தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி!


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையாக பாடுபட்ட சிங்களத் தலைவர்கள் ஒரு சிலரில் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் ஒருவராவார். இனமத பேதமற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமென பாடுபட்ட இவர், அனைத்து சமூகங்களின் நன்மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றிருந்தார்.
யுத்த காலத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழ் மக்களுக்கு உதவியதுடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளிலும், அவர்களின் புனர்வாழ்விலும் அக்கறை காட்டியவர். அத்துடன் அவர் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தயங்காது குரல் கொடுத்துவந்த ஒரு ஜனநாயகவாதி.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவருடன் நான் நன்றாக பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அவர் தான் சார்ந்த இனத்தின்மேல் மிகவும் பற்றுறுதி வைத்திருந்தாலும், சிறுபான்மை தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு வர வேண்டுமென்பதிலும், தமிழ் மக்கள் முகம்கொடுத்த அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலும் அக்கறை கொண்டு அயராது உழைத்து வந்தார்.
இனங்களிடையே ஒற்றுமையை வேண்டிநின்ற, அதற்காக அயராது உழைத்துநின்ற, டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் இழப்பானது மிகப்பெரிய இழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி,
த.சித்தார்த்தன்,
தலைவர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்),
01.06.2013.

Geen opmerkingen:

Een reactie posten