விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பில் இருந்தவர்களில் கலையன் என்பவரும் ஒருவர் ஆவார். திருகோணமலையைச் சேர்ந்த இந்தக் கலையன், புலனாய்வு நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு மீண்டும் புலிகளால் அனுப்பப்பட்டவர். திருமலை மாவட்டத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக எழிலன் மற்றும் படைத்துறைப் பொறுப்பாளராக சொர்ணம் கடமையாற்றிய காலப் பகுதியில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். அந்த மாவட்டத்தின் புலனாய்வுப் பொறுப்பாளராக வசந்தன் கடமையாற்றிய நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் கலையன் தொழிற்பட்டதாகவும், சிங்களம் தமிழ் மொழிப் பரீட்சயம் காரணமாக திருமலையில் பணியாற்றியதோடு தென்பகுதி நடவடிக்கைகளோடும் இணைந்து செயற்பட்டுள்ளார். இவ்வாறு புலனாயவு நடவடிக்கைகளோடு இணைந்திருந்த கலையன் தனது குடும்பத்தவர்களையும், திருகோணமலையிலேயே தங்க வைத்திருந்தார்.
இதேவேளை இறுதியுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில், தனது குடும்பத்தை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தார். புலிகளுடன் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே இராணுவத்திற்கும் தகவல்களை வழங்கும் இரட்டை உளவாளியாக இவர் கடமையாற்றி இருக்கலாம், என்ற சந்தேகங்கள் பின்னர் வலுப்பெற்று இருந்ததாக, இவருக்கு நெருக்கமான திருகோணமலையைச் சேந்த முன்னாள் புலனாய்வுப் போராளி ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பணியில் ஈடுபட்டு வந்த இவர், திருகோணமலை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுள் வீழ்ந்து கொண்டு போனபோது வன்னிக்கு சென்ற எழிலன், சொர்ணம் குழுவினருடன் வன்னிக்கு சென்றவர். அங்கும் தொடர்ந்து புலிகளின் புலனாய்வு அமைப்பில் தொழிற்பட்டாலும் இலங்கை இராணுவத்துக்கும் தகவல்களை வழங்கியதற்கான அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் மே 15க்கு பின்னரான மே 19 வரையிலான காலப்பகுதியில் செய்மதித் தொலைபேசியுடன் இவர் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செயற்பட்டதனை அங்கிருந்தோர் கண்ணுற்றுள்ளனர். எனினும் மே 19ன் பின் இவர் பற்றிய தகவல்கள் தெரியாத போதும் புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாமலேயே சுதந்திரமான நடமாட்டத்துடன் பின்னாளில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். இவரையே புலிகளை மீள இணைக்கும் தொழிப்பாட்டுக்கும், புலிகள் அமைப்பை கட்டி எழுப்பும்(பொய்யாக) நடவடிக்கைகளுக்கும் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தற்போது பயன்படுத்தி உள்ளனர் என்ற இரகசிய தகவல் கசிந்துள்ளது. அதாவது கோபி, அப்பன், மற்றும் தேய்வீகன்(தேவியன்) ஆகியோரை இலங்கை இராணுவம் சுட்டு படுகொலை செய்யவும், அதனை எவ்வாறு செய்தால் தமிழர்களும் பிற நாட்டவர்களும் நம்புவார்கள் என்பது போன்ற திட்டங்களை இந்த கலையன் தான் இராணுவதுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். இந்த வகையில் கலையனின் வலையில் முன்னாள் புலியான கோபியே முதலாவதாக வீழ்ந்த நபராக கருதப்படுகிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இயங்கி வந்த கோபி என்பவர் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரேபிய நாடு ஒன்றில் தொழில் புரிந்து கடந்த ஜனவரி மாதத்திலேயே நாடு திரும்பியிருந்தார். இந்தக் காலப்பகுதியில் தற்செயலாக இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு கடமையாற்றிய கலையன் கோபியை திருகோணமலையில் சந்திக்க நேரிட்டுள்ளது. புலிகள் குழு ஒன்றை, மீள உருவாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சு அந்தவேளை திட்டமிட்டு இருந்தது. இந்த விடையம் தெரியாமல் இதில் சிக்கியுள்ளார்கள் சில முன் நாள் புலிகள் உறுப்பினர்கள். அடுத்தவர் அப்பன் என்ற நவநீதன். புலிகள் அமைப்பில் இவருக்கு பெயர் "திரு". இவர் புலிகளின் கரும்புலிப் போராளியாவர். இறுதியுத்தத்தில் தப்பிய இவர் படையினரிடம் அகப்படாது புனர்வாழ்வுக்கு உட்படாது வாழ்ந்து வந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இவர், புலித் தேவனின் நெருங்கிய உறவுக்காரர். கிளிநொச்சியிலேயே நடமாடித்திரிந்துள்ளார். இந்த நிலையில் ஏ 9 வீதியூடாகச் சென்ற அப்பனை இலங்கைப் புலனாய்வுப் பிரிவுடனேயே தனது காலத்தை கழிக்கும் கலையன் தற்செயலாக சந்தித்ததில் இருந்து உறவைப் பேணத் தொடங்கியுள்ளார்.
இதன்போது புலிகளைத் தான் மீளக் கட்டி எழுப்புவதாகவும் பழையவர்களை மீள இணைத்து வருவதாகவும், அதற்கு உதவுமாறு அப்பனுக்கும் உணர்வூட்டி அடுத்த கட்ட ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையூட்டி, இதற்கு புனர்வாழ்வுக்கு உட்படாதவர்களே நம்பிக்கைக்கு உரியவர் எனத் தெரிவித்த கலையன் புலிகளை மீள கட்டி எழுப்புவதற்கான வேலையை ஆரம்பிக்குமாறு கூறியுள்ளார். "புலிகளின் புலனாய்வுத்துறைப் போராளியாக இருப்பது", "புனர்வாழ்வுக்கு உட்படாது தொடர்ந்து தொழிற்படுவது", "திருகோணமலையிலேயே தங்கியிருந்து வேலைசெய்வது" என்ற அடிப்படையில் கலையனின் புலிக்கதையை அப்பனும் இலகுவில் நம்பியுள்ளார். அதன் அடிப்படையில் கோபியுடன் அப்பனும் இணைக்கப்பட்டுள்ளார். இந்த செயற்பாடுகளை கலையனின் ஊடாக பாதுகாப்பு தரப்பு நகர்த்திய வேளையில் சமாந்தரமாக புலிகளின் விமானப் படைப் போராளியாக இருந்த தெய்வீகனும் புலனாய்வாளர்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
இவர் இறுதி யுத்தத்தில் தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார் எனக் கூறப்பட்ட போதும், அவரும் படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருடன் புணர்வாழ்வில் இருந்த மூத்த போராளி ஒருவர் தெய்வீகன் தன்னுடனேயே புனர்வாழ்வுக்கு உட்பட்டு இருந்தார் என்பதனை உறுதிப்படுத்தி உள்ளார். தெய்வீகன் அனுராதபுர விமானப் படைத் தளத் தாக்குதலில் பங்கு கொண்ட முக்கியமானவர் என்பதோடு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார். இந்த தகவல்கள் யாவும் தெரிந்த நிலையிலேயே பாதுகாப்பு தரப்பின் பொறிக்குள் தெய்வீகன் சிக்கியிருந்துள்ளார். அந்த வகையில் புதுக்குடியிருப்பை அண்மித்த பிரதேசத்தில் புலிகளின் புதிய விமானப் பாகங்கள் பொதிசெய்யப்பட்ட நிலையில் கிண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதனை தெய்வீகனே தெரியாமல்(தனக்கு தெரியாமல்) காட்டிக்கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாது தெய்வீகனோடு பேச்சுக் கொடுத்த கலையன், விமானப்படை தொடர்பாக பல தகவல்களை அறிந்து இலங்கை புலனாய்வுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இவ்வாறு கலையன் ஊடாக நீண்ட நாள் நடத்தப்பட்ட நாடகத்தின் உச்சக்கட்டமே நெடுங்கேணியில் நடந்த கொலைகள் ஆகும். மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்று உணர்வூட்டி, 3 முன் நாள் புலிகளை பலிகடா ஆக்குவதே இலங்கை இராணுவத்தின் திட்டம். இதனூடாக 2 நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். ஒன்று சர்வதேசத்திற்கு புலிகள் மீண்டு எழுவதாக காட்டுவது. இரண்டாவது புலிகள் மீண்டு எழுந்தால் கூட ராஜபக்ஷ அதனை வென்றுவிடுவார் என்று சிங்களத்திற்கு காட்டி, அவர் புகழை ஓங்கச்செய்வது. இதில் மேலும் ஒரு திடுக்கிடும் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. இராணுவத்தால் அனுப்பப்பட்ட நபர் ஒருவர்(சிங்களவர்) முன்னர் புலிகளுக்காக வேவு பார்த்துள்ளார்.(2005 காலப் பகுதியில்) இவர் 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதும் மீண்டும் வந்து இராணுவத்தில் இணைந்துவிட்டார். அவரையும் இராணுவத்தினர் நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொன்றுவிட்டார்கள். ஆனால் கோபி, மற்றும் அப்பனுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்கள்.
இந்தியாவில் இருந்த கலையனின் குடும்பம் அழைத்து வரப்பட்டு திருமலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதியில் அதிக விலைகொடுத்து வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தியதோடு, வாகனக் கொள்வனவுகளையும் மேற்கொண்ட நிலையில், கலையனின் நடவடிக்கைகள் மீது அப்பன் கோபி ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது(இறக்க முன்னர்) இதேவேளை கலையனுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்து பெருமளவு பணம் கிடைக்கப் பெறுவதாகவும் அப்பன் தனது நண்பர்களுக்கு ஒரு தடவை தெரிவித்துள்ளார் என்றும் அறியப்படுகிறது. எனவே புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இறுதியாக அப்பன் மற்றும் கோபி ஆகியோரின் உடல்களை பார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் சிலர், தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் இருவரையும், யாரோ மிக அருகாமையில் இருந்தே மண்டையில் சுட்டுள்ளார்கள் என்பது தான் அந்த தகவல்.(close range gun shot)
தூரத்தில் இருந்து சுடப்படவில்லை என்றும், இவர்கள் காடுகளில் மறைந்து வாழ்ந்து வந்ததாக தம்மால் உறுதியாக கூறமுடியாது என்றும் உடலைப் பார்த்த ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் மீண்டுமொரு பாரிய காட்டிக்கொடுப்பு நடந்தேறியுள்ளது. தமிழர்களின் உணர்வுகளை தூண்டி, விடையங்களை அறிந்து, பின்னர் அவர்களை தலையில் சுட்டுக்கொலைசெய்துள்ளார்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதே உண்மையாகும். உண்மையாக போராட புறப்பட்டவர்களாக கூட இவர்கள் இருக்கலாம். ஆனால் பிழையான ஆட்களிடம் சிக்கிக்கொண்டு விட்டார்கள். இதேவேளை, தேய்வீகனின் உடலை இதுவரை இராணுவம் காட்டவில்லை என்பதே உண்மையாகும். அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியாக எதனையும் கூறமுடியாத நிலை உள்ளது.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6709
Geen opmerkingen:
Een reactie posten