இலங்கையிலிருந்து நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினர் மீண்டும் இலக்குவைத்து பகிரங்கமாக பழிவாங்கப்படுவதற்கான ஆயத்தங்களா என்ற அச்ச நிலையை உருவாக்குகிறது. இதற்கு வசதியாக அவசரகாலச் சட்டத்தை இலங்கையில் மீண்டும் வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழ் அமைப்புக்களைத் தடைசெய்துள்ளன. அந்த அமைப்புக்கள் தொடர்புடைய சுமார் 400 பேரின் பெயர் விபரங்களையும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தரப்பினருடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் புதிய தலைவர்கள், குற்றவாளிகள் என்ற போர்வையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. வடக்கில் மீளவும் இராணுவ மினி முகாம்கள் முளைக்கின்றன. பாஸ் நடைமுறைகள் அமுலுக்கு வருகின்றன. வீடு வீடாக என்று விபரங்களைச் சேகரிக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.
இவ்வாறு திடீரென அரசாங்கம் செயல்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கருப்படுகிறது. ஒன்று ஜெனீவாவில் அடைந்த தோல்வி. மற்றையது அதனைக் காட்டி பிரசாரம் செய்தபோதிலும் கூட தேர்தலில் அடைந்த பின்னடைவு.
இதில், மாகாண சபைத் தேர்தலுக்கு ஒருமாத காலத்திற்கு முன்னரே ஆளும் கட்சி தேர்தலில் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்தரப்பினருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதனால் சற்று குழம்பிய அரசாங்கம், வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, புலிகளின் மீள் உருவாக ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் பல செய்திகளை வெளியிட்டன. ஜெனீவா பிரேரணை நாட்டு எதிரான சதியாகவும் தேர்தல் மேடைகளில் அரசாங்கம் பிரசாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது.
இறுதியாக நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் போது, ஜெனிவா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். இறுதியாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்கூட, ''28ஆம் திகதி ஜெனீவாவில் தோற்பதில்லை எனக்கு கவலை இல்லை. 29ஆம் திகதி இங்கு வெல்வதே மிகமுக்கியமானது'' எனக் கூறி தேர்தல் பிரசாரத்தை மகிந்த ராஜபக்ஷ முடித்துவைத்திருந்தார்.
இலங்கை தேர்தல் வரலாற்றில் அரச அதிகாரிகளும், அரச வளங்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தேர்தலாக 2014ஆம் ஆண்டு இந்தத் தேர்தலை தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் இருக்கும் இந்த அரசாங்கம் பலத்தை இழகக்கூடும் என்ற எச்சரிக்கையே இந்தத் தேர்தலின் முடிவுகள் சொல்லியுள்ளன.
ஜெனீவா தீர்மானம் இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்தாது என்பது உறுதியான விடயம் தான். ஆனால், இலங்கையின் எதிர்கால செயல்பாடுகள், முக்கிய தரப்பினருக்கான பயணத் தடை, கொடுக்கல், வாங்கல் தடைகள் விதிக்கப்படக்கூடிய நிலை இருக்கின்றது.
யுத்தத்தைக் காரணம் காட்டி, ஆட்சி அதிகாரத்தை நீடித்துக் கொண்டபோதிலும், எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்தை நீடித்துக்கொள்வதற்கான போதிய காரணமோ, நிலைத்து நிற்பதற்கான வலுவான தளமோ மகிந்த அரசாங்கத்திற்கு இல்லாதிருப்பதை தென் இலங்கை அரசியல் உணர்த்துகிறது. எனினும், பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாடு முன்னேற்றமடைவதாக அரசாங்கம் கூறினாலும், அந்த முன்னேற்றத்தை மக்கள் இதுவரை தமது தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவிப்பதாகத் தெரியவில்லை.
அடுத்த பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் வரும்போது, அதில் வெற்றிபெறுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு வலுவான ஒரு பிடி தேவையாக இருக்கிறது. கடந்த கால தேர்தல் முடிவுகளுடன் எதிரணிக் கூட்டணி ஒன்று சேரும்பட்சத்தில் அரசாங்கத்தின் பிடி இன்னமும் பலவீனமாகும்.
சிங்கள மக்களை அரசாங்கப்பக்கம் முழுமையாக இழுத்து ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் சமூகம் பலியாக்கப்படலாம் என்ற அச்ச நிலை இருக்கிறது. இதற்காகவே கடந்த காலங்களில் அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளரின் அனுசரணையுடன் இயங்கிய பௌத்த பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தை நேரடியாகத் தாக்கியபோதும், அதனை அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அரசாங்கமும், சிங்களப் பேரினவாத சக்திகளும், முஸ்லிம் சமூகம் குறித்து சிங்கள மக்களிடம் விதைத்த விஷம், இன்று முளைக்க ஆரம்பித்துள்ளது. அது தற்போது அடங்கியிருந்த போதிலும், அந்தத் தீயை அரசாங்கத்தினால் இலகுவாக பற்றவைக்கக்கூடிய நிலையும் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில், குறிப்பாக வடக்கில் அரசாங்கம் மேற்கொண்ட மோசமான செயல்பாடுகளைவிடவும், எதிர்காலத்தில் மிகமோசமான சம்பவங்களை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதிகாரத்தை இழப்பது என்பது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் நிலையை மகிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குறிப்பாக ஜே.வி.பி, சரத் பொன்சேக்கா கட்சிகள் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தார் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கங்கணம் கட்டி போராடி ஆரம்பித்துள்ளன.
இறுதித் தேர்தலில் உயிர்பெற்ற ஜே.வி.பி எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய நிலையும் இருக்கிறது. அதனை ஆரம்பத்திலேயே தகர்த்தெறியவதற்கு இந்த அவசரகாலச் சட்டம் அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது.
இதற்காக வடக்கு கிழக்கில் புலித் தோல் போர்த்திய நரிகர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு அங்குள்ள இளைஞர்களும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் கைதுசெய்யப்படலாம். முஸ்லிம் மக்கள் மீதான மத ரீதியான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கப்படலாம். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதிகார மையத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்த இரண்டு கல்களினால் காய் வீழ்த்தினாலும் வியப்படைவதற்கில்லை.
இதற்காக அரசாங்கம் தற்போது இருப்பதைவிட மிகக் கடுமையான அரசியல் நகர்வுகளையும், நாடகங்களையும், நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக் கூடும்! இது ஆரம்பம் மட்டுமே!
ஹரேந்திரன் |
Geen opmerkingen:
Een reactie posten