தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

வட மாகாணத் தேர்தலை நடத்தினால் பதவி துறப்பு! மூத்த அமைச்சர்கள் சிலர் கடும் எச்சரிக்கை!


கச்சதீவில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர் கப்பல்: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம், வைகோ பிரதமருக்கு அவசர கடிதம்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 04:41.37 AM GMT ]
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சதீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர் கப்பல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழக மீன்பிடி தடை காலமான 45 நாட்கள் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய வாழ்வாதாரத்தை தேடி வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அச்சத்தையும், தங்கள் வருங்காலம் குறித்த கேள்வியையும் எழச் செய்துள்ளது இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கை.
ஏற்கனவே இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் படும் துயரங்களை அளவிட முடியாத நிலையில் தற்போது கச்சதீவு பகுதியில் 10–க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கச்சதீவு பகுதிக்கு அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல்கூட தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக இல்லாத நிலையில் இலங்கையின் 10–க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய நாட்டையே ஆச்சரியங்கொள்ளச் செய்யும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.
மேலும், எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களுக்கு இந்திய அரசாங்கமே அபராதம் வசூலிக்க உள்ளதாக வரும் செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குச் சென்று வர மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்நேரத்தில் எடுக்க வேண்டும்.
இந்திய தமிழ் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்க்கப்பல்களை அப்புறப்படுத்த வைப்பதோடு இந்திய கடற்படை பாதுகாப்பை இந்திய தமிழ் மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் இலங்கை போர்க்கப்பல்: வைகோ பிரதமருக்கு அவசர கடிதம்
கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ளார்.
அவர் கடிதத்தில் கூறி இருப்பதாவது,
கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர்.
இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால், மிருகத்தனமாகத் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்தியக் கடற்படை, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வில்லை. கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களின் உரிமைநலன்களைப் பறிக்கின்ற வகையில், 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக, இந்திய பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.
இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். `கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும்´ என, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றம், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில், தற்போது, கச்சத்தீவு அருகே, இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளது; நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர். 45 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, இயந்திரப் படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும். போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்; இலங்கைப் போர்க்கப்பல்கள் அகற்றப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தனது கடிதத்தில் கைகோ தேரிவித்துள்ளார்.

வட மாகாணத் தேர்தலை நடத்தினால் பதவி துறப்பு! மூத்த அமைச்சர்கள் சிலர் கடும் எச்சரிக்கை!
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 03:54.58 AM GMT ]
வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பார். 13ஆவது திருத்தம் மற்றும் வடமாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் முக்கிய பேச்சுகளை நடத்துவதற்கு ஆளும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.
13வது திருத்தத்தினூடாகக் காணி, பொலிஸ் அதிகாரங்களை வட மாகாணத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துவரும் சில அமைச்சர்களே இவ்வாறு ஜனாதிபதியைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
முழுமையான அதிகாரங்களுடன் வடமாகாணசபை அமையுமானால் அது நாட்டில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குமென்பதால் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாதென்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க உள்ளதாகவும், ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமாச் செய்வது பற்றி தீர்க்கமான முடிவு எடுக்கப்படுமென்றும் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பாரெனவும், அல்லாத பட்சத்தில் வடமாகாணசபைத் தேர்தலுக்கு ஜனாதிபதி செல்லமாட்டார் என்றும் மேற்படி அமைச்சர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.
இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சந்திப்பு நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten