மிதிவண்டிகளைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம் ஒன்று சிறிலங்காவில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.
பயர் பொக்ஸ் மிதிவண்டி நிறுவனமே இந்த முடிவை எடுத்துள்ளது.
சிறிலங்காவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை பங்களாதேசில் அமைக்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்துடன் சிறிலங்காவில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளதாக பயர் பொக்ஸ் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் சிவ் இந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பயர் பொக்ஸ் நிறுவனத்தின் சிறிலங்கா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மிதிவண்டிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடுத்து, சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அளித்து வந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது.
இதனால், தமது நிறுவனம் மேலதிகமாக 6.5 வீத தீர்வையை செலுத்த வேண்டியுள்ளதாக பயர் பொக்ஸ் நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் சிவ் இந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் சிறிலங்கா தொழிற்சாலையில் மாதம்தோறும் 25 ஆயிரம் மிதிவண்டிகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்படும் மூன்று வகையான மிதிவண்டிகள், இந்திய ரூபாவில் 28,670 தொடக்கம் 38,640 ரூபா வரை பெறுமதியானவை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நீக்கப்பட்டதால், சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மூடிவருவது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten