தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

மீண்டும் திறக்கப்பட்டுள்ளது சுன்னாகம் நோதேர்ன் பவர் மின் நிறுவனம்?

மகிந்த எனக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தார்: சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:19.05 PM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பொல நகர சபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தகவலுக்கு மேல் தகவல் வந்துகொண்டிருந்தது.
2000 மில்லியன் பணம் தருகிறேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகிறேன், ஜெனரால் அதிகாரத்தை மீண்டும் தருகிறேன், பாதுகாப்பு வழங்குகின்றேன்,
மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதை செய்து தருகிறேன் என தகவல் வந்துகொண்டே இருந்தது. ஆனால் அதனை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
நாட்டை பற்றியே சிந்தித் காரணத்தினால் நாங்கள் யாரிடமும் மண்டியிடவில்லை. சிறையில் இருந்தாலும் மண்டியிடவில்லை. ஆனால் இன்று ராஜபக்ச மண்டியிட்டுள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:48.33 PM GMT ]
யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இதே மாநகர சபையினால் யாழ்.பேருந்து நிலையத்தில் ஒலிபரப்பு சேவை ஒன்றினை ஈ.பி.டி.பியின் மகேஷ்வரி நிதியத்திற்கு சட்டத்திற்கு மாறாக வழங்கிய விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இன்றைய தினம் வடமாகாண சபையின் 27வது அமர்வு இடம்பெற்ற நிலையில் குறித்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர்களான பரஞ்சோதி மற்றும் விந்தன் ஆகியோர் மேற்படி ஒலிபரப்பு சேவை யாருக்கு வழங்கப்பட்டது? எவ்வாறு வழங்கப்பட்டது? என உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மாநகர சபையின் ஆட்சிக்காலம் கடந்த ஆண்டு 8ம் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 7ம் மாதம் 31ம் திகதி 2014ம் ஆண்டு குறித்த ஒலிபரப்பு சேவையினை மகேஷ்வரி நிதியத்திற்கு வழங்குவதற்காக சபையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்த அதன் ஊடாக மகேஷ்வரி நிதியத்திற்கு வழங்கியமையும்,
இதற்காக மாநகர சபையின் கட்டளைச்சட்டத்தின் உபவிதிகளின் படி ஒப்பந்தம் எதனையும் செய்திருக்காமையும் தமக்கு அறிக்கை மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் மற்றும் பரஞ்சோதி ஆகியோர்,
மகேஷ்வரி நிதியம் குறித்த ஒலிபரப்பு சேவையினை குத்தகைக்கு எடுத்து மீண்டும் ஒரு உப குத்தகையினை இலங்கையின் முன்னாள் அரசுக்கு ஒத்தூதும் ஊடகத்தில் பணியாற்றும் மேல் நிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர். எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சபையில் சுட்டிக்காட்டினர்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktzD.html


மீண்டும் திறக்கப்பட்டுள்ளது சுன்னாகம் நோதேர்ன் பவர் மின் நிறுவனம்?
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 12:48.36 PM GMT ]
சுன்னாகத்தில் உள்ள நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனத்தை காலவரையறையின்றி மூடவும், அதன் ஊழியர்களை வெளியேற்றவும் மல்லாகம் நீதவான் நீதிமன்று கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.
அதன் பிரகாரம் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தமது நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நோதேர்ன் பவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜனவரி 27 ஆம் திகதியன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவு சட்டத்துக்கு முரணானது என்பதனை நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
எங்களது மனுவைத் தொடர்ந்து, முற்றுமுழுதான நுழைவுரிமை வழங்கப்பட்டு, இடையறா உடைமையுரிமை, தேவைப்படும் சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கல் என்பனவற்றுக்கான அனுமதியை மீள வழங்கி, இந்நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து முடக்கப்பட்ட இச்செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.
இவ்வத்தரவு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மற்றும் யாழ்.மேல் நீதிமன்றம் என்பனவற்றுக்கு முறையே அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது
அத்துடன் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதியன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு பிரதிவாதிகள் 11 பேருக்கும் மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதியன்று நோதேர்ன் பவர் நிறுவனத்தின் மீளாய்வு மனுவினை ஏற்றுக்கொண்ட யாழ் மேல் நீதிமன்றம், சுன்னாகம் நோதேர்ன் பவர் நிறுவனத்தில் இருந்து அதன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டமையை கண்டித்து அவர்கள் வழமைபோல வேலைக்குச் செல்ல அனுமதியளித்தது.
ஆனால் அந்நிறுவனத்தின் மின் உற்பத்திச் செயற்பாடுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இத்தீர்ப்பின் பொருள் விளக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இந்நிறுவனத்தினை மீள மூடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது.
யாழ்ப்பாண மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் வருந்தத்தக்க நீர்மாசடைதல் செயற்பாடுகளில் அதன் ஆரம்பம் முதற்கொண்டே நோதேர்ன்பவர் நிறுவனம் எந்த விதத்திலும் தொடர்பினைக் கொண்டிருக்க வில்லையாதலால், தனது மின் உற்பத்திச் செயற்பாடுகளுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
“எங்கள் பிரதான நோக்கம் பொதுவாக வடக்கிற்கும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் சேவை செய்வது என்பதாகும். நோதேர்ன் பவர் என்ற வகையில், சுயநல சக்திகளால் முன்வைக்கப்படும் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக மறுக்கிறோம்.
நீதிமன்றம் ஒரு குற்றச்சாட்டையேனும் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து வேறொரு இடத்தில் நீர் மாசடைந்துள்ளது என்றே சுட்டிக்காட்டுகின்றன,” என்று எம்ரிடி வோகர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா முன்னர் வலியுறுத்தியிருந்தார்.”
எந்தவொரு கம்பனியோ தனியாரோ யுத்த நிலைமை காரணமாக வடபகுதியில் ஒரு முதலீட்டு திட்டத்தை ஆரம்பிக்க விரும்பாதிருந்த காலத்தில் நோதேர்ன் பவர் 2007ஆம் ஆண்டில் மக்களுக்கு அவசியம் தேவைப்படும் மின்சாரத்தை வழங்குவதற்காக பல ஆபத்துக்களுக்கு மத்தியிலும் இந்த மின் உற்பத்தி ஆலையை நிறுவ ஆரம்பித்தது.
2009ஆம் ஆண்டில் இந்த ஆலையில் மின்சார உற்பத்தி ஆரம்பமானது. 15 வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி பல கஷ்டங்களை அனுபவித்து வந்த பெரும் தொகையான யாழ்ப்பாண மக்கள் இதன் பயனாக தங்கள் வீடுகளுக்கு மின்சார வசதியைப் பெற்றார்கள்.
அவ்வேளையில் வேறு மார்க்கம் எதுவும் இல்லாததால் நாம் மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு பெருமளவு மின்சாரத்தை வழங்கினோம். அநேகமாக 2012ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் தேசிய மின் வலையமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தப்படாதிருந்தது.
எமது கம்பனி அவ்வேளையில் குறிப்பாக வீதிப் போக்குவரத்து இல்லாதிருந்ததால் பல கஷ்டங்களை எதிர்கொண்டது. விமான மார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாக மட்டுமே சகல கட்டுமான பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது என்றும்  பெரேரா தெரிவித்தார்.
மின் உற்பத்தி ஆலை முறைப்படி தேவையான சகல சுற்றாடல் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடனும் வருடாந்த அங்கீகாரத்துடனும் காலாண்டுக்கு ஒரு தடவை சோதினையிடப்டபட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது.
துரதிஷ்டவசமாக, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் நிலத்தின் கீழ் விடப்படுகிறது என்பதும் இதனால் பல கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள கிணறுகளில் நீர் அசுத்தமடைகிறது என்பதுமே குற்றச்சாட்டாகும்.
ஆனால் எமது கழிவு எண்ணெய் அனைத்தும் மேலே உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்டு மூன்றாவது தரப்பினரால் அங்கிருந்து அகற்றப்படுகின்றது. கழிவு எண்ணெய் சிறிதளவேனும் நிலத்தினுள் விடப்படுவதில்லை.
கழிவு எண்ணெய் எரி உலைகளுக்கு பயன்படுத்தப்படுவதற்காக நல்ல விலையில் விற்பனை செய்யப்படுவதால் கம்பனி இதனை விற்பனை செய்து நல்ல வருமானத்தையும் பெற்றுக் கொள்கிறது. இந்த கழிவு எண்ணெயை வீணே நிலத்தினுள் விட்டு நல்ல வருமானத்தை இழக்க கம்பனி தயாராக இல்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகிறோம்.
கழிவு எண்ணெயை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறும் ஒரு வர்த்தக கம்பனியான எமது நிறுவனம் அதனை வீண்விரயம் செய்து இங்கு குற்றம்சாட்டப்படுவது போன்று எதற்காக பெறுமதிவாய்ந்த கழிவு எண்ணெயை வீணே வீசவேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், யாழ்ப்பாணம் இப்பொழுது தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் மின்சார பாவனை அதிகரித்திருக்கும் வேளையில் மட்டுமே எமது மின்உற்பத்தி ஆலை செயற்படுத்தப்படுகிறது.எனவே இந்தக் குறுகிய நேர செயற்பாட்டினால் வெளிவிடப்படும் கழிவு எண்ணெயினால் 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிணறுகளின் நீரை மாசுபடுத்த முடியாது.


“எவ்வாறாயினும் ஒரு முக்கிய விடயத்தை நாம் கூறவேண்டும் நோதேர்ன் பவர் செயற்பட ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்ட மின்னுற்பத்தி ஆலை வளவினுள் ஒரு பாரிய எண்ணெய்க் குதம் இருந்தது.
இந்தக் குதத்தில் தேங்கியிருந்த பெருமளவு எண்ணெய் கூகிள் படங்களில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அந்தப் படம் முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து 2012ஆம் ஆண்டளவில் இந்தப் பிரதேசம் மண் நிரப்பப்பட்டு அரசாங்கத்தினால் புதியதொரு உபமின் நிலையம் அமைக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக அங்கிருந்த பாரிய எண்ணெய்க் குதத்தில் தேங்கியிருந்த பெருமளவு எண்ணெய்க்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இன்று வரை எவருமே கேள்வி எழுப்பவோ ஆராயவோ தயாராக இல்லை.”
“இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய சகல தேவைகளையும் நிறைவேற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் எங்கள் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதற்காக எமக்கு தெரியாத உள்மறைவான நோக்கத்தடன் ஏதோ ஒரு சக்தி பிரதேச மக்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறது என்பதே எமது உறுதியான கருத்தாகும்.
சுன்னாகம் மின் ஆலையினால் யாழ்ப்பாண மக்கள் பெருமளவு பயனைப் பெற்று வருகிறார்கள். இந்த ஆலையின் சுமுக செயற்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தி மின்விநியோகத்தை பாதிக்கச் செய்வது வடபகுதியின் செயற்பாடுகளுக்கு இடர்விளைவிப்பதாக அமையும் என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது”எனவும் அவர்  தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUktzE.html

Geen opmerkingen:

Een reactie posten