தோழர்களே ஒரு நிமிடம்! தேசியக் கொடியின் கம்பீரமான அசைவுக்கு முன்னால், சீருடை அணிந்தபடி வரிசை வரிசையாக உறுதியுடன் நின்றபடி, உரத்த குரலில் ஒருமித்தபடி நாம் உரைத்த உறுதிமொழியை மனக்கண்ணில் ஓடவிடுவோமாக. நெஞ்சு கனக்கின்றது…
எங்கள் பெருமைகள், எங்கள் மிடுக்குகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து, வெறும் நடைப்பிணங்களாகி உயிர்வாழும் எத்தணிப்புடன் இன்று நாம் நாடுநாடாய் அலைந்து கொண்டிருக்கின்றோம். எப்படியோ, முள்ளிவாய்க்கால் முடிவு என்பது எம்மையெல்லாம் திசைக்கொன்றாய்.. சிதைத்துப் போட்டு விட்டது.
எம்மக்கள் சிங்கள அரசின் கொடிய அடக்குமுறைக்குள். எம் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில், அந்த மண்ணில், இரத்தம் சித்தி, உடல் சிதறி உயிர் துறந்தார்கள். இன்னும் ஆயிரக்கணக்கில், சிங்களச் சிறையில் வாடுகின்றார்கள்.
இன்னும் ஆயிரக்கணக்கில் காலிழந்தும் கையிழந்தும் கண்ணிழந்தும் வாடுகின்றனர். எம் தோழர்களின் குடும்பங்கள் குழந்தைகள்.. ஆதரிப்பார் யாரும் இன்றி அநாதைகளாய் எம் தாயகத்தில் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தடுமாறுகின்றன.
தேசியத்தலைவரின் உறுதியான தலைமையில், யாராலும் வெல்லப்பட முடியாத படையணிகளாக விளங்கிய படையணிகள், எம் மக்களின் காவல் கவசங்களாக விளங்கிய படையணிகள், இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியைப் பெற்று சிங்கள அரசால் வெற்றிகொள்ளப்பட்டன.
தமிழர்களைச் சிங்களம் வென்றது. மக்களைக் கொன்று குவித்தே, இதனைச் சிங்கள அரசு செய்தது. வகைதொகையின்றி மக்களைக் கொன்று குவித்து, சர்வதேசப் போர்விதிகளை முற்றாக மீறி, உலக வல்லரசினதும், பிராந்திய வல்லரசினதும் முழுமையான ஒத்துழைப்புடனேயே சிங்கள அரசு போரை வென்றது.
விடுதலைப் புலிகளை சிங்கள அரசால் தனித்து வெற்றி கொண்டிருக்க முடியவே முடியாது. தமிழர்களைக் கொன்றுகுவித்த, தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை சூட்சியால் அழித்த நாளை சிங்கள அரசு எந்தவிதமான வெட்கமும் இன்றி, எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி மிகவிமரிசையாகக் கொண்டாடுகின்றது.
தோழர்களே! நாம் இந்தக் கொடுமையை, எம் மக்களுக்கு நிகழ்ந்த அவமானத்தை, எமக்கேற்பட்ட தோல்வியை மௌனமாக அங்கீகரிக்கின்றோமா என்பதே தற்போதுள்ள கேள்வி.
முள்ளிவாய்க்கால், எமக்கான இன்னொரு களத்தை திறந்துவிட்டுள்ளது என்பதே யதார்த்தம்.
எமது தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றுவிடவில்லை. முற்றுப்பெறவும் இல்லை. எமது மக்கள் மனங்களிலும், எமது மக்களின் விடுதலைக்காக உறுதி மொழியெடுத்து, சாவையும் சந்திக்கத் தயாராக களமாடிய விடுதலை வீரர்களினதும் நெஞ்சங்களில், விடுதலைக்கான தாகம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டம் தோற்றதாக அர்த்தம் கொள்ள முடியாது.
எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் தன் இலக்கை அடையும் போதே, அது முற்றுப்பெற்றதாக முழுமை பெற்றதாக அர்த்தம் பெறும். ஆயுதப்போராட்டத்தின் பக்கத்துணைகளாக, தூண்களாக நின்ற சாதாரண பொதுமக்களின் விபரிக்கமுடியாத பெரும் தியாகங்களை கண்ணால் கண்டவர்கள் நாங்கள்.
போராளிகளுக்காக அவர்கள் சந்தித்த ஆபத்துக்கள், நெருக்கடிகள், சித்திரவதைகள், சிறைகள் என ஏராளம். போராளிகளுக்கு உணவு கொடுத்ததற்காகவே, எத்தனை பொதுமக்கள், சிங்களப்படைகளால் கொல்லப்பட்டார்கள். போராளிகளை பாதுகாத்து வைத்திருந்த காரணத்திற்காகவே எத்தனையோ குடும்பங்கள் சிங்களப்படைகளால் அழிக்கப்பட்டன.
போராளிகளுக்கு உதவினார்கள் என்பதற்காகவே எத்தனையோ குடும்பங்கள்,தனிநபர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் ஏதும் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். புலிகளுக்கு உதவியதற்காகவே பலர் கடத்திச் சென்று கொல்லப்பட்டுள்ளனர்.
சாதாரண சிறுவர் சிறுமியரில் இருந்து, இளவயதுத் தங்கைகள், தப்பியர் தாய்மார்கள் பாட்டிகள் என துணிச்சலாக, எம்மைப் போசித்த உறவுகளை எம்மால் மறக்கமுடியுமா?
இதற்காகவே அவர்கள், சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் பாலியல் வதைகளுக்கும் உள்ளான கொடுமைகளை மறக்கமுடியுமா?
தங்கள் குடும்பங்களை, பிள்ளைகளை எஞ்சியிருக்கும் தோழர்கள் பார்ப்பார்கள், எங்கள் மக்கள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் மகிழ்வோடு விழிமூடிய எங்கள் மாவீரர்களை மறக்கமுடியுமா?
அவர்கள் விட்டுச்சென்ற பணியை நிராகரிக்கமுடியுமா?
இதயத்துக்கு நெருக்கமான எத்தனை நண்பர்கள், கட்டிப்பிடித்து முத்தமிட்டு, இறுதிப்பயணம் புறப்பட்ட அந்த மாவீரத் தோழர்களை மறக்கத்தானும் முடியுமா?
எம்மோடு ஒட்டி உறவாடி எம்மைப் பாதுகாத்து, எமக்கு உணவளித்து உறைவிடம் அளித்து சொந்த உறவுகளாக எம்மோடு வாழ்ந்த அந்த மக்களைப் பிரிந்து பல நாடுகளில் நாங்கள் வாழ்கின்றோம்.
ஆனாலும், எந்த மக்களுக்காகப் போராடப் புறப்பட்டோமோ, எந்த மக்களுக்காக உறுதி மொழி ஏற்றுக்கொண்டோமோ, எந்த மக்களுக்காக எங்கள் தலைவன் வழிநின்று எம்மை முழுமையாக ஒப்படைக்கவும் தயாராக நின்று களமாடினோமோ, அந்த புனிதமான கடமைகள் யாவும் புலத்தில், புதிய சூழலில் மறந்துபோய்விடுமா தோழர்களே என்பதுதான் எமக்கான கேள்வி.
எம்மீது மாசுமறுவற்ற முறையில் பற்றுவைத்த மக்கள், எத்தனையோ ஆபத்துக்களை எமக்காக சந்தித்த மக்கள், அன்பு பாசத்துடன் எம்மை ஆதரித்த மக்கள், நாங்கள் வெல்வோம் என முழுமையாக நம்பிய மக்கள் எல்லோரும் இன்று, ஏக்கத்துடன் எங்கள் தாயகத்தில், எதிர்கால கேள்விகளோடு வாழுகின்றனர். அவர்களுக்கு, உறுதுணையாகவும் ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் நாங்கள்தான் அங்கு இல்லை.
அந்த மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல், அந்த மக்களின் அன்புக்குப் பங்கம் செய்யாமல், அவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்த்துப்போகச் செய்யாமல் அவர்களின் எதிர்காலத்திற்காகப் பாடுபடுவதே, நமக்கான இன்றைய கடமை தோழர்களே.
தேசியத் தலைவர் அவர்கள், குப்பி தரித்து, ஆயுதம் தூக்கி, உடன் பொருள் ஆவி அத்தனையும் இந்த மண்ணின் விடுதலைக்காக ஒப்படைப்பேன் என்று உறுதிமொழி ஏற்ற ஒவ்வொரு போராளியிடமும் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான். அந்த எதிர்பார்ப்பு, மக்களுக்கான விடுதலை ஒன்றுக்கான பணி மட்டுமே.
இன்று, போராட்ட வடிவம் மாற்றமுற்றாலும், போராட்ட இலக்கு மாறவில்லை.
புலத்துச் சூழலில், அதன் கள யதார்த்தங்களுக்கு ஏற்ப, வடிவமாற்றம் பெற்ற போராட்டச் செயற்பாடுகளுக்கு, உறுதுணையாக இருந்து, அதனை வெற்றிநோக்கி நகர்த்திச் செல்வதே, தற்போதுள்ள பிரதான பணி.
மக்களுக்காகப் போராட மனதளவில் முழுமையாகத் தயாராகி, போராட்டக்களத்தில் குதித்தவன் எல்லோரும் போராளியே.
மக்களுக்காகப் போராட மனதளவில் முழுமையாகத் தயாராகி, போராட்டக்களத்தில் குதித்தவன் எல்லோரும் போராளியே.
இதில் போராட்டம என்பது ஆயுதம் தூக்குவதை மட்டுமே ஒற்றை வழியாகக் கொண்டதல்ல. போராட்டம் பல வடிவங்களை வகைகளைக் கொண்டது. இலக்கை அடையப் பல வழிகள் திறந்திருக்கின்றன. புதிய வழியில், புதிய பாதையில் எமக்கான இலக்குநோக்கிய பயணத்தில் இசைந்துகொள்வோம்.
மக்களின் துயர் எண்ணிப் போராடப் புறப்பட்டவன் எப்போதும் போராளியே. இதில் முன்னாள் போராளி, இன்னாள் போராளி என்ற வேறுபாடு கிடையவே கிடையாது.
தோழர்கள்
Geen opmerkingen:
Een reactie posten