தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

எதிர்க்கட்சி தலைவர் பதவி ஸ்ரீ.சு.க. விற்கு வேண்டாம்: ஜீ.எல்.பீரிஸ்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 05:28.39 AM GMT ]
எதிர்க்கட்சி தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வழங்கப்படக்கூடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு நேற்று வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கட்சியும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சுதந்திர கட்சியை மாத்திரமல்லாது முழு பாராளுமன்றத்திறகே பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு மற்றொரு தரப்பும் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இது மாதிரியான கையொப்பங்களை பெறுவதினால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தீர்மானிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாம் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இதுவரை கையொப்பமிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டை ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டியது மிகவும் முக்கியமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள எதிர்க்கட்சி தலைமைத்துவம் யாரெனும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத பட்சத்தில் நாட்டில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு மதுபானசாலைகளை மூடத் திட்டம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 05:32.16 AM GMT ]
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஒரு வார காலத்திற்கு மதுபானசாலைகளை மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனைத் திட்டம் அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 3ம், 4ம் திகதிகளில் வெசாக் பௌர்ணமி அனுஷ்டிக்கப்பட உள்ளது.
குறித்த இரண்டு தினங்களில் மட்டும் மதுபானசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானித்துள்ளது.
எவ்வாறெனினும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒரு வார காலத்திற்கு மதுபானசாலைகளை மூடுமாறு கோரி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் தனியாக தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது.
அரச வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை பாதுகாக்க உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 05:42.09 AM GMT ]
இயற்கை வளங்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வளங்களை பாதுகாக்க உரிய வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க மரக் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில், அரசியல் நட்பின் அடிப்படையில் வன பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டன எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதனிடையே தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து திருப்தி கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை பேரம் பேசலுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுவலை கொரதொட்ட பத்தினி ஆலய வளவில் உள்ள போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தங்க வேலியை நேற்று திறந்து வைத்து பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.


இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 05:48.54 AM GMT ]
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பிலான சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேற்று இது தொடர்பிலான யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த உத்தேச சட்டத்தை சமர்ப்பித்துள்ளார். இன மற்றும் மத ரீதியில் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தை முன்னதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் சமர்ப்பித்த போதிலும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp4E.html

Geen opmerkingen:

Een reactie posten