ஈழத்தமிழர்கள் தங்களுக்கு நடந்த வேதனைகளையும், துன்பங்களையும், அழிவுகளையும், தங்களுடன் கூட இருந்தவர்களது இழப்புக்களையும் மறந்து, மன்னித்து விட்டுக் கொடுத்ததாலும் இன்று தங்களை இழந்தவர்களாக உள்ளனர் என கரைச்சிப் பிரதேச உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தெரிவித்தார்.
வட்டக்கச்சி மாயவனூரில் பாடசாலை மாணவர்கள் 300 பேருக்கு சுவிற்சர்லாந்து சிறுப்பிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது இனம் இலகுவில் எதையும் மறந்துவிடும் இனமாக உள்ளது. தலதா மாளிகையினையும் மத்திய வங்கியினையும் இன்னும் காட்சிப் பொருட்களாக சிங்கள மக்கள் வைத்திருக்க, எரிக்கப்பட்ட எங்கள் இதயமான யாழ் நூலகத்தினையும், அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலையும், கொல்லப்பட்ட எம் உறவுகளையும் இலகுவில் நாம் மறந்துவிட்டோம்.
மன்னிப்பதும் மறப்பதும் மனித மாண்பேயாயினும் நாங்கள் எங்களை இழந்து இன்னொருவருக்கு சேவகம் செய்து அழிந்து போவது மனித மாண்பல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மாயவனூர் பொதுநோக்கு மண்டபத்தில் சுவிற்சர்லாந்து சிறுப்பிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஆசியுரையினை மாயவனூர் கணபதீச்வரர் ஆலய பிரதம குருவும் சமாதான நீதவானுமாகிய கெங்காசிவக்குருக்கள் வழங்கினார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ஓய்வு நிலை கிராம சேவையாளரும், சமாதான நீதவானும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரமான சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச உறுப்பினர் வே.செல்லத்துரை, கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தன், மாற்றுவலுவுள்ளோர் சங்கத் தலைவரும், சந்தை வர்த்தகரும், கட்சி செயற்பாட்டாளருமாகிய தி.சிவமாறன், மாயவனூர் கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், குழந்தைகள், பொதுமக்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten