தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 juni 2013

பாடசாலைக் காணி அதிரடிப் படையினரால் ஆக்கிரமிப்பு: சிவசக்தி ஆனந்தன் கண்டனம்!

இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற படகு கைப்பற்றப்பட்டது!
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 11:39.26 AM GMT ]
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையோரமாக இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற படகொன்றை கியூ பிரிவு பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக பொலிசாரின் ஒபரேஷன் அம்லா - தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதன்போது இலங்கை அகதிகள் குழுவொன்று கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல இருப்பதாக கியூ பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கீச்சாங்குப்பம் பகுதியில் மீனவர் படகுகளின் மத்தியில் நிறுத்தப்பட்டிருந்த மர்மப் படகு ஒன்றை கியூ பிரிவு பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில் அந்தப் படகில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 60 பேர் கடல்வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல இருந்த தகவல் வெளியானது.
படகின் உரிமையாளரை கைது செய்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த இரண்டு தரகர்களையும் கைது செய்துள்ளனர்.
எனினும் தப்பிச் செல்ல இருந்த அகதிகள் மற்றும் அவர்களுக்குப் பயண ஏற்பாடுகளைச் செய்த நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்று தெரியவருகின்றது.

பாடசாலைக் காணி அதிரடிப் படையினரால் ஆக்கிரமிப்பு: சிவசக்தி ஆனந்தன் கண்டனம்
[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 12:15.42 PM GMT ]
வவுனியா, பூவரசங்குளம் பிரதேசத்தில் ஆரம்பப் பாடசாலைக் காணியை விசேட அதிரடிப் படையினர் ஆக்கிரமிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டித்துள்ளார்.
கடந்த 1956ம் ஆண்டு முதல் பூவரசங்குளத்தின் மன்னார் வீதியில் அமைந்துள்ள பாடசாலையின் காணி தற்போது விசேட அதிரடிப்படை முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை பிறிதொரு இடத்தில் செயல்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதி மாணவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைக் காணியை நிரந்தரமாக விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு,காணி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப பிரதேச செயலாளர் மூலம் அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வன்மையாக கண்டித்துள்ளார்.
அதிரடிப்படையினருக்கு மாற்று இடத்தில் காணி வழங்கி, அவர்களை பாடசாலைக் காணியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், பாடசாலையை அதே இடத்தில் மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten