தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 april 2015

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பை சந்திரிகா செய்வாரா?

யோசித்தவின் வெளிநாட்டு பயிற்சிக்கு அரசாங்கத்தினால் 210 லட்சம் ரூபா!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 07:56.55 AM GMT ]
இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ச, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 லட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் சில காரணங்களினால் நீக்கப்பட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
யோசித்த ராஜபக்ச, கடற்படையில் இணைந்து கொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அவர் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த பணிப்புரைக்கு அமையவே யோசித்த ராஜபக்ச, இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவருடைய கல்விச்சான்றிதழ்கள் தொடர்பிலான ஆவணங்கள் அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இல்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

உதயங்க மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு நியமனம்- உதயங்க வீரதுங்கவின் கடவுச்சீட்டு ரத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 08:02.00 AM GMT ]
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உதயங்க வீரதுங்க தற்போது எங்கு இருக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாகவும் தேவையேற்பட்டால், சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடைகளில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் குறித்து பல்வேறு கதைகளை கூறிய போதிலும் பதவிக்கு வந்து 90 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை குறிப்பிட்டுக் கூற கூடிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சு பதவிகளை ஏற்பதும், அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்பது மாத்திரமே இதுவரை நடந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுத விற்பனை, உதயங்க வீரதுங்க மற்றும் விடுதலைப் புலிகளின் ஆயுத விற்பனை ஆகியவற்றுடன் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ என்ற கடும் சந்தேகம் சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது.
பதவிக்கு வந்ததும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் தொடர்பான விசாரணை தாமதமாகி வருவதால், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உதயங்க வீரதுங்க, ராஜபக்சவினர் நெருங்கிய உறவினர். ஸ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள், ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவரின் கொலை செய்யப்பட்டமை, உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் உதயங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்கவின் கடவுச்சீட்டு ரத்து
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையினருக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு உதயங்க வீரதுங்க ஆயுதங்களை விநியோகித்து வருவதாக புதுடெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் மூன்றாம் தரப்பொன்றின் ஊடாக இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் உதயங்கவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாகிஸ்தான் விஜயத்தின் பின்னர் நாடு திரும்பியதும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
மங்கள சமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரண்டு நாள் விஜயமாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பை சந்திரிகா செய்வாரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 08:09.58 AM GMT ]
நல்லிணக்கம் இல்லாவிட்டால் அரசின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
நல்லிணக்கம் என்பது எதைக் குறிக்கிறது என்ற தெளிவான வரையறையை சிங்களத் தலைமைகள் புரிந்துள்ளனவா? என்பது சந்தேகத்துக்குரியது.
இலங்கையில் இப்போது தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய அரசு மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்து நிலையும் உண்டு.
இலங்கையில் தேசிய அரசை அமைப்பதென்பது சாத்தியப்படாத விடயம் என எண்ணப்பட்டிருந்த போதிலும் இப்போது அது சாத்தியமாகியுள்ளது.
தேசிய அரசு என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லையாயினும் கூட்டமைப்பு ஆதரித்த ஒருவர் ஜனாதிபதியாக இருப்பதன் காரணமாக தேசிய அரசு அமைவதில் கூட்டமைப்பின் வகிபங்கும் உண்டு என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதிலேயே நல்லிணக்கம் ஏற்பட முடியும் என்பது இங்கு தெளிவாகிறது. தனித்து சிங்களக் கட்சிகள் சந்தர்ப்பவசமாக ஒன்றிணைந்து தேசிய அரசை அமைத்து விடுவதன் மூலம் நல்லிணக்கம் ஏற்பட்டு விடாது.
மாறாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் மூலமே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இங்கு வாழும் சகல இனங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது என்ற பிரசாரத்தை தேசிய அரசு முன்னெடுப்பது அவசியம். இதைச் செய்யாதவிடத்து தேசிய அரசு அமைந்து விட்டது எனப் பெருமிதம் கொள்வதால் எந்தப்பயனும் ஏற்படமாட்டா.
மாறாக பேரினவாதம் ஒழிக்கப்படுவதுடன் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து நிலை தென்பகுதியில் இருந்து வலியுறுத் தப்படுவதாக நிலைமை மாற்றியமைக்கப்படவேண்டும்.
இதன்போதே நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும். எனினும் தென்பகுதி இன்று வரை தமிழர்களின் பிரச்சினையை உணர்ந்து கொண்டதாகவோ, உள்வாங்கியதாகவோ தெரியவில்லை.
மாறாக மகிந்த ராஜபக்ச� எந்தத் தவறு செய்தாலும் அதுபற்றிப் பரவாயில்லை. அவரை மீண்டும் நாட்டின் தலைவர் ஆக்க வேண்டும் என்பதில் இப்போது அமைச்சர்களாக இருக்கின்ற பலர் உறுதியாக உள்ளனர்.
புதிய அரசின் தகவலின்படி, கோடிக்கணக்கான பணம் முன்னைய அரசால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. அரச நிதியில் நடக்கும் மோசடிகள் இராஜதுரோகத்திற்குரிய குற்றத்தைக் கொண்டவை.
நிலைமை இதுவாக இருக்கின்ற போதிலும் மகிந்த ராஜபக்�சவின் ஆட்சியே இந்த நாட்டில் பெளத்த சிங்கள ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் என்ற மன நிலை இருக்கும் வரை சந்திரிகா கூறும் நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியப்படமாட்டாது.
ஆக, தேசிய அரசின் முதற்பணி தேசிய ஒற்றுமையைக் கட்டிக்காப்பதாகும். தேசிய ஒற்றுமை கட்டிக் காக்கப்படவேண்டும் எனில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
இதற்கு முன்னதாக இலங்கை எல்லா இனமக்களுக்குமானது என்ற பிரசாரம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ஒலிப்பது அவசியம். இந்தப் பணியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்னின்று செய்வாராயின் அவர் எதிர்பார்க்கும் தேசிய நல்லிணக்கம் வெகு தூரத்தில் இல்லை.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr6H.html

Geen opmerkingen:

Een reactie posten