தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 april 2015

மூன்று நம்பிக்கையும் மூட நம்பிக்கை!

“நீ யாரை நம்புகிறாய் என்பதைச் சொல்... நீ புத்திசாலியா முட்டாளா என்பதை நான் சொல்கிறேன்...” எப்போதோ யாரோ சொன்னதென்று இதை ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை.
ஈழப் பிரச்சினையில் 3 பேரை நம்புகிறது தமிழ் கூறு நல்லுலகு.
1. சர்வதேசம்.
2. இந்தியா.
3. இலங்கை.
சர்வதேசம் என்பது, இந்த இடத்தில், மேற்குலகத்தைக் குறிக்கிற பெயர்.
மேற்குலகம் என்றால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன். மேலதிகமாக, இந்த மேற்குலகத்தின் அரவணைப்பில் இருக்கும் - ஐ.நா.
இந்த மேற்குலகத்தின் யோக்கியதை என்ன? இவர்களுடைய கடந்தகால குற்றப் பின்னணி என்ன?
இலங்கையில், “தீவிரவாதத்துக்கு எதிரான போர்” என்கிற போர்வையில் இனப்படுகொலைதான் நடக்கிறது என்பது மேற்குலகத்துக்கு நன்றாகத் தெரியும். அது தெரிந்தேதான் இலங்கைக்கு உதவினார்கள்.
தாங்கள் உதவாவிட்டால், 'நான் உதவுகிறேன் பேர்வழி' என்கிற பெயரில், இலங்கையில் வந்து சீனா உட்கார்ந்துகொள்ளுமாம்.... அதுதான் கவலை அவர்களுக்கு! ஒன்றரை லட்சம் தமிழர்களை பலி கொடுத்தாவது, சீனா - இலங்கை உறவை முறித்துவிடவேண்டும் என்கிற வெறியோடு பார்த்தார்கள்.
நடந்த இனப்படுகொலையை பிரெஞ்சு நாளேடு லேமாண்டே ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பிறகும், முள்ளிவாய்க்காலில் சிதறிக்கிடந்த ஆயிரமாயிரம் பிணங்கள் புதைக்கப்படும் முன்பே அவசர அவசரமாக இலங்கையைப் பாராட்டி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றி, மனிதநேயத்தைக் குழிதோண்டிப் புதைத்தது இதே மேற்குலகம்தான்! தீவிரவாதத்தை வீழ்த்திவிட்டதாம் இலங்கை.... அதற்காகப் பாராட்டுகிறார்களாம்!
ஒரே ஒரு இஸ்ரேலியன் கொல்லப்பட்டிருந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைத்திருக்கும் - அமெரிக்காவும் பிரிட்டனும் ஐரோப்பாவும்! கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரும் தமிழன் என்பதால், கொன்று குவித்த மிருகங்களைப் பாராட்டி தீர்மானம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
இனப்படுகொலை கொடூரமானது தான். அதைக்காட்டிலும் கொடூரமானது, கொலையாளிகளைப் பாராட்டி, ஐ.நா. அரங்கில் இவர்கள் போட்ட தீர்மானம். உலகில் இனப்படுகொலை நடந்த எந்த மண்ணின் மீதாவது இப்படியொரு பாராட்டுத் தீர்மானத்தைத் திணிக்கும் துணிவு சர்வதேசம் என்று சொல்லிக்கொள்கிற இந்த அற்பப் புழுக்களுக்கு இருந்ததா, இருக்கிறதா?
குறைந்தது நாற்பதாயிரம் அப்பாவித் தமிழர்களாவது, போரின் பெயரால் கொல்லப்பட்டிருப்பதாக, இதே ஐ.நா. அடுத்த ஆண்டே அறிவித்ததே..... உடனடியாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலைக் கூட்டி, 'அவசர அவசரமாக பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்' என்று அறிவித்தார்களா?
சீனாவின் மடியிலிருந்து இறங்கமறுக்கும் இலங்கையை வழிக்குக் கொண்டுவர - “போர்க்குற்றம்” , “சர்வதேச விசாரணை” என்றெல்லாம் பிளாக்மெயில் செய்வதும், இலங்கையின் மாராப்பு கொஞ்சம் விலகினாலே மெய்சிலிர்த்துப் போவதும் வாடிக்கையாக இருந்தது மேற்குலகத்துக்கு! இதையெல்லாம் கூட நம்பினோம் நாம்.
நிச்சயமாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடக்கும் - என்று நாம் நம்பிய நிலையில், இலங்கையில் திட்டமிட்ட ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, “புதிய ஆட்சியில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.... சர்வதேச விசாரணை போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்த வாய்ப்பை நிராகரித்துவிடக் கூடாது” என்று ஆறாவது ஆண்டில் பிளேட்டைத் திருப்பிப் போடுகிறார்கள்.
2009ல் நடந்தது அந்த திட்டமிட்ட இனப்படுகொலை. அடுத்த ஆறு ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து ஒரு நாடகம் நடந்தபடியே இருந்தது.
இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் - என்கிற பெயரில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவார்கள். அதில் உருப்படியாக ஓரிரு வார்த்தைகள்தான் இருக்கும். கடைசி நிமிடத்தில், “கருத்தொற்றுமை” என்கிற அடிப்படையில், அந்த ஓரிரு வார்த்தைகளையும் நீக்கிவிட்டு, சாலமன் பாப்பையா பட்டிமன்றம் மாதிரி, ஒரு பக்கம் பார்த்தால் யானை, மறுபக்கம் பார்த்தால் பானை என்று முடித்துவிடுவார்கள்.
இதனால்தான், மேற்குலகத்தின் குழப்பக்கூத்துக்குக் களமாக இருந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை - "அது ஒரு கேலிக்கூத்து" என்கிறார், பெரியவர் பிரையன் சேனவிரத்ன.
கேவலம் ஒரு சுண்டைக்காய் நாடு, சீனாவைக் காட்டிக் காட்டியே மேற்குலகத்தை மிரட்டிக் கொண்டிருந்தது.
மண்டை காய்ந்துபோன மேற்குலகம், ஐ.நா.மனித உரிமை பேரவையில் தாங்கள் கிண்டிய உப்புமாதான் உலகத்திலேயே உன்னதமான உப்புமா என்று சொல்லி நம் பின்னந்தலையில் பின்னல் போடப் பார்த்தது. அதைப்பார்த்தும் சுரணை வராத கேடுகெட்ட சமூகமாகவே நாம் இருந்ததும் இருப்பதும்தான் உலக மகா கொடுமை.
இரண்டாவது நம்பிக்கை, இந்தியா. 'சோனியாவால் தானே இனப்படுகொலை நடந்தது. மோடி வந்ததும் அதற்கு நியாயம் கிடைத்துவிடும்' என்று வெள்ளந்தியாக நம்பியவர்கள் பலர்.
இன்று, "எதிர்க்கட்சியாக இருந்தபோதே - 'இனப்படுகொலை நடக்கத் தூண்டிய சோனியாவைக் கண்டிக்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்ற வக்கில்லாத ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு மட்டும் கிழித்துவிடப் போகிறதா" - என்று பேசியவர்களின் குரல்தான் உண்மையாகியிருக்கிறது.
மீள்குடியேற்றம், மறுவாழ்வு, புனரமைப்புப் பணிகள், வீட்டு வசதி, ரயில் வசதி, சம உரிமை, பதின்மூன்று - என்றெல்லாம் மோடி பேசுவதைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால், சோனியா பேசுவதைப் போலவே இருக்கிறது.
ஏழெட்டு மாதத்தில், ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்று குவித்து, அந்தப் பிணக்குவியலை மூடி மறைப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தது இலங்கை. சர்வதேசத்தின் பிடியிலிருந்து இந்தியா தன்னை எப்படியாவது காப்பாற்றிவிடும் என்று உறுதியாக நம்பியது அது.
தமிழனுக்குச் செய்யலாம்..... நம்புகிற நண்பனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் பார்க்காமல், ஜென்ம வைரிகளான சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் கைகோத்துக்கொண்டு களத்தில் இறங்கி இலங்கையைக் காப்பாற்றியது இந்தியா.
பாகிஸ்தானின் தேசியதின நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த நாட்டின் தூதரகத்துக்கு மத்திய இணை அமைச்சர் போனதைப் பார்த்ததும், நாட்டுப்பற்று பொங்க நாண்டுகொண்டு நின்ற தேசிய ஊடகம் எதுவாவது, சீனாவுடனும் பாகிஸ்தானுடம் கைகோத்துக் கொண்டு நிற்பது நியாயமா- என்று ஒருவார்த்தை கேட்டதுண்டா? தமிழனின் முதுகு என்றால் மட்டும், எந்த எதிரியுடனும் சேர்ந்துகொண்டு குத்தலாம் என்கிறார்களா?
இந்தியா இலங்கையின் கூலிப்படை போலவே இயங்கியது - என்று சொன்னது நாமில்லை...... பாரதீய ஜனதாவின் மரியாதைக்குரிய தலைவர் யஷ்வந்த் சின்ஹா. கணவர் ராஜீவின் ஆட்சியில், இந்திய அமைதி காப்புப்படை இலங்கையின் கூலிப்படையாகவே இயங்கியது.
(அந்தப் படை செய்த அராஜகங்களைப் பட்டியலிட்டது கூட நாமில்லை... தமிழக பாரதீய ஜனதா மாநிலப் பிரிவு ஒன்றின் தலைவர்!) அன்று ராஜீவ் செய்த அதே தவறை, நேற்று சோனியா செய்தார். நேற்று சோனியா செய்த அதே தவறை, இன்று ஸ்ரீமான் மோடி செய்கிறார்.
இனப்படுகொலை செய்வதற்கான சகல வசதிகளையும் இலங்கைக்குச் செய்துகொடுத்ததுடன் நில்லாது, இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபக்சக்களையும் பொன்சேகாக்களையும் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அன்னை சோனியா செய்தது தமிழினத் துரோகம் என்றால், அவரது அடிச்சுவட்டில் அடிபிறழாமல் நடக்கிற மோடி செய்வது மட்டும் வேறென்ன?
மூன்றாவது நம்பிக்கை - இலங்கை!
சிங்கத்துக்குப் பிறந்த சிறுநரிகளை நம்புகிற சிலர் இப்போதும் இருக்கிறார்கள் நம்மிடையே! இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் - என்று நம்புகிறார்கள் அவர்கள். சர்வதேச விசாரணை என்றெல்லாம் சொன்னால் சிங்களச் சமூகம் கொதித்துவிடும்,
அது தமிழருக்கு ஆபத்தாகிவிடும் - என்றெல்லாம் பூச்சாண்டிகாட்டும் பேச்சாண்டிகள் அவர்கள். இலங்கையை மட்டுமில்லாமல் புலிகளையும் சேர்த்தே விசாரிக்கவேண்டியிருக்கும் - என்பது இவர்களது அடுத்த மிரட்டல். கமலாலயத்தில் இருக்கிற சுவாமிதான் இவர்களது ரூட்டுதல.
மூன்றாவது நம்பிக்கைக்கு முதலில் வருகிறேன்.
இலங்கையை இலங்கையே விசாரித்துக்கொள்ளும் என்று நம்ப இவர்கள் ஒன்றும் பச்சைக் குழந்தைகள் அல்ல, பச்சைத் துரோகிகள்! வேறு இச்சைகளால் இந்த இனத்தைக் கொச்சைப் படுத்துபவர்கள்.
இந்த இனத்திலேயே முளைத்திருக்கும் இந்த விஷத் தாவரங்கள்தான், ஒரு நச்சரவத்தைக் காப்பாற்றுவதற்காக நம்மை அச்சுறுத்துகின்றன. 'பாம்பை அடிக்க முயன்றால் அது கடிக்கும்' என்று நம்மை பயமுறுத்தியபடியே, அதற்குப் பாலூற்றுகிற பயங்கரவாதிகள் இவர்கள்.
புலிகளுக்கும் சேர்த்தே விசாரணை - என்று மிரட்டும் இந்த நல்லவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்.....
'இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை' - என்று ஆறு ஆண்டுகளாக உறுதியாகப் போராடும் எங்கள் புலம்பெயர் உறவுகள் - 'இலங்கையை மட்டும்தான் விசாரிக்க வேண்டும், புலிகளை விசாரிக்கக் கூடாது' என்று எப்போதாவது கோரிக்கை வைத்ததுண்டா?
சர்வதேச விசாரணை நடைபெற்றால்தான், இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுகிறபோது, புலிகள் மீதான குற்ச்சாட்டுகள் பொய்யானவை என்பதும் நிரூபிக்கப்படும் என்று சர்வநிச்சயமாக நம்புகிறார்கள் அவர்கள்.
சர்வதேச விசாரணை வேண்டாம் - என்று இலறங்கை அடம்பிடிப்பதற்கு இந்த இரண்டே காரணங்கள்தானே அடிப்படை. தான் செய்த படுகொலைகள் அம்பலமாகும்போது, புலிகள் மீது தான் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதும் அம்பலமாகிவிடும்....
அது விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச அரங்கில் பலப்படுத்திவிடும் என்று தானே அஞ்சுகிறது இலங்கை! வேறெதற்காக - என்னை நானே தான் விசாரித்துக் கொள்வேன் - என்று அடம்பிடிக்கிறது!
இலங்கையின் காலை நக்கிப் பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கும் துரோகிகள், 'இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளட்டும்' என்று பேசுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உள்ளேயிருக்கிற அனைத்தையும் உறிஞ்சிவிட்டுப் போடும் எலும்புத் துண்டுக்காகக் கூட வாலாட்டுகிற விலங்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நமக்கு நேரமில்லை.
இந்தியா மீதான நம்பிக்கை இருக்கிறதே... அது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். நிராயுதபாணியாக நிற்கிற நம்மை வெட்ட வருகிறவனுக்கு வெட்டரிவாள் எடுத்துக் கொடுத்த நாடு இது. 'பாத்துவெட்டு, கைவலிக்கப் போகுது' என்று வெட்டியவனிடம் பாசத்தைப் பிழிந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு வந்தவுடன், நம்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. 'நீதான் வெட்ட வந்தாய், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உன்னிடமிருந்த வெட்டரிவாளைப் பிடுங்கி இவர் உன்னை வெட்டினார்' என்று பொய் சாட்சி சொன்னது.
இந்த இழிபிறவிகள் நமக்கு நியாயம் வழங்கிவிடுவார்கள் என்று நம்புகிறவர்கள், அற்பப் பிறவிகளாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள், இவர்களைக் காட்டிலும் கடைந்தெடுத்த இழிபிறவிகளாகத்தான் இருக்க வேண்டும்.
இந்தியா செய்த மோசடி ஆரம்பத்திலேயே அம்பலமாகிவிட்டது. சர்வதேசம் செய்த மோசடி, கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகியிருக்கிறது. இதுதான் வித்தியாசம்.
மார்ச் மாதம் வெளியிட இருந்த அறிக்கையைத் தள்ளிவைத்திருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில், செப்டம்பரிலும் அதை வெளியிடாமல் தள்ளிவைக்கக் கூடும். அப்படியே வெளியானாலும், அந்த அறிக்கை உப்புசப்பற்ற அறிக்கையாகத்தான் இருக்கப் போகிறது. அதை நம்பிக் காத்திருப்பது மாதிரி ஒரு வெறுவாகெட்ட வேலை வேறில்லை.
சர்வதேசம், இந்தியா, இலங்கை - இந்த மூன்றின் மீதும் வைக்கிற நம்பிக்கை, சந்தேகத்துக்கு இடமின்றி மூட நம்பிக்கை. இந்த மூடநம்பிக்கைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சர்வதேசத்தை நம்பக்கூடாது.... இந்தியாவையும் இலங்கையையும் நம்பக்கூடாது... சரி.... தமிழ்நாட்டைக் கூடவா நம்பமுடியாது - என்று கேட்கிறீர்களா? கோழைகளைப் பற்றிப் பேசுவதில்லை என்றுதான் தீர்மானித்திருந்தேன். என்றாலும், பேசவேண்டியிருக்கிறது இப்போது!
இந்தியாவும் ஒட்டுமொத்த உலகமும் நம்மை மோசடி செய்த பிறகு, தொப்புள்கொடி உறவுகளுக்காக நாம் கேட்பதற்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது.
ஈழம் கேட்கவேண்டாம் நாம்..... அதை ராஜபக்சவின் பிள்ளைகளுக்கோ, அந்தப் பிள்ளைகளின் கணக்கிலடங்காத காதலிகளுக்கோ, அந்தக் காதலிகளுக்காக அந்த ஆண்பிள்ளைச் சிங்கங்கள் வாங்கிக் கொடுத்திருக்கும் குதிரைகளுக்கோ அல்லது சுதந்திரம் முக்கியமில்லை சுமந்திரன்தான் முக்கியம் என்று நமக்குப் போதிக்கும் கழுதைப்புலிகளுக்கோ எழுதிக் கொடுத்துவிடுவோம்.
ஈழம் வேண்டாமென்றால் வேறென்ன வேண்டும் என்கிறீர்களா?  அது என்ன என்பதைத்தான் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
புகழேந்தி தங்கராஜ்
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr7B.html

Geen opmerkingen:

Een reactie posten