தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

கேள்விக்குறியாகியுள்ள தாயக உறவுகளின் பாதுகாப்பு

வடமாகாண முதலமைச்சர் சார்பாக முன்னிலையாக சட்டத்தரணிகள் மறுப்பு!
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 06:01.19 AM GMT ]
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முதலமைச்சர் சார்பில் முன்னிலையாகுவதற்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், தனது பதவி நீக்கத்திற்கு எதிராகக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வலி.கிழக்குப் பிரதேசசபையின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூவரை உள்ளடக்கிய குழுவினர் வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தனர்.
குறித்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 19 ம் திகதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது பிரதிவாதிகள் யாரும் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனையடுத்து வழக்கு ஏப்ரல் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் பிரதிவாதிகள் அனைவரையும் மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த 4 ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே சட்டமா அதிபர் திணைக்களத்தினர், முதலமைச்சர் சார்பிலான பிரதிவாதிகளுக்காக தாம் மன்றில் முன்னிலையாக மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.
இதனால் அன்றைய தினமும் பிரதிவாதிகள் முன்னிலையாகவில்லை. அத்துடன் வழக்கு அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWes1.html
கேள்விக்குறியாகியுள்ள தாயக உறவுகளின் பாதுகாப்பு
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 03:26.52 PM GMT ] [ valampurii.com ]
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் 424 பேர் இலங்கை வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள தான அறிவித்தல், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.
தடைசெய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் 424 என்ற எண்ணிக்கையுடன் முற்றுப் பெறுமா? அல்லது இன்னும் பலரின் பெயர்கள் வர்த்தமானியில் வெளிவருமா? என்ற ஐயப்பாடுகளே குழப்பநிலைக்குக் காரணம் எனலாம்.
இத்தகையதொரு குழப்பநிலை வெளிநாடுகளில் இருக்கக் கூடிய எங்கள் உறவுகளின் தாயக வருகைக்கு நிச்சயம் தடை விதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் இலங்கைக்குச் செல்லும் போது அங்கு வைத்துத் தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற பயங்கரமான களநிலைமை 424 பேரின் தடையுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த முதலீட்டு முயற்சிகள் முற்றுமுழுதாகத் தடைப்பட்டுப் போகும் என்பதும் நிறுத்திட்டமான உண்மை.
புலம்பெயர் தமிழர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்ற அரசின் அறிவித்தல்கள் முன்னதாக வெளிவந்திருந்தாலும் ஜெனிவாத் தீர்மானத்துக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் 424 பேர் இலங்கைக்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது என்ற அரசின் அறிவித்தலின் ஊடாக, முதலீட்டு முயற்சிகள் கைவிடப்படும் கட்டத்தை எட்டியுள்ளன.
அதேநேரம் அரசினால் தடை விதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நிலைமை குறித்தும் நாம் சிந்திப்பது அவசியம்.
வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரை தமிழ் மக்களின் இன்றைய வாழ்வாதாரம் என்பது புலம்பெயர் தமிழர்களின் உதவியாக மட்டுமே இருக்க முடியும்.
வேலைவாய்ப்புப் பெறுவதற்கான நிறுவனங்கள் இல்லை. விவசாயச் செய்கை என்பது தமிழர் தாயகத்தில் நட்டம் அடைவதற்கான ஒரு தொழில் முயற்சியாக மாறிவிட்டது. அதே நேரம் வடக்கு கிழக்கில் உற்பத்தி நிறுவனங்கள் ஏதேனும் உருவாக்கப்பட்டதான தகவல்களும் இல்லை.
இதுதவிர தென்பகுதி வர்த்தக, நிதி நிறுவனங்கள் எங்களிடம் இருந்த தேட்டத்தையும் உறிஞ்சி எடுத்து விட்ட நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நம் உறவுகள் ஏதேனும் உதவினால் தான் சீவியம் நடக்கும் என்பது நிதர்சனமாயிற்று.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது; வாழ்வாதாரத்திற்கு நிதி கொடுத்தவர்கள் இங்கு வரமுடியாது என்றால், அவர்களோடு தொடர்புகளை வைத்திருப்பது,அவர்களின் நிதி உதவியை பெறுவது, அவர்களின் பெயரில் இங்குள்ள அசையும் அசையாச் சொத்துக்களைப் பராமரிப்பது என அனைத்தும் பிரச்சினைக்குரியவை என்ற சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளன.
இவையாவற்றுக்கும் மேலாக இலங்கைக்கு வரத் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழர் தம் உறவுகளின் பாதுகாப்பு என்பதும் அச்சமான விடயமாகவே இருக்கிறது.
எனவே நம் புலம்பெயர் உறவுகளை இலங்கைக்கு வரத்தடை விதித்ததன் மூலம், எங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் அன்னியப்படுத்தும் திட்டமொன்று அரங்கேறியுள்ளது என்பதை மட்டும் இப்போது உறுதிபடச் சொல்ல முடியும்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWevy.html

Geen opmerkingen:

Een reactie posten