யாழ். மாவட்டத்தில் 30 வரையான நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் 24 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 30ஆயிரம் மக்கள் எதற்காக மீள்குடியேற்றப்படவில்லை என்பதையும் கூறவேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொண்டைமானாறு தொடக்கம் மாவிட்டபுரம் வரையில் மிகப் பிரமாண்டமானளவில் அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு வேலியினையும், அதனுள் இடிக்கப்பட்டுவரும் பொதுமக்களுடைய விடுகளையும் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் இராணுவப் பேச்சாளரின் கருத்துக்குப் பதிலளித்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், இராணுவம் பொதுமக்களுடைய வீடுகளை இடித்திருப்பதையும், அவர்களுடைய நிலத்தில் பாதுகாப்பு வேலிகளை அமைத்திருப்பதையும் நான் நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றேன்.
மேலும் சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல், தமது வீடுகள் இடிக்கப்படுவதை நேரில் பார்த்து அவலப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுடன் நான் நேரடியாக பேசியிருக்கின்றேன். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை என்பதுபோல் உயர்பாதுகாப்பு வலயங்களே கிடையாது என்றும் இராணுவ முகாம்களே உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் றுவான் வணிகசூரிய,
2500 ஹெக்டயர் நிலத்தில் மட்டுமே யாழ். மாவட்டத்தில் முப்படையினரும் தங்கியிருப்பதாக கூறியிருக்கின்றார்.
வலி. வடக்கில் மட்டும் 24 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 10ஆயிரம் ஏக்கர் விவசாய மற்றும் வீட்டு நிலத்தில் இராணுவம் தங்கியிருக்கின்றது. அந்த நிலத்தில் இராணுவம் விவசாயம் செய்கின்றது.
விவசாய உற்பத்திப் பொருட்களை வெளியே கொண்டுவந்து விற்பனையும் செய்கிறது. அதற்காக மக்களுடைய வீடுகளை இடித்து வீதிகளையும், பாதுகாப்பு வேலிகளையும் அமைத்துக் கொண்டு அந்தப்பிரதேசம் ஒரு தனியான நாடு என்பது போன்று நடந்து கொள்கின்றது. ஆனால் நிலத்திற்குச் சொந்தமான மக்கள் இன்றும் முகாம்களில் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்திற்கு இடம் தேவையென்றால் தென்னிலங்கையில் பல காடுகள் உள்ளன அங்குபோய் இருக்கலாமே.
தமிழ் மக்கள் எல்லோரையும் கொன்று குவித்தாயிற்றே, பிறகெதற்கு இங்கு இராணுவம் இருக்க வேண்டும், உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை இராணுவ முகாம்களே உள்ளன என்றால் பொதுமக்களுடைய வாழ்விடத்தில் முகாம்களை அமைக்கவும், அவர்களுடைய வீடுகளை இடிக்கவும், பாதுகாப்பு வேலிகளை அமைக்கவும் இராணுவத்திற்கு அதிகாரம் யார் கொடுத்தது?
எந்த சட்டத்திட்டத்திற்கமைவாக இவை மேற்கொள்ளப்படுகின்றது? இன்றும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது
எதுவுமேயில்லாமல் எதைவேண்டுமென்றாலும் ஊடகங்களுக்கு கூறலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். உண்மை மக்களுக்குத் தெரியும். நாங்கள் நேரடியாக அனைத்தையும் பார்த்திருக்கின்றோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten