தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

புலிக் கதை அரசின் நாடகமே!- விக்கிரமபாகு கருணாரட்ன

வில்பத்து அழிவுக்கு காரணம் அரசு! முஸ்லிம்கள் அல்ல: ஜே.வி.பி
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 06:43.40 AM GMT ]
நாட்டில் உள்ள நிலங்கள், சொத்துக்கள் அனைத்து நாட்டில் வாழும் சகலருக்கு சொந்தமானது என ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என யாராக இருந்தாலும் அனைவருக்கும் இவை சொந்தமானவை.
குடியிருக்கவும் காணிகள் வேண்டும். உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் காணிகள் வேண்டும். இதனை அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும்.
காணியற்ற மக்களுக்கு காணியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இதனை நிறைவேற்ற வேண்டும்.
சரியான முறையில் காணிகளை மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
வில்பத்து வனம் அழிந்து போகிறது என்றால் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமே அன்றி அப்பாவி முஸ்லிம் மக்கள் அல்ல.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது முஸ்லிம் மக்களுக்கோ வேறு நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரயோசனமில்லை.
பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்களை பாதுகாத்து கொள்வது போல் காணியற்றவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் லால் காந்த கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjwy.html
புலிக் கதை அரசின் நாடகமே!- விக்கிரமபாகு கருணாரட்ன
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 06:36.22 AM GMT ]
இந்தியாவின் உதவி இல்லாமல், தமிழர் தரப்பால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு செல்ல முடியாது.எனவே, மீண்டும் புலி உருவாக்கம் என்று அரசு அச்சம் கொள்வதானது அரசியல் நோக்கங்களுக்காக அரங்கேற்றப்படும் நாடகமாகும் என்று நவ சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அரச தரப்பிலிருந்து கூறப்படுவது தொடர்பில் நேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறும் போது,
புலிப்பூச்சாண்டி காட்டிதான் இந்த அரசு இதுவரை காலமும் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்தது. தற்போது புலி அச்சம் குறைந்துள்ள நிலையில், மோசடி அரசின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் குறைந்து வருகின்றது. நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல் இதற்குச் சிறந்த சான்றாகும்.
எனவே, மீண்டும் புலிப் பீதியை கிளப்பிவிட்டு, சிங்கள, பெளத்த வாக்குகளை சூறையாடுவதுதான் அரசின் நோக்கமாகும். அதற்காகத்தான் இந்தப் புலி நாடகம். அடுத்த ஜனாதிபதித் தேர்தல்வரை இந்த நாடகம் ஓடும்.
மீண்டும் புலிகள் உருவாவதற்கான சாத்தியம் இல்லை. இந்தியாவின் ஆதரவு இருந்தால் மாத்திரமே தமிழர் தரப்பால் மீண்டுமொரு முறை ஆயுதப் போராட்டத்துக்குச் செல்ல முடியும். இது தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.
கொழும்பு துதிபாடும் டில்லி இனியும் ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்காது. உலகமும் அதை ஏற்காது. எனவே அரசு புலிக்கதை கூறுவது அரசியல் நோக்கங்களுக்காகும். இதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு மக்கள் தமக்குரிய ஜனநாயக உரிமைகளையே கோருகின்றனர். இதை மஹிந்த அரசு நிச்சயம் வழங்கவேண்டும். இதை வழஙக மறுப்பதால்தான் இந்த நாட்டுக்கு நல்லிணக்கம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjv7.html

Geen opmerkingen:

Een reactie posten