துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் செய்தியாளர்கள் இலங்கை பத்திரிகை சபையின் இணையத்தின் ஊடாக முறையிட முடியும் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய திட்ட நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஊடகத்தின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே தாம் துன்புறுத்தப்படுவதாக கூறும் செய்தியாளர்கள் இலங்கை பத்திரிகை சபையின் இணையத்தளமான www.slpc.lk ஊடாக முறையிடமுடியும் என்று தேசிய நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளின்படி செய்தியாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றமையானது சட்டவிரோதமான செயல் என்ற அடிப்படையில் விசாரணைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தேசிய நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இலங்கையில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இது தொடர்பாக பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், ஊடகம் தொடர்பான யோசனைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETaLWep7.html
Geen opmerkingen:
Een reactie posten