தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 juni 2013

உச்சி மாநாட்டு இணையத்தளத்தில் தமிழ், முஸ்லிம்களை வேண்டுமென்றே குறைத்துக் காட்டிய இலங்கை அரசாங்கம்!

பிரிட்டன் வீசா பெற விண்ணப்பிக்கும் இலங்கையர் 4600 டொலர்களை பிணையாக செலுத்த வேண்டும்!
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 12:00.06 AM GMT ]
குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரிட்டனுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனின் சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் எதிர்வரும் நவம்பர் முதல் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவ தாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசா பிணைக்கு உள்ளாகும் நாடுகளில் பங்களாதேஷ் மற்றும் கானாவும் உள்ளடங்குகின்றன.
இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 4,600 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் பிரிட்டனின் உள்நாட்டு செயலாளர் தெரேசா மே, பிரதமர் டேவிட் கெம்ருனின் கன்ஸர்வேடிவ் கட்சியின் அனுமதியைப் பெறக் காத்திருப்பதாக மேற்படி பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டில் பிரிட்டனுக்கு வருவோரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க பிரதமர் கெமரூன் எதிர்பார்த்துள்ளார்.
கடந்த ஆண்டில் ஆறு மாத விசாவில் இந்தியாவில் இருந்து 296,000 பேரும் நைஜீரியாவிலிருந்து 101,000 பேரும் பாகிஸ்தானில் இருந்து 53000 பேரும் இலங்கையில் இருந்து 14,000 பேரும் பிரிட்டனுக்கு சென்றுள்ளனர்.
உச்சி மாநாட்டு இணையத்தளத்தில் தமிழ், முஸ்லிம்களை வேண்டுமென்றே குறைத்துக் காட்டிய இலங்கை அரசாங்கம்!
[ திங்கட்கிழமை, 24 யூன் 2013, 12:44.44 AM GMT ]
இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் ஆரம்பித்த  பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டு இணையத்தளத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் தொகையைக் குறைத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள  பொதுநலவாய உச்சி மாநாடு தொடர்பான தகவல்களை வழங்கும் CHOGM2013.lk என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் கடந்தவாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதில், இலங்கை தொடர்பான விபரங்கள் இடம்பெற்ற பகுதியில், இலங்கைத் தமிழர்களின் சனத்தொகை 3.9 வீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், 2012ம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்கள் 11.2 வீதமாகும்.
இலங்கைத் தமிழர்களை விட அதிகமாக, மலையகத் தமிழர்கள் 4.6 வீதம் வாழ்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முஸ்லிம்களின் தொகையையும், 9.7 வீதம் என்பதற்குப் பதிலாக, 7.2 வீதம் என்று குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
12.6 வீதமாக உள்ள இந்துக்களை 7.1 வீதம் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான தரவுகள் பதிவேற்றப்பட்டது குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வலைப்பதிவில் சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நான்கு நாட்களுக்குப் பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தரவுகள் திருத்தப்பட்டுள்ளன.
எனினும், திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அந்த இணையத்தளத்தை 10 ஆயிரம் பேர் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten