ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி, குறுகிய நேர இலங்கைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கடந்த மார்ச் 24ஆம் திகதி பகல், சில மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த அவரது பயணத்தின் போது, சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. எனினும், அவரது பயணத்தின் நோக்கம் குறித்து அதிகம் பேர் அக்கறை கொள்ளவில்லை.
அவர் தனது பயணத்தின்போது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை, குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்ட பின்னர் தான், அவரது வருகையின் சூத்திரம் பலருக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அம்பாந்தோட்டையில், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தை, இப்போது பிளை டுபாய் விமானம் தவிர வேறெந்த விமானங்களும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.
இந்த விமானத்தில் கூட, நாளொன்றுக்கு, 5 அல்லது 10 பேர் தான் மத்தளவில் வந்திறங்குகின்றனர். இந்த விமான நிலையம் பொருளாதார ரீதியாக பயனற்றது என்று கருதி, இதன் செயற்பாடுகளை மட்டுப்படுத்தத் தொடங்கி விட்டது புதிய அரசாங்கம். விமானப் பராமரிப்பு நிலையமாகவோ, பயிற்சி நிலையமாகவோ இதனைப் பயன்படுத்துவது குறித்தோ அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கோ ஆலோசனை நடத்தப்படும் என்றும் இந்த அரசாங்கம் ஏற்கனவே கூறியிருந்தது.
இந்தப் பின்னணியில் தான், கட்டார் அமீர், இந்த விமான நிலையத்தை குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார். ஆனால், எந்த வருவாயையும் ஈட்ட வழியில்லாத இந்த விமான நிலையத்தை குத்தகைக்குப் பெற்று, கட்டார் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னர், கட்டார் இதனைக் குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தாலும், சீனா அதற்கு அனுமதிக்குமா என்பது முக்கியமான கேள்வி.
சீனாவின் நிலை என்னவென்று இன்னமும் உறுதியாகவில்லை. ஆனால், சீனாவை மீறி நடந்து கொள்வதிலும் சிக்கல் உள்ளது. சீனாவே இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கான கடன்களை வழங்கியது. மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் காலத்தில், இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகள் அனைத்தும், பரஸ்பரம் இரு நாடுகளுக்கும், இருநாட்டு மக்களுக்கும், நன்மையளிக்கத்தக்கவை என்று சீனா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது.
அந்தக் கோணத்தில் பார்க்கப்போனால், தான் முதலீடு செய்து உருவாக்கிய மத்தள விமான நிலையத்தை, கட்டாருக்கு குத்தகைக்கு கொடுக்க சீனா இணங்குமா என்ற சந்தேகம் வரவே செய்யும். கட்டாருக்கு இந்த விமான நிலையத்தை குத்தகைக்குக் கொடுக்க இணங்கினால், அதற்கெதிராக சீனா எதிர்ப்புத் தெரிவிக்கலாம்.
சீனக்குடாவில் தமது விமானப் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இணங்கியிருந்தது. ஆனால், இந்தியாவின் எதிர்ப்பினால், அது பின்னர் கைவிடப்பட்டது. பின்னர் அந்த விமான பராமரிப்பு நிலையத்தை, ஹிங்குராங்கொடையில் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனாலும், அந்த திட்டம் குறித்து பின்னர் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை, மத்தள விமான நிலையத்தை, கட்டாருக்கு கொடுக்க இலங்கை முன்வந்தால், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக சீனா அதனைத் தனக்குத் தருமாறு கோரலாம். அதேவேளை, சீனாவிடம் மத்தள விமான நிலையம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா விரும்பாது.
அது சீனாவின் தளமாக மாற்றப்படும் என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்படக் கூடும். இந்தச் சிக்கலான நிலை இலங்கை அரசாங்கத்துக்கு இன்னமும் உருவாகாது விட்டாலும், அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. ஏனென்றால், மத்தள விமான நிலையத்தைக் கொத்திக் கொண்டு போக கட்டார் காத்திருக்கிறது. இந்த விமான நிலையத்தை வைத்து, கட்டார் எதனைச் சாதிக்கப்போகிறது? நிச்சயமாக, இதனை வெற்றிகரமான ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க முடியாது.
என்றாலும், இதனை வைத்துக்கொள்ள கட்டார் விரும்புவதன் பின்னணியில், அமெரிக்காவே இருப்பதாகக் கருதப்படுகிறது. கட்டாருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நல்ல நெருக்கம் உள்ளது, இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடும் நடைமுறையில் இருக்கிறது.
1991ஆம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது, அதனை விடுவிப்பதற்காக அமெரிக்க கூட்டணிப் படைகள் மேற்கொண்ட பாலைவனப் புயல் நடவடிக்கையின் போது, கட்டாரில் அமெரிக்கப் படைகளின் தளம் அமைக்கப்பட்டது. கட்டாரில் உள்ள அல்-உடெய்ட் விமானப்படைத்தளம் இன்னமும் அமெரிக்கப் படைகளின் வசமே உள்ளது.
இந்த தளம், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்காவின் முக்கியமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பின்னணியில் தான், மத்தள விமான நிலையத்தை கட்டார் குத்தகைக்கு அமர்த்த முனைந்துள்ளதும், அமெரிக்காவின் தூண்டுதலில்தான் என்ற கருத்து நிலவுகிறது. அமெரிக்கா சில விவகாரங்களில் நேரடியாகத் தலையீடு செய்வதுண்டு.
சிலவற்றில் தனது மறைமுக சக்திகளைப் பயன்படுத்தும். உதாரணத்துக்கு, அமைதி முயற்சிகளுக்கு நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைப் பயன்படுத்துவதுண்டு. அதுபோல தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவினால் பயன்படுத்தப்படுபவை தான்.கட்டாரும் அந்த வகையிலானதொரு மறைமுகமான அமெரிக்கக் கரம் என்றே கருதப்படுகிறது.
மத்தள விமான நிலையத்தை கட்டார் குத்தகைக்கு பெற்றாலும், அது நேரடியாக அமெரிக்காவின் விமானத் தளமாகப் பயன்படுத்தப்படும் என்று கூற முடியாது. அவ்வாறு பயன்படுத்துவதற்கு இலங்கையுடன் அமெரிக்கா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். குத்தகைக்குப் பெற்ற நாடு, அதனை இராணுவத் தேவைக்குப் பயன்படுத்த முடியாது.
எனினும், அது சீனாவினது கையில் போகாமல் தடுப்பதற்கு பயன்படக் கூடும். இது இந்தியாவைப் பொறுத்தவரையிலும் ஆறுதல் அளிக்கத்தக்க விடயம். அதேவேளை, சீனாவுக்கு இப்போது, இந்தியப் பெருங்கடலில் தனது வல்லாண்மையை விரிவாக்கம் செய்வதற்கு, இந்தியாவும், அமெரிக்காவுமே தடையாக இருக்கின்றன. இந்தியப் பெருங்கடலில், அமெரிக்காவினால் தனித்து சீனாவின் தலையீடுகளைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால்தான், இந்தியாவின் உதவியுடன், அது சீனாவின் தலையீடுகளைத் தோற்கடிக்கும் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கூட்டு, இலங்கையில் தனது செல்வாக்கு வலுப் பெறுவதையும் தடுத்து நிற்கிறது என்பதை சீனா உணர்ந்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றங்களின் பின்னணியில், அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் சம்பந்தப்பட்டுள்ளதாக, மஹிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டும் சீனாவை கரிசனை கொள்ள வைத்திருக்கும்.
இந்தியாவுக்கு சந்தேகம் ஏற்படும் படியாக- அல்லது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் படியான எந்தவொரு திட்டத்தையும் இலங்கையில் இனி முன்னெடுப்பது சிக்கலான காரியம் என்பது சீனாவுக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் துறைமுக நகரத் திட்டத்தை, இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திய போதே, அது புரிந்துவிட்டது.
இந்திய நலன்களுக்கு எதிரான எதையும், இனி இலங்கையில் மேற்கொள்ள முடியாது என்பது உணரப்பட்டுள்ள நிலையில், சீனா தனது கடல் வழிப் பட்டுப்பாதை உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, புதிய உபாயம் ஒன்றைக் கையாள ஆரம்பித்திருக்கிறது.
அதுதான், இந்தியா, இலங்கை, சீனா ஆகிய முத்தரப்புகளும் இணைந்து செயற்படுதல். இந்த திட்டம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கிற்குச் சென்றிருந்த போது, சீனத் தலைவர்களால் முதன் முதலில் முன்மொழியப்பட்டது. அதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தின் போதும், சீன ஜனாதிபதி இதனை பிரஸ்தாபித்திருக்கிறார்.
அதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆதரவளிப்பதாகக் கூறியிருக்கிறார். அதைவிட, புதுடில்லியில் உள்ள சீனத் தூதுவரும் இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்த திட்&டத்தை முன்வைத்துப் பேசுவதற்கு சீனத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் சீனத் தலையீடு குறித்தோ அல்லது இந்தியத் தலையீடு குறித்தோ மற்ற நாடு கவலை கொள்ளும் நிலை ஏற்படாது. ஆனால், இந்திய – சீன பிரச்சினைகள் என்பது, தனியே இலங்கையுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அவ்வாறு இலங்கையுடன் தொடர்புடைய பிரச்சினையாக இருந்தால், அதற்கு ஒருவேளை இந்த திட்டம் தீர்வாக அமைய முடியும்.
இது இந்த திட்டத்தின் முக்கியமானதொரு சிக்கல். ஆனாலும், அதையிட்டு யோசிக்காமல் சீனா இந்த திட்டத்தை முன்வைக்கிறது என்றால், அதற்கு இருக்கக் கூடிய ஒரே காரணம், இந்தியப் பெருங்கடலில் தனது தலையீடுகளுக்கு முட்டுக்கட்டையை தகர்ப்பது தான், குறிப்பாக, தனக்கெதிராக இந்தியாவைப் பயன்படுத்தும், அமெரிக்காவின் முயற்சிகளை உடைப்பது.
இந்திய - அமெரிக்க கூட்டை உடைப்பதன் மூலம், இந்தியப் பெருங் கடலில் தனது ஆதிக்கத்தை இலகுவாக நிறுவிக் கொள்ள சீனா முனைகிறது. இதற்காகத் தான், இலங்கையையும் துணை க்கு அழைக்கிறது சீனா. இந்தநிலையில், இந்த முக்கூட்டு அணி தனக்கு, ஆபத்தானது என்பதை, அமெரிக்கா உணர்ந்து கொள்ளாமல் இருக்காது.
அத்தகைய நிலையில், இலங்கையையோ, இந்தியாவையோ அது வெளியே இழுத்துப் போட முனையும். இப்படியான நிலையில், இலங்கையைச் சுற்றிய வல்லாதிக்கப் போட்டி வலுப்பெறப் போவது உறுதியாகியுள்ளது. இலங்கை விரு ம்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இதில் அகப்படாமல் தப்பிக் கொள்வது கடினம்.
-சுபத்ரா-
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr5E.html
Geen opmerkingen:
Een reactie posten