தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 april 2015

தேசிய அரசாங்கம் உருவாகக் காரணம் என்ன: அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்



நெடுந்தீவு வலிகளை பல நூற்றாண்டுகளாக சுமக்கின்ற மண்: தூர நோக்கோடு பல காரியங்களை ஆற்ற வேண்டியிருக்கின்றது: சிறீதரன்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 01:43.01 PM GMT ]
நாம் இன்று தூர நோக்கோடு பல காரியங்களை ஆற்றவேண்டியிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கடந்த தை மாதம் 28ம் திகதி நெடுந்தீவிற்கு விஜயம் செய்த போது அவரால் வழங்கப்பட்ட எட்டு துவிச்சக்கர வண்டிகள் மூன்று தையல் இயந்திரம் உட்பட பிரித்தானியாவிற்கான நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் வழங்கிய ரூபா நான்கு லட்சம் பெறுமதி கொண்ட 31(முப்பத்தியொரு) துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைக்கும் நிகழ்வு நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
இந்த மண் தொன்மைகள் நிறைந்த மண் ஆக்கிரமிப்பு வலிகளை பல நூற்றாண்டுகளாக சுமக்கின்ற மண் நெடுந்தீவு. பல கல்வியாளர்களையும் தமிழுலகம் போற்றும் தனிநாயகம் அடிகளையும் சமூக அக்கறையாளர்களையும் பெற்றெடுத்த மண்ணாக நெடுந்தீவு இருக்கின்றது.
அடிவருடிகளால் நெடுந்தீவு மண் நசுக்கப்பட்ட போது இந்த மண்ணின் தேசிய விசுவாசத்தால் அடிவருடிகளின் பிடியில் இருந்து விலகி தேசிய பற்றாளர்களோடு பயணிக்கும் காலத்தை தன்வசமாக்கியுள்ளது.
கட்டுமரங்களில் பயணித்து தம் வாழ்வை கட்டியெழுப்பிய வைரம்பாய்ந்த இந்த மனிதர்களால் இந்த மண் இன்னும் நிமிர்ந்து நிற்கின்றது.
இம் மண்ணின் புதல்வர்கள் உலகமெல்லாம் பரந்து வாழ்கின்றார்கள். பிரித்தானியாவில் வாழும் இந்த மண்ணின் மைந்தர்களின் அமைப்பான பிரித்தானிய வாழ் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நடராசா ராஜேந்திரம் இங்கே சாட்சியாக வந்தமர்ந்திருக்கின்றார்.
அவர்கள் தம் மண்ணை மறக்காமல் தங்கள் ஊர் மக்களுக்கு செய்கின்ற இந்த உதவிகளுக்கு நாம் தலைசாய்க்கின்றோம்.மாற்றத்துக்குள்ளாகி இருக்கும் இந்த நெடுந்தீவு மண் இன்னும் இனியும் தேசிய பற்றுணர்வோடு வெற்றிவாகை சூடுகின்ற மண்ணாக இருக்கவேண்டும்.
இங்கே எமது தேசிய மரமான வாகை காணப்படுகின்றது.இது இங்குள்ள மூதாதையர்களால் பல தசாப்தங்களுக்கு முன் நாட்டப்பட்டது. இன்று அது பெருமைக்குரிய மரமாக எம்முன்னே நிமிர்ந்து நிற்கின்றது.
நாம் தூரநோக்கோடு இன்னும் பல காரியங்களை ஆற்றவேண்டியிருக்கின்றது.நாம் எல்லோரும் சேர்ந்து அந்த பணியை ஆற்றுவோம்.வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நெடுந்தீவு மக்களின் பணியில் அக்கறையாக இருக்கின்றார் அவருடன் கைகோர்த்து இந்த மண்ணை உயர்த்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வானது வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்லூரி அதிபர் சாரதாதேவி கிருஸ்ணதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரித்தானியா வாழ் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத் தலைவர் நடராசா இராஜேந்திரம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp1A.html

மகிந்தவின் தோளில் ஏறி பயணிக்க முயற்சிக்கும் சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சி: அனுர பிரியதர்ஷன யாப்பா
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 02:08.14 PM GMT ]
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அதேவேளை 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலைவர், அரசின் தலைவர் தொடர்பாக பிரச்சினைகள் இருப்பதாகவும் திருத்தச் சட்டத்தின் 8வது ஷரத்தில் அமைச்சரவையின் பிரதானி பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனால், அது பிரச்சினைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நிமால் சிறிபால டி சில்வா தகுதியானவர். கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கி காலத்தில் கட்சியை காப்பாற்ற அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்.
சுதந்திரக் கட்சியின் சிலர் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட போதிலும் நாடாளுமன்றத்தில் சுதந்திரக் கட்சிகே அதிகளவான உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சுதந்திரக் கட்சி வகிப்பதில் சிக்கல்கள் இல்லை. எனினும் சபாநாயகர் எதிர்வரும் 7 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தொடர்பில் தீர்மானம் ஒன்றை வழங்குவார்.
புதிய அரசாங்கத்தின் பிரதமர் நியமிப்பு குறித்து கேள்விகளை எழுப்பாத பலர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் எவரும் சட்டரீதியான கேள்விகளை எழுப்பவில்லை, அது தொடர்பாக நானே முதலில் கேள்வி எழுப்பினேன் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்துவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேம ஜயந்த, இதுவரை மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தாங்களே குரல் எழுப்பியதாகவும் இதற்கு முன்னர் எவரும் அவ்வாறு அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியதில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, மகிந்த ராஜபக்சவின் தோளில் ஏறி செல்ல முயற்சித்து கொண்டிருக்கும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் உருவாகக் காரணம் என்ன: அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 02:11.12 PM GMT ]
மகிந்தவின் மறு அரசியல் பிரவேசத்தை தடுக்கவே தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டிய தேவை எழுந்ததாக அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது,
இந்தத் தேசிய அரசாங்கம் உருவாக்கத்திற்கான காரணம் சீனா இலங்கையில் மீண்டும் செல்வாக்குச் செலுத்ததாத வகையில் பலமான அடித்தளத்தைப் போடுவதாகும்.
இதனால் இந்திய  மேற்குலகக் கூட்டுத் தான் இந்தத் தேசிய அரசாங்க முயற்சிகளுக்குப் பின்னால் நின்றிருக்கிறது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து இந்தத் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமைக்கு அது உதவியுள்ளது.
அண்மைக் காலமாக இந்திய மேற்குலகக் கூட்டுப் பல வேலைத்திட்டங்களை இதற்காக நகர்த்தி வருகின்றது.சர்வதேச விசாரணை அறிக்கை வெளியிடுதலைப் பிற்போடுதல், இராணுவ ரீதியாக சீனாவிற்குப் பயன்தரக் கூடிய துறைமுக அபிவிருத்தியை நிறுத்துதல், நிறுத்தி வைக்கப்பட்ட ஜி.எஸ்.பி சலுகையை மீளவழங்குதல்,
சீனாவை மேவும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், மைத்திரியின் இந்தியா, பிரித்தானியாப் பயணங்களும் அங்கே இடம்பெற்ற பிரம்மாண்டமான வரவேற்புக்களும் (இந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும் இணைந்து வரவேற்றமை,
பிரித்தானியப் பிரதமர் மைத்திரியின் வாகனத்தடிக்கே வந்து தானே கதவைத் திறந்து வரவேற்றமை, மகாராணியாரும் சந்தித்துக் கையுறை கழட்டிக் கைலாகு கொடுத்தமை) என்பவையெல்லாம் சீனச் செல்வாக்கினை அகற்றுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டன.
முன்னர் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும்,இந்தியாவும் தங்களுக்குச் சார்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தன. இதனால்,அவை பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியப்பாடுகளை எட்டவில்லை. புலிகளுடனான யுத்த நிறுத்த நடவடிக்கைகள் இதனால் தான் தோல்வியுற்றன. இந்தியா அதனை விரும்பாமையே பிரதான காரணமாகும்.
இந்தியா தன்னை மேவி எதுவும் இலங்கையில் நடைபெறுவதை விரும்பவில்லை.
2005 ஆம் ஆண்டு மகிந்தர் ஜனாதிபதியான பின்னர் இந்தப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாகச் சீனாவின் செல்வாக்கினை அகற்ற வேண்டிய தேவை இரண்டு தரப்புக்குமே தேவையாக இருந்தது.
இரண்டு தரப்பும் இணைந்த வேலைத்திட்டம் இல்லாமல் இவை சாத்தியமாகாது என்கிற விடயமும் இரண்டு தரப்புக்கும் நன்றாகவே தெரியும். இதனால், இணைந்த வேலைத்திட்டத்தினைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றன. ஆட்சி மாற்றத்துடன் அதனை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றன.
சீனாவிற்கும் கேந்திர இடத்தை விட்டுக் கொடுக்க முடியாதாகையால் அது அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சியை ஊக்குவித்தது. மகிந்தரும் ஆரம்பத்தில் தான் அரசியலுக்கு வரப் போவதாகக் கூறவில்லை.
ஆனால் தனக்குச் சார்பான நுகேகொட, கண்டிக் கூட்டங்கள் கையெழுத்துப் போராட்டம், அவரது இல்லத்திற்கான மக்கள் படையெடுப்பு என்பவற்றிற்குப் பின்னர் அவர் பகிரங்கமாகவே அரசியலுக்கு வரப் பொவதை அறிவித்திருந்தார்.
அதனுடன் மட்டும் நின்று விடாது சுதந்திரக் கட்சியின் மேல்மாகாண உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களை வரவழைத்துக் கூட்டமொன்றையும் நடாத்தியிருந்தார். மேல்மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 528 பேரில் 409 பேர் இதில் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் தான் கட்சிப் பணிகளுக்கு வருமாறு மகிந்தருக்கு மைத்திரி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மைத்திரிக்கு ஏற்பட்டது.இந்த நிலையில் தான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக இந்தியக் கூட்டு மேலும் விழித்துக் கொண்டது.
தேசிய அரசாங்கம் உருவாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு நிமிடமும் சீனாவின் செல்வாக்கினை அகற்றுதல் என்ற தமது இலக்கிற்கு ஆபத்து வரும் எனக் கருதியது.
அவசர அவசரமாக முயற்சி செய்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மகிந்தரின் முயற்சிகளுக்குத் தற்காலிக அணையைப் போட்டுள்ளது. அரசியல் வாதிகளுக்குத் தடையைப் போட்டு விட்டால் மக்களுக்கு உள்ளூர்த் தலைமை இல்லாமல் போய்விடும்.
மக்களும் சற்று அமைதியாகி விடுவார்கள். இது மக்களிடம் மனமாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் உதவியாக அமைந்து விடும். மக்களின் மனங்களை மாற்றுவதற்கு ஐரோப்பிய அரசு சார்பற்றவர்களை, நிறுவனங்களைக் களமிறக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
இன்னோர் பக்கத்தில் இராணுவத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் தேசிய அரசாங்கம் அவசியமாகின்றது. இராணுவத்திற்குரிய அரசியல் பலத்தினை இல்லாமல் செய்வதே இதற்குப் பின்னாலுள்ள நோக்கம். இதற்கப்பால் இராணுவம் பறித்த காணிகளில் சிலவற்றையாவது தமிழ்மக்களிடம் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இந்திய மேற்குலகத்துக்கு இருக்கின்றது.
இல்லையேல் தமிழ்த் தேசிய மீளெழுச்சியைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும். இந்தக் காணி கையளிப்பதற்கும் இராணுவம் தடையாகவிருக்கின்றது. வசாவிளான் நிகழ்வுகள் இதற்குச் சிறந்த உதாரணம். அங்கு மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுக்கக் கற்தூண்களைக் கொண்ட பாதுகாப்பு வேலியைப் படையினர் அமைக்கின்றனர்.
தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமையினால் பாராளுமன்றத் தேர்தலும் பிற்போடப்படலாம். மக்கள் தீர்ப்புத் தேர்தலை நடாத்திப் பாராளுமன்றத்தின் காலவெல்லையை இன்னோர் பதவிக் காலத்திற்கு நீடிக்கச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தேர்தலில் மகிந்தர் தரப்பு வெற்றி பெறக் கூடிய சூழல் இருந்தால் இந்திய மேற்குலகக் கூட்டு தேர்தலை நடாத்த விடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp1C.html

Geen opmerkingen:

Een reactie posten