புலிகளின் வீழ்ச்சியின் பின் இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இடமில்லை!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:25.52 PM GMT ]
இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் இதுவரையில் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவ்வமைப்பு சாடியுள்ளது.
போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என ஐநா தலைமைச் செயலாளருக்கு ராஜபக்ஷ வழங்கியிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரைகளும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிகாட்டியுள்ளது.
இதேவேளை, துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் நிலை தொடர்பான தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப்படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து, சுவீடனில் அடைக்கலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:55.21 PM GMT ]
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக டுபாயில் அடைக்கலம் கோரியிருந்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் டுபாயில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
45 பேர் இந்தப் படகில் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படகுப் பயணிகளில் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten