மட்டக்களப்பு சுவிஸ் ஸ்டா அமைப்பின் ஊடாக பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட வறுமை நிலையில் உள்ள யுவதிகளுக்காக நடாத்தப்பட்ட கைப்பணி மற்றும் அழக்குக்கலை பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது.
இங்கு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகமும், தமிழ் சமூகமும் ஒற்றுமைப்படும் நோக்கத்தில் தமது எதிர்கால அரசியல் பயணங்களை மேற்கொள்ளும் போது தான் எமது சமூகத்திற்கு ஒரு விடிவை எதிர்காலத்தை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அரசியலில் எதிர்பங்காளிகளாக இருந்து கொண்டு சத்தம் போடுவதால் அதனை சாதித்துக் கொள்ள முடியாது. அரசியல் பங்காளிகளாக இருந்தால் மாத்திரம் தான் மக்களுடைய தேவைகளை பிரச்சினைகளை ஓரளவிற்காவது தெரிந்து கொள்ளக் கூடிய வல்லமையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற உண்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையில் இப்போதாவது படித்திருக்கின்றார்கள் என்பதையிட்டு நான் சந்தோஷமடைகின்றேன்.
ஏனென்றால் தேவைகள் உள்ள சமூகங்கள் அதிகமாக இருக்கின்ற காலப்பகுதியில் வெறுமனே வெட்டிப் பேச்சும், வீர வசனங்களும் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் மக்களுடைய துயரங்களை போக்கிவிட முடியாது என்ற உண்மையை உணர்ந்த காரணத்தினால் தான் கிழக்கு மாகாணசபையின் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
இந்த நினைப்பு வருகின்ற பொதுத்தேர்தலிலும் நியாயபூர்வமான உணர்வுகளோடு இந்தத் தேசியத்தில் அரசின் பங்காளிகளாக நின்று மக்களுக்கு சேவை செய்கின்ற பணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் அவாவுமாகும்.
பாராளுமன்றத்தில் ரணிலுக்கு அதிகளவு ஆதரவு இருக்கின்றதா அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகம் ஆதரவு இருக்கின்றதா என்ற பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் ஐயாவிற்கு கொடுக்க முடியுமா என்ற விடயம் குறித்து பாராளுமன்றத்திலும் தேசியத்திலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
என்னையும் என்சார்ந்த கட்சியையும் பொறுத்தவரை இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு சகல தகுதிகளும் இருக்கின்றது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். ஏனென்றால் இந்த சமூகத்தின் குரலாக அவர் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இருந்து கொண்டிருக்கின்றார்.
இந்தப்பணி எதிர்காலத்தில் எவ்வாறு செய்யப்படப் போகின்றது என்பதில் இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்ற மக்களின் அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில் அவர்கள் எடுக்கவிருக்கின்ற தீர்மானங்கள் மிக முக்கியமானவையாக இருக்கும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.
தேர்தல் நடக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.தேர்தல் நடத்தப்படாவிட்டால் வீதிக்கு இறங்குவோம் என்று இன்னும் சிலர் கூறுகின்றார்கள். அப்படியில்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் ஜனாதிபதி கூறிவரும் நிலைமையேற்பட்டுள்ளது.இது தொடர்பில் சிறுபான்மை சமூகம் மிகத்தெளிவாக இருக்கவேண்டும்.
போனவர்கள், போனவர்கள்தான்.அவர்கள் திரும்பி வருவதற்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது. மாண்டவர்கள் மாண்டவர்களாகவே இருக்கவேண்டும். அவர் எவராக இருந்தாலும் சிறுபான்மை சமூகமாகிய நாம் அவர்கள் மீண்டு வருவதற்கும், இந்த பிராந்தியத்தில் நாங்கள் இடம்கொடுக்கக் கூடாது.
மாற்றத்திற்கு ஏற்ப எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது. நமது குடும்பம் நிறைவான வளமுடன் வாழ வேண்டும் என்ற மனப்பாங்குடன் நாங்கள் உழைக்கவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp3J.html
Geen opmerkingen:
Een reactie posten