உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதம் விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுடன் கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ரணவீர களுவாராச்சிகே நோயேல் ரணவீர என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உதயங்க வீரதுங்க, உக்ரைனில் நடத்தி வரும் கிளப் லங்கா என்ற உணவகத்தில் பணியாற்றுவதற்காக நிட்டம்புவ வெலிகடமுல்ல என்ற பிரதேசத்தை சேர்ந்த ரணவீர என்பவரை 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி உக்ரைனுக்கு வரவழைத்துள்ளார்.
இதன் பின்னர் உதயங்க வீரதுங்க ரஷ்ய தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து ரணவீரவையும் தூதரகத்தில் சேவைக்கு இணைத்து கொண்டுள்ளார்.
ரஷ்ய தூதுவராக பணியாற்றிய உதயங்க, நோயேல் ரணவீரவுடன் இணைந்து கூட்டு வங்கி கணக்கொன்றையும் பேணி வந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது நடத்தப்பட்ட வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நோயேல் ரணவீர, 60 ரஷ்ய வர்த்தகர்களுடன் இலங்கைக்கு வந்திருந்தார்.
இலங்கையுடன் இவ்வாறு தொடர்புகளை கொண்டிருந்த நோயேல் ரணவீர, 2014 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி திடீர் விபத்தொன்றில் கொல்லப்பட்டதாக உதயங்க வீரதுங்க, நோயேல் ரணவீரவின் மூத்த சகோதரருக்கு அறிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 15 ஆம் திகதி நோயேல் ரணவீரவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜூன் 18 ஆம் திகதி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. உதயங்க வீரதுங்க இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை.
தமது சகோதரரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ரணவீரவின் சகோதரர்கள் கோரிக்கை விடுத்த போது, ரஷ்யாவில் சகல பரிசோதனைகளும் நடத்தப்பட்டு விட்டதாக கூறி, அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு குடும்பத்தினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்த போதும் விசாரணைக்கான அனுமதியும் வழங்கப்படவில்லை.
இதனால், தமது சகோதரரின் மரணத்தின் பின்னால் பாரதூரமான மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உதயங்க வீரதுங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUko7A.html
Geen opmerkingen:
Een reactie posten