தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

நீங்கள் சர்வாதிகாரி இல்லை! சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்



ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை: வினோ நோகராதலிங்கம் விசனம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 07:36.03 AM GMT ]
அரச அதிகாரிகள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் புதிய அரசாங்கத்தின் நல்லாட்சி எனும் சொல்லுக்கேற்ப செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் பிரதேச செயலர் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமம் ஒன்றுக்கு தலா 10 இலட்சம் வீதத்திற்கான வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகளை இறுதிப்படுத்தும் கூட்டங்கள் வடக்கில் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைபெறுகின்றன.
இத்திட்டங்கள் தொடர்பில் உள்ளூர் கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்று கொள்ளாமல் ஒரு சிலரிடம் மாத்திரம் முன்மொழிவுகள் பெறப்பட்டு பிரதேச செயலகங்களில் அவற்றை இறுதி செய்யும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.
அரச அதிகாரிகளின் இது மாதிரியான நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட கூட்டங்களில் கட்சி பிரமுகர்கள் அறிமுகப்படுத்தும் வேலைகளும் இடம்பெற்றுள்ளன.
முன்னர் ரிசாட்பதியுதீனின் இணைப்பாளரை தற்பொழுது ஐக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளர் எனவும், மக்களினால் தெரிவு செய்யப்படாதவர்களை முன்னிலைப்படுத்தி கட்சிகளின் பிரதிநிதி அமைச்சர் சார்பாக என அறிமுக நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு காரணமாக இருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட அழைக்காத நிலையில் அழையா விருந்தாளிகளாக செல்லும் நிலைமை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.
திட்டங்களை மக்களிடம் திணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கேற்ப செயற்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார். கடந்த காலங்களில் சில அரசாங்கத்திற்கு சார்பாக இயங்கியவர்களால் மக்கள் பெருமளவில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டார்கள்.
இப்பொழுது அவர்களே புதிய முகமூடிகளுடன் மக்கள் முன் வந்திருக்கின்றார்கள் இதன் காரணமாக மீண்டும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq3B.html



நீங்கள் சர்வாதிகாரி இல்லை! சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 07:38.03 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கடிதம் எழுதியுள்ளார்.
“இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள்“ என தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில்,
நான் கடந்த பல நாட்களாக தங்களிடம் பல விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிற்கேனும் பதில் தரவில்லை. 
இருப்பினும் 28.03.2015 ம் திகதி திருகோணமலையில் நடந்த கருத்தரங்கில் கூட்டமைப்பு பதிவு சம்மந்தமாக நீங்கள் கூறிய கருத்துக்களில் ஏதோ தமிழரசுக் கட்சிதான் நீண்ட கால போராட்டங்களை முன்னெடுத்தது என்றும் அவர்களின் சம்மதம் இதில் முக்கியம் என்றும் கருத்துக் கூறியிருந்தீர்கள்.
போராட்ட வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற எல்லா கட்சிகளும் போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு தமிழரசுக் கட்சியை விட மிகத் தீவிரமாக போராடியுள்ளன.
அதுமட்டுமல்ல தமிழரசுக் கட்சியைவிட ஏனைய கட்சிகள் அதிகளவான உயிரிழப்புக்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் விலைமதிக்க முடியாத தங்களது தலைவர்களையும் இழந்துள்ளன.
ஏற்கனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தமிழரசுக் கட்சியால் தீர்க்க முடியாது என தீர்க்க தரிசனத்தால் உணர்ந்து கொண்டபடியால்தான் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தையும் முடக்கி வைத்துவிட்டு, தந்தை செல்வா அவர்கள் 1972ம் ஆண்டு அப்போதிருந்த முக்கிய தமிழ்த் தலைவர்களான சட்ட மாமேதை அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம், மலையகத் தமிழர்களின் விடிவெள்ளி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அகியோரை இணைத்துக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்.
அந்த வரலாறு தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அப்போது தாங்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தும் தமிழரசுக் கட்சியில் எந்த ஒரு முக்கிய பதவியிலும் இருக்கவுமில்லை தமிழரசுக் கட்சியின் எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொண்டதுமில்லை.
இருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமான பின்னர்தான் தாங்கள் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்ற காரணத்தினால் தந்தை செல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.
1977ம் ஆண்டு தாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு முதன்முதலாக பாராளுமன்றம் சென்றீர்கள் என்பதைக் கூட மறந்துவிட்டீர்களே.
தந்தை செல்வாவின் மறைவிற்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர் கட்சியானதும் அதில் தாங்களும் அங்கம் வகித்தீர்கள்.
தமிழர் விடுதைக் கூட்டணியின் போராட்டங்கள், அதன் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கைகள், தமிழ்மக்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்ற முறைகள் எல்லாவற்றையும் எப்படி மறந்தீர்கள?
பெறுமதிமிக்க எத்தனை பெருந் தலைவர்களை எல்லாம் தப்பாக்கி குண்டுகளுக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் பலி கொடுத்துள்ளோம்.
அப்பாவித் தொண்டர்கள் எத்தனை பேரை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகக் கொடுத்தோம். இவைகளை எல்லாம் நன்கு தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் தமிழரசுக் கட்சிதான் பல போராட்டங்களை நடத்தியது என்று எவ்வாறு கூற முடிந்தது?
தமிழர் விடுதலைக் கூட்டணியோடு ஒப்பிடும்போது போராட்டங்களானாலும் சரி, இழப்புகளானாலும் சரி தமிழரசுக் கட்சியின் பங்கு மிகச் சிறியதே.
இதை நன்கு அறிந்த தாங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தந்தை செல்வாவினால் உருவாக்கப் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாற்றை மறைத்துவிட்டு, அவரால் முடக்கி வைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் புகழ்பாடுவது வேடிக்கையானது.
இது தந்தை செல்வாவிற்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். ஜனநாயக ரீதியில் போராடிய கட்சிகளில் அதிகளவான இழப்புகளை சந்தித்த ஒரே கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணிதான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை.
எனவே இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள். அதைவிட பன் மடங்கு போராட்டங்களையும் இழப்புக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கின்ற ஏனைய அமைப்புகளும் சந்தித்திருக்கின்றன என்பதை தமிழரசுக் கட்சியினருக்கு நீங்கள் ஞாபகப்படுத்துங்கள்.
நீங்கள் சர்வாதிகாரி இல்லை என்று சொன்னாலும்கூட நீங்கள் தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனவே கூட்டமைப்பு பதிவு விடயத்தில் ஏனைய கட்சிகளின் எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள்.
கூட்டமைப்பை பதிந்து விட்டால் நாளையே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்ற ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளீர்கள். அப்படியாயின் கூட்டமைப்பை பதிந்தால் என்ன பதியாவிட்டால் என்ன தமிழ் மக்களின் பிரச்சினை தீரப் போவதில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதென்பதையும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். நிலைமை இவ்வாறிருக்க பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழ் மக்களை ஏன் தவறான வழிக்கு கொண்டு செல்கின்றீர்கள்.
ஒரு சமூகத்திடம் பொய்களைக் கூறி வெற்றியடைவதைவிட உண்மைகளைக் கூறி தோல்வி அடைவது மேலானது என்ற ஒரு அறிஞனின் கூற்றை தங்களுக்கு ஞாபகப் படுத்த விரும்புகின்றேன்.
எனவே அனைத்து தரப்பினரையும் ஒற்றுமைப் படுத்தி தந்தை செல்வாவினால் இறுதியாக உருவாக்கப் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தர முடியும் என்பதையும், அதற்காக உறுதியுடன் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq3C.html

Geen opmerkingen:

Een reactie posten