தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

கச்சதீவு அருகே நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்க்கப்பல்கள் அகற்றப்பட வேண்டும!- பிரதமருக்கு வைகோ கடிதம்


சப்ரகமுவ பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்! 6 பேர் கைது! - 12 பொலிஸாருக்கு காயம் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 09:36.03 AM GMT ]
கொழும்பு - பதுளை வீதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் 6 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் வகுப்பு தடைக்கு உட்பட்ட மாணவ தலைவர்களின் பரீட்சை உரிமைக்காக கடந்த மாதம் 28ம் திகதி முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களில் 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பதுளை- பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சந்தியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை வழிவிடுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனினும் அக்கோரிக்கையை மாணவர்கள் ஏற்க மறுக்கவே பொலிஸார் அவர்களைக் கலைக்கும் பொருட்டு கண்ணீர்ப் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலை 8.30 மணியளவில் இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவர்களை கலைப்பதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மோதலில் 12 பொலிஸாருக்கு காயம் 10 பேர் வைத்தியசாலையில்
சப்ரகமுவ மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 12 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இதில் இரத்தினபுரி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, பலாங்கொட உதவி பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்ததோடு அதில் 10 பேர் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரை நோக்கி மாணவர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பலாங்கொட - பம்பகின்ன பகுதியில் பதுளை - கொழும்பு வீதியை முழுமையாக மறிந்து 1000 - 1500 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் நோயாளர்களை ஏற்றிச் சென்ற மூன்று அம்பியூலன்ஸ் வண்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து நெரிசலால் அசௌகரியங்களை எதிர்நோக்கியதால் மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டு பிரயோகித்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மோதலில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கச்சதீவு அருகே நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்க்கப்பல்கள் அகற்றப்பட வேண்டும!- பிரதமருக்கு வைகோ கடிதம்
[ சனிக்கிழமை, 01 யூன் 2013, 10:37.41 AM GMT ]
கச்சத்தீவு அருகே, இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளது; நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கைப் போர்க்கப்பல்கள் அகற்ற வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருப்பதையும், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் இருப்பதையும், இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த பல ஆண்டுகளாக, பன்னாட்டுக் கடல் பரப்பிலும், நமது கடல் பரப்பிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். மீன்பிடி படகுகளைச் சேதப்படுத்தி, வலைகளை அறுத்து எறிகின்றனர்.
இந்நிகழ்வுகளை, நான் பலமுறை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து இருக்கின்றேன். இதுவரையிலும், 578 தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால், மிருகத்தனமாகத் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியக் கடற்படை, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வில்லை. கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களின் உரிமைநலன்களைப் பறிக்கின்ற வகையில், 1974 ஆம் ஆண்டு, இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக, இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.
இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். `கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றம், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில், தற்போது, கச்சத்தீவு அருகே, இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளது; நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர். 45 நாள்கள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, இயந்திரப் படகு மீனவர்கள் தற்போது கடலுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும். போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்; இலங்கைப் போர்க்கப்பல்கள் அகற்றப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten