ளதா?
இவ் அணுகுமுறை என்பது, சிறிலங்கா அரசுடன் மறைமுகமாக இணைந்து, மீண்டும் வடக்கு கிழக்கு வாழ் அப்பாவி மக்களை, பாதாள குழியில் தள்ளுவதற்கான நாசூக்கான திட்டமே தவிர, இவை எந்தவகையிலும் நடைமுறைக்கு சாத்வீகமானது அல்ல.
தமிழீழ போராட்டம், போராளிகள், மாவீரர்கள்
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நலன்களில் அக்கறையிருக்கும் ஒவ்வொருவர்களும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மக்கள், மாவீரர்கள், போராளிகளின் கனவு நனவாக வேண்டுமென்று விரும்புபவர்களும், தமிழீழ இலட்சியம், விடுதலைக்கான போராட்டம் ஏதோ ஒரு வழியில் தொடர வேண்டுமென்று விரும்புபவர்களும், இன்று சிறிலங்கா அரசினால் தொடர்ந்து நிராகாரிக்கப்படும் சர்வதேச சமுதாயத்தின் அங்கீகாரம் உள்ள 13வது திருத்தச் சட்டம், ஐ. நா. தீர்மானம் ஆகியவற்றை எந்தவித மாற்றுக் கருத்துமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.
இது தான் இராஜதந்திரம், இது தான் அழிந்துவரும் இனத்தை, நிலத்தை காப்பாற்றுவதற்கான ஆக்கபூர்வமான அணுகுமுறை. இதன் மூலமமே எமது எதிர்காலச் சந்ததியினர் தன்னும் எமது இலட்சியத்தை அடைய முடியும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் மீண்டும் முழுதாக நடைமுறைக்கு கொண்டுவரப்படுமேயானால், மறைமுகமான பல நன்மைகள் உண்டு என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவ் நன்மைகளை அறியாதவர்கள், முதலில் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை மீண்டும் படிக்கவேண்டும். இதன் சாரங்களில், விசேடமாக 1.3, 2.8, 2.9, 2.11 ஆகியவற்றின் தார்ப்பரியங்களை உணரவேண்டும்.
இதன் மூலம், தமிழினம் என்று ஒன்று, அதன் கலை கலாச்சாரங்களுடன் இலங்கைத் தீவில் உள்ளது, இதனது தாயகபூமி வடக்கு கிழக்கு என்பதை நாம் நிலைநாட்ட முடியும். இன்று அப்படியான ஓர் நிலையில் ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் இல்லை என்பதை விதண்டாவாதம் பேசுபவர்கள் புரியவேண்டும்.
தற்பொழுது வடக்கு கிழக்கில் சகல போராளிகளின் ஆயுதங்கள் அற்ற நிலையில் காணப்படுவதால், தடுப்புக்காவலில் உள்ள சகல போராளிகளுக்கும் பொது மன்னிப்பு கொடுத்து, விடுதலை செய்ய வேண்டிய நிலைக்கு, சிறிலங்காவின் ஜனதிபதி இதன் மூலம் தள்ளப்படுவார் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
அத்துடன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும்.
அடுத்து வடக்கு கிழக்கு இணைப்பிற்கான தேர்தலை இந்தியாவின் கண்காணிப்பில் சிறிலங்கா அரசு நடத்த வேண்டும் போன்ற பல விடயங்கள் இவற்றில் அடங்குகின்றனர்.
வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய சிறிலங்கா நீதிமன்றத்தின் அரசியல் அடிப்படையிலான தீர்ப்பை, இந்தியா உட்பட உலக நாடுகள் யாவும் நன்கு அறியும். இது வல்லரசுகளின் பிரச்சினை ஆகையால, நாம் இது பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
ஆகையால், இனிமேல் தன்னும் பொய்கள், ஏமாற்று வித்தைகளை கைவிட்டுவிட்டு, இராஜதந்திரம் தெரிந்தவர்கள், அரசு கூறிய 13வது திருத்தச் சட்டம், 13பிளஸ் ஆகியவற்றை, முதலில் முன்மொழிய வேண்டுமென, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதேவேளை, எந்தவித தீர்வானாலும், அது சர்வதேச நாடுகளின் முன்னிலையில் தீர்மானிக்கப்பட வேண்டுமென நாம் ஒருமித்து கூறவேண்டும். இதன் மூலமே சிறிலங்காவின் கபட நாடகங்களை மீண்டும் எம்மால் சர்வதேசத்திற்கு நிருபிக்க முடியும். தற்போதைய நிலையில், இவ்வழி மூலமே நாம் எமது சுதந்திர சுடர் தொடாந்து எரிவதற்கு வழிவகுக்க முடியும்.
அத்துடன், இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தில் உள்ள நுட்பங்களை ஆராய்ந்து, அவற்றை சிறிலங்கா அரசு நடைமுறைபடுத்த முன்வர வேண்டுமென கூறுவதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கும் எமது மக்களை உடன் பிறவா சகோதரர்களை, தொடர்ந்தும் இன்னல்களுக்கு அனுமதியாது எம்மால் காப்பாற்ற முடியும்.
தற்போதைய நிலையில் இலங்கை இந்திய உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவிற்கு எமக்கும் உண்டு. இந்த அடிப்படையில் சிறிலங்கா அரசு, இலங்கை இந்திய உடன்படிக்கையை தொடர்ந்து உதாசீனம் செய்யுமானால், இந்தியாவினால், ஒருநாள் சிறிலங்கா உலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியுமென்பதை, 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கும் இராஜதந்திரம் தெரியாதவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகையால் தயவு செய்து சிறிலங்கா அரசுடன் இணைந்து, தமிழீழ மக்களின் எதிர்காலத்திற்கு மண் போட்டு, இறுதியில் நீங்களும் சரித்திரத்தில் எட்டப்பர் பட்டத்தை வாங்காதீர்கள்.
உங்கள் அறிவு, ஆற்றல், செயற் திட்டங்கள், சிந்தனைகளை கூர்மை செய்வதற்கு, தலைவர் பிரபாகரனின் 2002ம் ஆண்டு, 2008ம் மாவீரர்தின உரைகளை மீண்டும் மிகவும் கவனமாக படியுங்கள். இவை ஜனநாயம், சுதந்திரம், மனித உரிமை, யதார்த்தம், உலக நடப்பு, நடைமுறை சாத்வீகம் ஆகியவற்றின் அடிப்படையில் கூறப்பட்டவை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 23வது கூட்டத்தொடர், எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி முதல் யூன் 14ம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24வது கூட்டத் தொடர் செப்டம்பர் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெறும். சிறிலங்கா விடயத்தில் 24வது கூட்;டத் தொடரே முக்கியமானது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும், 25வது கூட்;டத் தொடர் மிகமுக்கியமானது என்பதை அறியத்தருகிறேன்.

Geen opmerkingen:

Een reactie posten