தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 februari 2013

தி.மு.க., நினைத்திருந்தால் ராஜபக்சவின் வருகையை தடுத்திருக்கலாம்! முக்கிய கட்சி பிரபலங்கள் !


தமிழக அரசியலையும், இலங்கை விவகாரத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. தற்போது, ராஜபக்ச வருகையால், மீண்டும், தமிழக அரசியல் களம் பரபரப்பானது.  ராஜபக்சவின் இந்தியப் பயணம் குறித்து, முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்...
பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில், டில்லியிலும், திருப்பதியிலும் போராட்டங்கள், சென்னையில், இலங்கை துணை தூதரகம் முற்றுகை, கொடும்பாவி எரிப்பு, இலங்கை வங்கி மீது தாக்குதல் என, எதிர்ப்பு குரல் பலமாக ஒலித்தது.
இதில், இலங்கை விவகாரத்திற்காக, தி.மு.க., ஆரம்பித்த, "டெசோ' அமைப்பும், கருணாநிதி தலைமையில், கறுப்புச்சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், ராஜபக்ச இந்தியாவிற்கு வர முடியாது என்ற நிலையில், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., உறுதி காட்டியிருந்தால், இந்த பயணம் ரத்தாகியிருக்கும் என்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
முக்கிய கட்சி பிரபலங்களின் கருத்துக்கள்..
சி.மகேந்திரன் மாநில துணை செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
இலங்கை இனப்படுகொலை தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை, இந்தியாவை பயன்படுத்தி தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தான், ராஜபக்சவின் இந்திய பயணம் அமைந்துள்ளது.
ராஜபக்சவின் இந்திய வருகைக்கு, தமிழகத்தில் உள்ள கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்களத்தில் இறங்கின. இந்த வரிசையில், தி.மு.க.,வும் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது வேடிக்கை.
இலங்கையில், இறுதிக்கட்ட போர் நடந்தபோது, மத்தியில், தி.மு.க., அங்கம் வகிக்கும், காங்கிரஸ் ஆட்சி நடந்தது. தி.மு.க., நினைத்திருந்தால், போரை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், அந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இப்போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இல்லை என்றாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. இதை பயன்படுத்தி, ராஜபக்சவின் இந்திய வருகையை தடுக்கும் வகையில், மத்திய அரசுக்கு, புதிய நிர்பந்தத்தை தி.மு.க., கொடுத்திருக்கலாம்.
ஆனால், அதை செய்யவில்லை. இது போல, கிடைத்த வாய்ப்பையெல்லாம் விட்டுவிட்டு, தற்போது, லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பது போல காட்டிக் கொள்ள, "டெசோ' அமைப்பிற்கு உயிர்கொடுத்து, ஆலோசனை, ஆர்ப்பாட்டம், போராட்டம் என, நாடகம் நடத்தியுள்ளனர்.
திருச்சி சிவாராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.
இலங்கை தமிழர்கள் பிரச்னையை, சரியான தருணத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அழுத்தம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்.
தி.மு.க., - எம்.பி.,க்கள் மூலமும், கடிதங்கள் மூலமும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இலங்கை தமிழர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தக்கூடிய, அனைத்து கோரிக்கைகளையும், வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கிறார்.
சமீபத்தில் இலங்கையில், தமிழ் பெயர்கள் கொண்ட, கிராமங்களின் பெயர்களை, சிங்கள பெயர்களாக மாற்றியது குறித்து, வருத்தம் தெரிவித்து, காங்., தலைவர் சோனியாவிற்கு, கருணாநிதி கடிதம் எழுதினார்.
"உங்களின் கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்றும், இது தொடர்பாக, வெளியுறவு தொடர்பு துறை அமைச்சருக்கு எடுத்துச் சொல்கிறேன்' என்றும், சோனியா பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது போல, வாய்ப்பு கிடைக்கும்போதும், வாய்ப்பை ஏற்படுத்தியும், இலங்கைத் தமிழர் நலனுக்காக, தி.மு.க., தன் கடமையை செய்து வருகிறது. திருச்சியில், என் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, அதன்பின் நடந்த, பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு, நீண்ட தூரம் பயணம் செய்து, மறுநாள் காலையில், சென்னையில் நடக்கும் கறுப்புச்சட்டை ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி கலந்து கொள்கிறார் என்றால், அவரை விட வேறு யாரு, இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அக்கறை செலுத்த முடியும்?
பழ.கருப்பையா அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ராஜபக்சவின் வருகையை எதிர்த்து, கருணாநிதி கறுப்புச் சட்டை போராட்டம் நடத்துகிறார். அவர் மாறவே இல்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும், ஏற்கனவே மத்திய அரசில் அங்கம் வகித்த போதும், இலங்கை பிரச்சினையில், போராட்டம் தான் நடத்திக் கொண்டிருந்தார்.
மனித சங்கிலி போராட்டம், இரண்டு மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். நடு நடுவே பிரணாப் முகர்ஜியையும், தன் வீட்டிற்கு வரவழைத்தார். இலங்கை போரை நிறுத்துவதற்காக, கருணாநிதி நடத்திய நாடகங்கள் இது.
அறிவிக்கப்படாத சுதந்திர நாடாக இருந்த, இலங்கைத் தமிழ் பகுதிகள், அடிமைப் பகுதிகளாக ஆக்குவதற்கு, அடி எடுத்து கொடுத்தது இந்தியா. அதற்கு பக்கவாத்தியம் வாசித்தவரே கருணாநிதி தான்.
இப்போது தமிழ்க் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் தமிழ் நிலத்தில் சிங்களர்கள் குடியேற்றம்; தமிழ் பகுதிகளுக்கு அதிகாரமே இல்லாத, மாநில ஆட்சி கூட கிடையாது என்று ராஜபக்ச அறிவித்து விட்டு, திருப்பதிக்கு வருகிறார். அவருக்கு இந்தியா சிவப்பு கம்பளம் விரிக்கிறது.
ஆனால், கருணாநிதி கறுப்புச் சட்டை போட்டு, அவரை திருப்பி அனுப்பி விட முடியும் என, கருதுகிறார். இப்படி, பல நாடகம் நடத்துவார் கருணாநிதி. ஆனால், டில்லிக்கு தரும் ஆதரவை மட்டும் திரும்பப் பெற மாட்டார். அப்படி அவர் திரும்பப் பெற்றால், டில்லியே ராஜபக்சவை திருப்பி அனுப்பி விடும் என, கருணாநிதிக்கு தெரியாதா என்ன?

Geen opmerkingen:

Een reactie posten