தமிழீழம் என்பது இன்னமும் அடக்கப்பட்டவர்களாக, அவலங்கள் சுமப்பவர்களாக ஈழத்தில் வாழும் எஞ்சிய தமிழர்களது விடுதலைக்கானது மட்டுமல்ல, அதுவே புலம்பெயர் தமிழர்களதும் உயிர் வேட்கை! அதுவே உலகத் தமிழாகளது தமிழ்த் தேசிய சிந்தனை. அதுவே மனிதத்துவம் மிக்க மானுடர்களின் மனச்சாட்சி...
முள்ளிவாய்க்கால் பெருந் துயரில் ஈழ மண் எரியூட்டப்பட்ட போது, புலம்பெயர் தமிழர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். அது மட்டுமாக இல்லாமலே எங்கள் ஈகப் பேரொளி முருகதாசன் உடல் பற்றி எரிந்தே உலக மன்றத்தில் நீதி கேட்டான். இப்போதும் புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழீழத்தின் அவலங்கள் கரைகடந்து சென்ற போது... முத்துக்குமாரன் தன்னையே நெருப்பாக்கித் தமிழகத்திற்கு உயிர் மூச்சுக் கொடுத்தான். அவனோடு போனதா அந்த இயலாமையின் அக்கினித் தாண்டவம்... அது செங்கொடிவரை சேர்ந்தே செத்துப்போன காந்தீயத்தைத் தட்டி எழுப்பி நீதி கேட்டது.
காலம் இட்ட கட்டளையைக் கரிகாலன் படை சரியாகவே நிறைவேற்றியது. ஈகத்தின் கணக்குகள் ஒருபோதும் தப்பாது. ஈழத்தின் கண்ணீரும், ஈழத் தமிழர் சிந்திய குருதியும் வீணாகிப் போகாது. கல்லறைத் தெய்வங்களின் கனவுகள் ஒருபோதும் பொய்த்துப் போகாது.
வீழ்வது எங்கள் தலைவிதியாக இருந்திருந்தால், ஆழிப் பேரலையில் அத்தனையும் அழிந்தே போயிருக்கும். ஆனாலும் எங்கள் வீர மறவர்கள் போர்க் களத்தில் வீணாகி வீழவில்லை. அவர்கள் வீழ்ந்த கணத்திலேயே எங்கள் மூச்சுடன் கலந்தவர்கள். எங்கள் நெஞ்சங்களில் நெருப்பாய் தகிப்பவர்கள். அவர்களது இலட்சியமும், நம்பிக்கையும் பொய்யாகிப் போகாது. அப்படிப் போகவும் விடமாட்டோம்!
சிங்கள அதிபரால் சிறிலங்காவை விட்டு எங்கும் போக முடியவில்லை. புலம்பெயர் தேசங்களில் தமிழர்களது முற்றுகை என்றால், இந்திய தேசத்தை உலுக்கி எடுக்கின்றது தமிழகத்தின் கோபக் கனல் மூச்சு. மலேசியா முதல், கனடாவரை சிங்கள வெறியர்களைத் துரத்தியடிக்கும் காலம் இது.
ஈழத் தமிழினமே கலங்காதே...! உங்கள் விடிவுக்கான காலம் நெருங்கியே வருகின்றது. உங்கள் மீதான் கொடுர வெறியாட்டத்திற்கு ஒன்றரைக் கோடி சிங்களவன் புறப்பட்டு வந்தாலும், உன் பக்கத்தில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பத்துக்கோடி தமிழ் இரத்தங்களும் சேர்ந்தே நிற்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத் தத்துவம் முள்ளிவாய்க்காலின் பின்னரும் தனக்குக் கவசமாக வரும் என்று நம்பியிருந்த சிங்கள தேசம் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
தமிழினப் படுகொலைக்கான களத்தை உருவாக்கிய அமெரிக்காவே, சிங்கள ஆட்சியாளாகள் மீது போர்க் குற்றம் வாசிக்கின்றது.
தறித்து வீழ்த்தப்பட்ட தமிழீழ மக்களது கரங்களாக ஜெனிவா போர்க்களம் நோக்கிப் புலம்பெயர் தமிழாகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போர்க் களம் ஈழக் கதவை மெல்லத் திறக்கும் கலங்காதே!
போராடாத இனம் என்றுமே விடுதலை அடைந்ததில்லை. அகிம்சை மறுக்கப்பட்டதால், நாம் ஆயுதம் ஏந்தினோம். அது முடிவுக்கு வந்த பின்னரும் சிங்கள தேசம் நாகரிகத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.
தொடர்ந்தும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. எங்கள் காணிகளில் எங்களைக் குடியேற விடுங்கள் என்பதைக் கேட்பதே சிங்களத்திற்கு கெட்ட வார்த்தை என்றான பின்னர், கோபத்தைத் தொலைத்து விட்டு என்ன செய்யப் போகின்றோம்?
எங்கள் முற்றத்தில் எதிரியின் கால் தடம்.... எங்கள் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றம்... எங்கள் சந்திகளில் புத்த விகாரைகள்... இனி எங்களுக்கேது மிச்ச நிலம்...?
நீதி கேட்டு, வலி. வடக்கில் தங்கள் வாழ்வுரிமை கேட்டுப் போராடிய மக்கள்மீது சிங்களம் நடாத்திய கோழைத்தன மிரட்டலை எதிர்த்து நின்ற தமிழர்களது துணிச்சல், ஒவ்வொரு தமிழனுக்கும் மீண்டும் தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் போரில் களமாடி மடிந்தவர்களை விடவும், பல மடங்கு தமிழர்கள் அப்பாவிகளாகவே சிங்களத்தால் சாகடிக்கப்பட்டார்கள். சிங்களம் கொல்வதற்கு யாரும் வீரனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கோழையாக இருந்தாலும், தமிழன் என்ற இற்றை அடையாளம் போதும் அவன் உன்மீது வெறியாட்டம் நடாத்த.
நாங்கள் ஓடுவது மட்டுமே எதிரியின் வெற்றியை இலகுவாக்கின்றது. எதிர்த்து நில்லுங்கள். துணிந்து போராடுங்கள். நீங்கள் தனித்த மரங்கள் அல்ல தறித்து வீழ்த்துவதற்கு. உங்கள் பின்னால் பத்துக்கோடி தமிழர்களது பலம் இருக்கின்றது. புலம்பெயர் தமிழர்களது உயிர் இருக்கின்றது.
நீதிக்கான உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள்! உங்கள் போராட்டத்தோடு, உலகம் இணைந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை!
- சுவிசிலிருந்து கதிரவன்
Geen opmerkingen:
Een reactie posten