தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

தமிழர் பிரதேசங்களில் வலிந்து குடியேறும் இராணுவம்: முன்னாள் நீதியரசர் விசனம்

கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர் மாற்றம் கிடையாது: ஜனாதிபதி அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 05:42.22 AM GMT ]
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சர்கள் - ஆளுநருடன் முரண்பட்டுக்கொண்டும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் - முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு சபை அமர்வு பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலேயே மேற்படி ஜனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போதைய ஆளுநர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரமவும், முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்தும் தான் தொடர்ந்து இருப்பார்கள். அதில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் முரண்பாட்டை தோற்றுவிக்கும் பின்னணியில் உள்ளவர்களை நான் அறிவேன். அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை விமலவீர திஸாநாயக்க வீணான முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றார். ஆளுநர், முதலமைச்சர் மாறாவிட்டாலும் கல்வியமைச்சை வேறொருவருக்கு வழங்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவையும் விசேடமாக அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

தமிழர் பிரதேசங்களில் வலிந்து குடியேறும் இராணுவம்: முன்னாள் நீதியரசர் விசனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013, 06:28.23 AM GMT ]
இராணுவம் வலிந்து குடியேறிய இடங்களாக இன்று தமிழ் பேசும் மாகாணங்கள் காட்சியளிப்பதாக உயர்நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் கே.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 எமது உரிமைகளை இழந்து சுயகௌரவத்தை இழந்து நாங்களே எங்களைத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையைச் சீர்ப்படுத்த எங்களுக்குள் ஒட்டுறவும் ஒருமைப்பாடும் புரிந்துணர்வும் தேவை என அவர் தெரிவித்தார்.
அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புக்களான 'இந்து சமய சிந்தனைகள்' நூல் வெளியீடு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவுப் பேருரையை நிகழத்திய போதே இவ்வாறு கூறினார்.
 அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூரில் எமக்குரிய அதிகாரங்ளும் பொறுப்புக்களும் பறிபோய் விட்டன. எமது உரிமைகளும் தகைமைகளும் அமுக்கப்பட்டுள்ளன. கீழான ஒரு நிலையில் இருப்பதாக நாங்கள் எங்களைப் பற்றி எண்ணத் தொடங்கியுள்ளோம்.
எமது முழுச் சொரூபத்தின் பெருமையை வெளிக்கொண்டு வரக்கூடிய ஒரு நிலைக்கு நாங்கள் வளரக்கூடும் என்ற எண்ணம் எங்களை விட்டு விலகிச் சென்றுள்ளது.
நாங்களே எங்களைப்பலம் குறைந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று கூறுமளவுக்கு நாங்களே எங்களைத் தூங்க வைத்துக் கொண்டுள்ளோம்.
மக்கள் தம்மைத் தாமே ஆள வழிவகுக்கும் திட்டங்கள் எதுவும் இயற்றப்படவில்லை என்று கடந்த நூற்றாண்டில் சேர்.பொன்.அருணாசலம் கூறியிருந்தார். அந்த நிலையே இன்றும் காணப்படுகிறது.
எங்களைப் பற்றிய எங்கள் மதிப்பீடு மிகவும் குன்றிப் போயுள்ளது. சுய கௌரவத்தை இழந்து வாழத் தலைப்பட்டுள்ளோம். ஆனால் அதற்காக நாங்கள் மனதில் விரக்தியையும் அச்சத்தையும் சுமந்து கொண்டு நடைப்பிணங்கள் போல பவனி வர வேண்டும் என்று எண்ணுவது மடமை.
இந்த நிலையை மாற்ற நாம் முன்வர வேண்டும். அதற்கு எம்மிடையே ஒட்டுறவும், ஒருமைப்பாடும், புரிந்துணர்வும் வளர வேண்டும். என்றார் அவர்.

Geen opmerkingen:

Een reactie posten