இலங்கையில் தற்போது சாத்வீத போராட்டத்தின் தேவையின் ஆரம்ப கட்டத்தில் சிறுபான்மை சமூகங்கள் உள்ளன!- ரவூப் ஹக்கீம்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 05:08.39 AM GMT ]
தற்போதைய நிலைமையில் தமிழ்பேசும் சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து சாத்வீக வழியிலான அகிம்சை போராட்டத்தின் மூலம் சவால்களை வெற்றி கொள்வதே செளமியமூர்த்தி தொண்டமானுக்கு செய்கின்ற அஞ்சலியாக அமையும் என்றும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 100வது ஜனனதின வைபவம் நேற்று கொழும்பு கதிரேஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் ஜா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் பிரதமரின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், இலங்கை இந்திய சமுதாய பேரவையின் சிரேஷ்ட உப தலைவர் தெ. ஈஸ்வரன், பி.பி. தேவராஜ், கம்பவாரிதி ஈ. ஜெயராஜ் மற்றும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், முன்னாள் அரச அதிகாரிகள், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் குமரன் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் எம்.பி. க்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் கூறியதாவது
செளமியமூர்த்தி தொண்டமானின் புரட்சிகள் வாழ்க்கை வரலாற்று அம்சங்களை பகிரும்போது அவர் எமக்கு ஒரு யுக புருஷராக திகழ்வதுடன் அவரின் சாதனைகளை பின்னோக்கிப் பார்க்கும்போது அவரின் போராட்டங்களின் பிரயோக வலிமை எமக்கு புரிகின்றது.
1830 களில் இலங்கை வந்த இந்திய வம்சாவளி மலையக மக்களின் உரிமைகளை பெற்றெடுத்தமை மற்றும் தொழிற்சங்க ரீதியாக அவர் பெற்றெடுத்த உரிமைகள் என்பன அவரை ஒரு யுக புருஷராக காட்டுகின்றது.
தொண்டமான் அரசியல் ரீதியில் படிப்படியாக இந்த நாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரை ஈடுஇணையற்ற ஒரு அரசியல் தலைவராக உருவாக்கியது. அவரின் ஆளுமையின் வலிமை என்பது அவரின் அகிம்சை வழிப் போராட்டத்தின் அடிப்படையாக அமைந்தது.
அகிம்சைவழிப் போராட்டத்தில் மிகப்பெரிய சோதனைகளை கடந்து அவற்றை எதிர்கொண்டு அவர் படைத்துள்ள சாதனைகள் வன்முறையின் பால் தமது மக்களை இட்டுச் செல்லாத சாத்வீக போராட்டத்தின் உண்மையான பரிமாணம் இங்கு எம் எல்லோருக்கும் அவரை ஒரு உதாரண புருஷராக காட்டுகின்றது.
1994 ஆம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 12 ஆவது மாநாட்டுக்கு அவரை அழைத்திருந்தோம். அந்த மாநாட்டில் அவர் உரையாற்றியபோது தன்னுடைய 40 வருடகால அரசியலில் தான் கண்டிராத ஜன சமுத்திரத்தை கண்டதாக கூறி 12 வருடங்களில் சாதனையை படைத்தள்ளோம் என்று பாராட்டினார். அதன்போது நாங்கள் பூரிப்படைந்தோம்.
ஆனால் செளமியமூர்த்தி தொண்டமானின் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்த நாட்டின் சிறுபான்மை மக்களின் அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் வலிமைடைந்தன.
இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அவர்களின் பிரஜா உரிமையை பறிக்கின்ற சட்டம் வந்த பின்னர் பாராளுமன்றத்தில் இருந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களை இழக்கப்போகின்றனர் என்ற நிலையிலே 1952 ஆம் ஆண்டு திடீரென ஒரு விபத்திலே இதற்க்கெல்லாம் காரணமாக தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க அகாலமரணமடைந்தார்.
அந்த நிலையில் எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அமைக்க முனைந்த நேரத்தில் டட்லி சேனாநாயக்கவினுடைய தேர்தல் பிரசாரங்கள் எல்லாம் வழமைக்கு மாறான மிகத் தீவிரமான இனத்துவ அரசியலின்பால் ஐக்கிய தேசிய கட்சியை இழுத்துச் சென்றது.
இந்த நாட்டின் பெரும்பான்மையின மக்களின் மனங்களை வெல்வதற்கு நடக்கின்ற ஒரு போராட்டமதாக அவர் அதனை பார்த்தார். அந்தத் தேர்தலில் அடைந்த வெற்றியின் பின்னர் தொண்டமானும் அவரது சகாக்களும் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் போராட்டம் நடத்தி இடையறாது செய்த போராட்டத்தின் வெற்றி அன்று அவர்களுக்கு கிடைக்காவிடினும் இறுதியில் கிடைத்தது. சாத்வீக போராட்டத்துக்கான விலை எம்மை வியப்படையச் செய்கிறது.
1960ம் ஆண்டு சிறிமா - சாஷ்திரி உடன்படிக்கையின் பின்னர் தொண்டமான் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புகளை அதிகரித்துக் கொண்டார். எனினும் அரசியல் என்பது சாத்தியமானவற்றை சாதிக்கும் கலையாகும். அதனை சிறப்பாக தன்னுடைய சாத்தியமான அகிம்சை போராட்டத்தின் மூலம் நிறுவிய தனிபட்ட பெரும் அரசியல் தலைவராகவே அவரை பார்க்கின்றோம்.
எனவே நாட்டில் இரண்டு பிரதான தேசிய அரசியல் கட்சிகளில் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டால்தான் தமது விடுதலையை பெற முடியும் என்பதனை அவர் உணர்ந்திருந்தார்.
இறுதியில் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தனவுடன் இணைந்து பணியாற்றினார். 1976ம் ஆண்டு ஆரம்பித்த அந்த தொடர்பு 1986ம் ஆண்டு வரை தொடர்ந்தது. எனினும் அக்காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளிருந்த இனத்துவவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை கடந்து சாதனைகளை படைத்தார்.
இறுதியில் பிரேமதாசவின் ஆட்சி அமைவதற்கு முன்னதாகவே 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி எஞ்சியிருந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தார்.
அதன்பின்னர் டி.பி. விஜேதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அமரர் தொண்டமான் தனது சமூகத்துக்காக முன்னெடுத்த போராட்டத்துக்கு அப்பால் சென்று முழு நாட்டிலும் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் அதாவது தமிழ் பேசும் சமூகங்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காக எம்முடைய மறைந்த தலைவருடன் தொண்டமான் -அஷ்ரப் என்ற ஒப்பந்தத்தை செய்து அந்த ஒப்பந்ந்தத்தை ஒரு கூட்டு கடிதத்தின் மூலம் இரண்டு தலைவர்களும் அப்போதைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அவர்களுக்கு அனுப்பியிருந்தோம்.
அக்காலத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரின் அலுவலகத்துக்கு நான் அடிக்கடி சென்றுவருவேன். அதிலே அவர் காட்டிய ஈடுபாடு என்னை பாரியளவில் கவர்ந்திருந்தது. நடக்கப்போகின்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதற்கு முன்னதாக அப்போதைய ஜனாதிபதிக்கு ஒரு கடிவாளம் போடவேண்டும் என்பதற்காக இந்த இரண்டு சிறுபான்மை தலைவர்களும் இணைந்து முன்வைத்த அந்த யோசனைக்கு பதில் அளிக்காமலேயே அப்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தலை நடத்தினார்.
அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வெற்றிபெற்று பிரதமரானார். அதில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யாக இருந்து அமைச்சரானார் தொண்டமான். படிப்படியாக இந்த நாட்டின் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியிலும் பாடசாலை வைத்தியசாலைகளையும் மத்திய மாகாண அரசுகங்களுக்கு கீழ் கொண்டுவந்தார். நிரந்தரமாக அந்த மக்கள் இழந்திருந்த மனித உரிமையை மீட்டுக்கொடுத்தார்.
சாதனைகளை சாதுரியமாக தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் செய்துகாட்டியமை சாதாரண விடயமல்ல. நாட்டில் நிலவிய 30 வருடகால வன்முறையைத் தொடர்ந்து சாத்வீத போராட்டத்தின் தேவையின் ஆரம்பத்தில் சிறுபான்மை மக்கள் உள்ளனர். அவ்வாறான சாத்வீக போராட்டத்தின் மூலம் எவற்றையெல்லாம் பெற முடியும் என்பதற்கு செளமியமூர்த்தி தொண்டமானைவிட உதாரண புருஷர் வேறு யாரும் இருக்க முடியாது.
தற்போதைய நிலைமையில் தமிழ்பேசும் சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து சாத்வீக வழியிலான அகிம்சை போராட்டத்தின் மூலம் சவால்களை வெற்றிக்கொள்வதே செளமியமூர்த்தி தொண்டமானுக்கு செய்கின்ற அஞ்சலியாக இருக்கும் என்றார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தல் வேண்டாம்!- விமல் வீரவன்ச கையெழுத்துப் போராட்டம்
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 04:28.42 AM GMT ]
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தல் வேண்டாம் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்பங்களைக் பெறும் நடவடிக்கையை தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 8.30 மணிக்கு களனி ஸ்ரீ புஞ்ஞானந்த பெளத்த மத்திய நிலையத்தில் மத அனுஷ்டானங்களுடன் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் மகஜரில் கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின்னர் கடவத்தை, யக்கல, பஸ்யால, வரக்காபொல, பொல்கஹாவெல, குருநாகலை வரை ஊர்வலமாகச் சென்று அங்கு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
இவ் ஊர்வலம் செல்லும் அனைத்து நகரங்களிலும் மக்களிடம் கையெழுத்துகள் பெறப்படவுள்ளன.
கையெழுத்து பெறும் ஊர்வலம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுமென்றும் தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten