[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 06:04.04 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஏற்கனவே லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் வகையில் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்க உட்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் முன்னைய அரசாங்க காலத்தில் பாரிய கொள்ளைகள் இடம்பெற்றன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்தை கலைக்கும் போது வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றி விட்டது என்பதை பொதுமக்களுக்கு கூற முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அரசாங்கம் செய்யாவிட்டால் மக்களின் நம்பிக்கையை பெற, அரசாங்கம் பாரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr5G.html
இரண்டு பிரதான கட்சிகளும் பரஸ்பர மோதல்! அதிர்ச்சியில் மைத்திரி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 06:30.44 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்தித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் மஹிந்தவை பாதுகாப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியினர் உறுதியளித்துள்ளதாக அமரவீர குழுவினர், சந்திரிக்காவிடம் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் அந்தக்கட்சியின் பிரதான இலக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்குவதாகும் என்று அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது ஐக்கிய தேசியக்கட்சி அவ்வாறு நடந்துக்கொள்ளாது என்று குறிப்பிட்ட சந்திரிக்கா எனினும் இதனை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிப்பதாக உறுதியளித்தார்.
இதற்கிடையில் எதிர்வரும் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினர் பாரிய நிதிச்செலவுகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் மஹிந்த அமரவீர குழுவினர், சந்திரிக்காவிடம் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் சுமார் 5000 பௌத்த பிக்குகளை ஒன்று திரட்டி குருணாகலில் மஹிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டத்தை நடத்த திட்டமிடப்படுவதாகவும் அவர்கள் சந்திரிக்காவிடம் கூறியுள்ளனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது அறிவுரை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால இரண்டு தரப்பினரும் பரஸ்பர குற்றம் சுமத்தலை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இது மக்கள் மத்தியில் அரசாங்கத்தை பற்றிய கிலேசத்தை கொண்டு வரும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தை ஏப்ரல் இறுதியில் கலைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலவின் மீது குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று யோசனையை முன்வைத்தது. எனினும் பின்னர் அதுபற்றி பேசப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr5H.html
போர்ட் சிற்றியில் பணியாற்றிய 5000 இற்கும் மேற்பட்டவர்கள் இடைநிறுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 07:34.37 AM GMT ]
கொழும்பு துறைமுகநகர் அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நிறுவனங்களில் பணியாற்றி வந்த 5924 பேர் பணி இடைநிறுத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் 900 பேர் சீனர்கள் எனவும் ஏனையவர்கள் 5024 பேர் இலங்கையர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
துறைமுக நகர திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் உரிய பதிலளிக்காத காரணத்தினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நிறைவேற்று தரமுடைய இலங்கை உயர் அதிகாரிகள் 12 பேர், சீன அதிகாரிகள் 12 பேர் மற்றும் சுவீடன், அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் துறைமுக நகரத்திட்ட பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் உறுதியான தீர்மானங்கள் எடுக்கவில்லை எனவும் குறைந்தபட்சம் ஒன்பது மாத காலம் அல்லது ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீன நிறுவனம் 70 சதவீதம் கடன் மூலமாகவே இத்திட்டத்தை முன்னெடுத்து சென்றுள்ளது.
இத்திட்டத்தை அரசாங்கம் தற்காலகமாக இடைநிறுத்தியதனால் சீன நிறுவனத்திற்கு ஒரு நாள் செலவு சுமார் 500 மில்லியன் என்ற காரணத்தினால் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr5J.html
மகிந்தவின் சவால்களை ஏற்றுக்கொள்ள தயார்!– சந்திரிகா
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 07:35.15 AM GMT ]
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின், தொகுதியில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் செயல்களை குழப்பமடையாமல் வேடிக்கை பார்க்க வேண்டும் எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு அமைய நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.
அப்பாவி வர்த்தகர்களிடம் கூட கப்பம் பெற்ற யுகத்தை மாற்ற முடிந்த அரசியல் வேலைத்திட்டத்தை செயற்படுத்த வாய்ப்பு கிடைத்தமையானது சுதந்திர தேசத்தை உருவாக்குவதன் ஆரம்பம் எனவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப்பகிர்வை குழப்பும் பிரதமர் ரணிலின் நகர்வுகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 07:51.26 AM GMT ]
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்தில் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைவரங்கள், பிரச்சினைகளை அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின் னர், பிரதமர் ரணில் நடத்திய உயர்மட்டக் கூட்டங்கள் இவை.
ஆனாலும், இந்தக் கூட்டங்களில் வடக்கு மாகாண சபைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவும் இல்லை, வடக்கு மாகாணசபையின் கருத்துக்களை கேட்டறியவும் இல்லை.
அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கோ அல்லது வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கோ, முறைப்படியான அழைப்புகளும் விடுக்கப்படவில்லை. இதனை ஒரு எதேச்சையான சம்பவமாக கருத முடியாது. இது திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால், கடந்த மாதம் இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான பயணத்துக்கு முன்னதாக, தந்தித் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில், தாம் அடுத்த சில நாட்களில் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளப் போவதாகவும், ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனேயே தொடர்புகளை வைத்து பேசி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இத்தகைய பின்னணியில், ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத் திட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்தளவுக்கு ரணிலுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில், மிகப்பெரிய கருத்து மோதல்கள் ஒன்றும் ஏற்பட்டிருக்கவில்லை. வடக்கில் இருந்து படைகளை விலக்கும் விவகாரமே இதன் அடிப்படை.
ஆனாலும், வடக்கு மாகாணசபையை ஒதுக்கி வைத்துவிட்டு, ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் அதிகாரத்தை வடக்கில் நிலைநாட்ட முயன்றிருக்கிறார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் ஒதுக்கப்பட்ட நிகழ்வை வடக்கு மாகாணசபை ஒட்டுமொத்தமாகவே புறக்கணித்திருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இது தமிழ் மக்கள் மத்தியில், கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரை விமர்சித்து, அவரைப் புறக்கணித்து செயற்படும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணிலின் கூட்டத்துக்குச் சென்றது சரியானதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், பிளவுகளை ஏற்படுத்த ரணில் முயற்சிப்பதாகவும், பிரித்தாளும் தந்திரத்தைக் கையாள்வதாகவும் கூட்டமைப்பின் பிரமுகர்கள் பலரும் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியது போலவே, கூட்டமைப்புக்குள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள், இத்தகையதொரு விமர்சனங்களை கொண்டு வந்துள்ளதுடன், அதிகாரப்பகிர்வையும் அர்த்தமற்றதாக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் விசனங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
அதாவது, வடக்கு மாகாணசபை தான், இப்போது வடக்கிலுள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரே அலகாக இருக்கிறது.
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வதே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவினாலும் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணசபையைப் புறக்கணித்துச் செயற்பட்டுள்ளது, அதிகாரப்பகிர்வுக் கோட்பாட்டுக்கு முரணானது.
வடக்கு மாகாணசபையை ஒதுக்கி, ஓரம்கட்டி விட்டு, மத்திய அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியாகவே இதனைக் கருதலாம். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இதே கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது வடக்கு மாகாணசபை வெறும் அலங்காரப் பொம்மையாகத்தான் இருந்தது.
எனினும், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்தவாரம் முதல் முறையாக, ஒரு தொகுதி பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்திருந்தது வடக்கு மாகாணசபை. இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இப்போதுதான், அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஒருபக்கத்தில் புதிய அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் நெருக்கமாக பணியாற்ற முனைந்தாலும் இன்னொரு பக்கத்தில் அதனுடன் முரண்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது.
முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங் கம் வடக்கு மாகாணசபையினரை நிகழ்வுகளுக்கு அழைக்கும், ஆனால், அவர்களி டம் எதையும் செய்வதற்கு அனுமதிக்காது. ஆனால், இப்போதைய அரசாங்கம் அதற்கு எதிர்மாறான வகையில் உள்ளது.
வடக்கு மாகாணசபையினரை ரணில் விக்கிரமசிங்க புறக்கணித்துச் செயற்பட்டாலும், வடக்கு மாகாணசபையின் விவகாரங்களில் அவ்வளவாக குறுக்கிடுவதில்லை.
இப்போதைய மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள், ஜனாதிபதி, பிரதமர் என்று கூறுபட்டிருக்கிறது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, வடக்கு மாகாணசபையும் சரி முரண்படவில்லை. முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவும் இல்லை.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான், வடக்கு மாகாணசபையுடன் முரண்பட்டு வருகிறார். எவ்வாறாயினும், இந்த முரண்பாடுகள் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும் குழப்பங்கள் உள்ளன. ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பாடுகளை வளர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
காரணம், புதிய அரசாங்கத்துடன் இணங்கிச் சென்றே எதையும் சாதிக்கலாம் என்பது மிதவாத தலைவர்களின் கருத்தாகத் தெரிகிறது. அதனால் தான், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பந்தாடப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மட்டுமே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காக, ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்வுகளை புறக்கணித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவது தான் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் என்றால், அந்த நோக்கத்தை அவர் அடைந்து விட்டார் என்றே கூறவேண்டும்.
இல்லை, வடக்கு மாகாணசபையை ஒதுக்கி, அதிகாரப்பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் கருதியிருந்தால், அதற்காக அவர் இன்னமும் பல படிகளைக் கடக்க வேண்டும்.
ஏனென்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாணசபையுடன் முரண்படும் நிலையில் இல்லை.
அவருடன் முரண்படாமல் செயற்படவே, வடக்கு மாகாணசபையும் விரும்புகிறது. இந்தநிலையில், வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பதற்காக கிளிநொச்சியில் ஒரு அலுவலகத்தை திறக்கப் போவதாகவும், வடக்கு மாகாணத்துக்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கப் போவதாகவும் பிரதமர் ரணில் கூறியிருக்கிறார்.
கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகத்தை அமைக்கவுள்ளதாகவும், வடக்கிற்கு விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது, வடக்கு மாகாணசபையை ஓரங்கட்டுவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அரசாங்கம், வடக்கிற்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையை பயன்படுத்திக் கொளளலாம்.
ஆனால், மாகாணசபையுடன் முரண்படும் ரணில், அந்த வழிமுறையைத் தவிர்க்கவே பார்க்கிறார்.
அதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவே இருக்கின்றனர்.
இப்படியான நிலையில், எதற்காக இன்னொரு விசேட பிரதிநிதி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தை மேலும் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணசபையின் முக்கியத்துவத்தைக் குறைத்தல் என்பது, அதிகாரப்பகிர்வை நிராகரிப்பதற்கு ஒப்பானது.
வடக்கு மாகாணசபையைப் பலப்படுத்துவதே அதிகாரப்பகிர்வாகப் பார்க்கப்படும் நிலையில், அதற்கு நிகரான புதிய அதிகாரக் கட்டமைப்புகளை மத்திய அரசாங்கம் வலுப்படுத்த முனைவது, சந்தேகங்களையே ஏற்படுத்தும்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில், மத்திய அரசாங்கத்துடன் அதிகம் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நம்பிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தநிலையில், இதுபோன்ற விடயங்களை பெரிதாக்கி, முரண்பாடுகளை தீவிரமாக்க விரும்பவில்லை.
அதேவேளை, இன்னொரு பிரச்சினையும் கூட்டமைப்புக்கு இருக்கிறது.
தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்ததும் கூட்டமைப்புத் தான்.
தாமே கொண்டு வந்த அரசாங்கத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்துவது தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் கூட்டமைப்புத் தலைவர்கள் அறிவார்கள்.
அதனால் தான், வடக்கு மாகாணசபையுடன் முரண்படும் ரணிலையும், அதிகாரப்பகிர்வைப் பலவீனப்படுத்தும் அவரது நகர்வையும் பொறுமையுடன் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பொறுமை எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும்? பொறுத்திருந்து பார்க்கலாம்.
சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr6D.html
Geen opmerkingen:
Een reactie posten