தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 juni 2013

தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் குழுவுடன் ததேகூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

ஆசிரியை தண்டிக்கப்பட்டது தொடர்பில் சாட்சிகளை கலைக்க முயற்சி: கல்விசார் உத்தியோகத்தர் சங்கம்
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 06:51.50 PM GMT ]
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவினால், நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியை முழங்காலிட வைக்கப்பட்டது தொடர்பான சாட்சிகளை மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கல்விசார் உத்தியோகஸ்தர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 17ம் திகதி புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் குறித்த பாடசாலைக்கு சென்று சம்பவத்தை நேரில் கண்ட பிரதி அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிறி குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் காமினி பண்டாரவிடம் வினவிய போது அந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பாடசாலையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கிலேயே அங்கு சென்றதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று குருநாகலில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்டு பாதிப்படைந்த ஆசிரியை கருத்து தெரிவிக்கையில், தான் முழங்காலிட வைக்கபட்ட சம்பவத்தை அடுத்து, ஆனமடுவ ரத்தினபால வித்தியாலயத்திற்கு மாறுதல் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
தனது இந்த கோரிக்கை கல்வி அதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், தமக்கு மாறுதலாக வழங்கப்பட்ட பாடசாலை, தன்னை துன்புறுத்திய மாகாணசபை உறுப்பினரின் இல்லத்திற்கு அருகாமையில் இருப்பது தமக்கு புதிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தற்போதைய பிரச்சனையை விளங்கப்படுத்தி கலகமுவ யூ.பி. வன்னிநாயக்க தேசிய பாடசாலைக்கு மாற்றம் தரும்படி வேண்டியிருப்பதாக தெரிவித்தார். இதேவேளை, அவரது கோரிக்கைக்கமைய இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆசிரியை தண்டிக்கப்பட்ட விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாத்தாண்டிய பிரதேச பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் கல்வி அறிவற்றவர்களுக்கு வேட்பு வழங்கப்படக் கூடாது எனவும் கோரிக்கை ஆர்ப்பாட்டக்காரர்களினால் விடுக்கப்பட்டது.
தென்னாபிரிக்க அமைச்சர் இப்ராஹிம் குழுவுடன் ததேகூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!
[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013, 12:47.20 AM GMT ]
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தென்னாபிரிக்கா தனது அனுபவங்களை இலங்கையின் இரு தரப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக தென்னாபிரிக்க துணை வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் குழுவினர் இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா, ஏ.விநாயகமூர்த்தி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்க குழுவினருடன் எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சந்தித்து நீண்டநேரமாக பலவிடயங்களை பேசியிருந்தனர்.
அவர்கள் இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண தங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில், அதாவது தங்களுடைய நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற இனமோதல்கள் தொடர்பாக  அதைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
இவர்கள் இலங்கை அரசாங்கத்துடனும் பேசுவார்கள். அதன்பின்னர் தங்களுடைய முயற்சிகள் சம்பந்தமாக சில முடிவுகளை எடுத்து தொடர்வார்கள் என நம்புகின்றோம்.
எந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் இதில் விசுவாசமாக செயற்படும் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று விசுவாசமாக செயற்படுமாக இருந்தால் அந்த முன்னெடுப்புக்களை முறையாக வழிநடத்துவதற்கு அவர்களிடம் போதியளவு அனுபவங்கள் திறமை உள்ளன என்று நாங்கள் நம்புகின்றோம்.
அரசாங்கம் நியாயமான ஒரு தீர்வைக்காண வேண்டுமென்று அவர்களுடன் சேர்ந்து பேசி ஒரு நல்ல முடிவைக் காண சம்மதிக்காவிட்டால் அது கைகூடுவது சந்தேகமாக இருக்கலாம். ஆனால்  இது விடயத்தில் இலங்கை அரசாங்கம் இப்பிரச்சினையில் மாற்றத்தைக் காணவேண்டிய தேவைப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.
உள்நாட்டில் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வருமென்று நாங்கள் நம்பவில்லை. அப்படியிருந்தால் நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டியேற்பட்டிருக்காது.
13வது திருத்தம் தொடர்பாக அமைக்கப்பட்ட தெரிவுக்கழுவில் பங்குபற்றுவது பற்றி விரைவில் நாம் கூடி ஆராயவுள்ளோம். தெரிவுக்குழுவின் ஊடாக நியாயமான, நிரந்தரமான, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதான ஒரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை.
இருந்தபோதிலும் இந்த தெரிவுக்குழு சம்பந்தமாக ஒரு முடிவை நாங்கள் விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten