[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 09:14.26 PM GMT ] [ பி.பி.சி ]
ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் கடத்தியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஷேஷாச்சலம் வனப்பகுதியில் செவ்வாய்க் கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ரூயா அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டறியும் பணியில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து தமிழக காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று மதியம் இரண்டு மணியளவில், கொல்லப்பட்டவர்களில் 7 பேரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் ஏழு பேரும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
'நகரியில் கைதுசெய்யப்பட்டனர்'
திங்கட்கிழமைன்று பிற்பகலில் ஆந்திராவில் கூலி வேலை செய்வதற்காக திருவண்ணாமலையிலிருந்து 8 பேர் பேருந்தில் புறப்பட்டதாகவும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற இடத்தில் ஆந்திர காவல்துறையினர் இவர்களில் ஏழு பேரை பேருந்திலிருந்து இறக்கி கைதுசெய்ததாகவும் மீதமிருக்கும் ஒருவர் தப்பிவந்து தங்களிடம் தகவல் அளித்ததாகவும் அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மரம் கடத்தும்போது தடுக்கவந்த காவல்துறையைத் தாக்கியதால் இந்தத் தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறுவது தவறான தகவல் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் சரியான இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.
கொல்லப்பட்ட முனுசாமி என்பவரின் உடலைப் பெற்றுக்கொள்ள வந்த அவரது தாயார், தன் மகன் கூலி வேலைக்காகவே ஆந்திரா வந்ததாக தெரிவித்தார்.
இன்று காலையில், கொல்லப்பட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில், ஆந்திராவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
மனித உரிமை அமைப்புகள் கேள்வி
சம்பவம் நடந்த பின்னணி குறித்து, மனித உரிமை அமைப்புகள் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
கொல்லப்பட்டவர்களின் அருகில் கிடக்கும் செம்மரக் கட்டைகள் பழையதாக இருப்பது, சில கட்டைகளில் எண் இருப்பது, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மார்பிலும் தலையிலும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அவர்களது உடலில் கடுமையான காயங்கள் இருப்பது ஆகியவை பெரும் சந்தேகத்தை எழுப்புவதாக மருத்துவமனைக்கு வந்த மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
தவிர, தப்பி ஓடியதாகக் கூறப்படுபவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படாதது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.
புதன்கிழமையன்று மாலையில், ஏழு பேரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக அரசுக்குச் சொந்தமான அமரர் ஊர்திகளில் இந்த உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
நீதிவிசாரணை கோரும் காங்கிரஸ்
சம்பவம் நடந்த இடத்துக்கு நான் நேரில் சென்று பார்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருப்பதி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிந்தா மோகன், கொல்லப்பட்டவர்கள் அங்கே கொல்லப்படவில்லை என்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் சந்திரகிரிக்கு அருகில் அவர்கள் கொல்லப்பட்டு இந்த இடத்துக்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
இவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் இரத்த அடையாளம் எதுவும் இல்லை என்றும், அவர்கள் சடலங்களுக்கு பக்கத்தில் இருந்த செம்மரக்கட்டைகள் எல்லாமே பழைய கட்டைகள் என்றும் அருகில் இருந்த செம்மரக்கட்டை கிடங்கில் இருந்து அவை கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
இது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்கவேண்டும் என்றும் அந்த நீதிபதியும் கூட ஆந்திர மாநிலத்தை சாராதவராக இருக்கவேண்டும் என்றும் தற்போது செய்யப்படும் பிரேதபரிசோதனைகளின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் திருப்பதி மாவட்ட ஆட்சியரும், ஆந்திர அரசும் இதில் மிகப்பெரிய அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt7E.html
இதுவும் இனப்படுகொலைதான்” வ. கெளதமன், - மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு மனிதனுக்கு இல்லையா? சீமான் - 20 தமிழர்கள் கோரக் கொலை வைகோ கண்டனம்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 08:59.15 PM GMT ]
“இதுவும் இனப்படுகொலைதான்” ஆந்திரா அரசுக்கு இயக்குநர் வ. கெளதமன் கடும் கண்டனம்
தனது குடும்பத்தைக் காப்பாற்ற கூலிகளாக வேலைக்குச் சென்ற இருபது அப்பாவித் தமிழர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற ஆந்திரக் காவல்துறையை வன்மை யாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் மட்டுமல்ல கோடான கோடி தமிழர்களின் மனம் கொந்தளித்துக் கிடக்கிறது. தொடர்ந்து ஆணவத்தோடு நடந்து கொள்ளும் அதிகார வர்க்கங்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நடந்ததை ஆராய்ந்து அறியும் போது, மனம் சொல்லமுடியாத வேதனையடைகிறது. பெரும் வரலாற்றுச் சுவடுகளை சுமந்து நிற்கும் ஆதிகிராமமான படைவீடு என்கிற ஊரில் மூன்று தமிழர்களும் இரும்பிலியில் ஒன்பது பேரும், ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம் பட்டு என்கிற ஊரில் எட்டு தமிழர்களும் என இருபது பேரை ஆந்திரக் காவல்துறை காட்டில் வைத்து கைது செய்து ஒரு பேருந்தில் கடத்திச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்திரவதைச் செய்தும், நெருப்பால் சுட்டும், சுட்டுக் கொன்றப் பிறகே மீண்டும் காட்டில் கொண்டு வந்து போட்டு சண்டையிட்டுக் கொன்றதாக இவ்வுலகத்திற்கு அறிவித்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய காட்டுமிரண்டித்தானம். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும் இதற்கு என்ன வேறுபாடு இருக்கிறது.
திருவண்ணமலை சரகத்திலுள்ள செங்கத்தை தலைநகராகக் கொண்டு “நன்னன்” என்கிற மன்னன் ஜவ்வாது மலையை சீறும் சிறப்புமாக ஆண்டு வந்ததாகவும், அங்கு வாழ்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, ஆடு,மாடு, மான், குரங்குகள் யானைகள் அனைத்தும் கொண்டாட்டத்தோடு வாழ்ந்த தாகவும் சங்க இலக்கியமான “மலைபடுகடாம்” சான்றளிக்கிறது. ஆனால் இன்றோ.. அதே மண்ணில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கூட்டம் கூட்டமாகக் குரங்கினங்கள் செத்துக் கொண்டிருக்கிறது. படைவீடு மண்ணில் தண்ணீரில்லாமல் கிடக்கும் கிணற்றில் தூர்வாறுவதற்காக இறங்கிய ஆறு தமிழர்கள் கயிறு அறுந்து விழுந்தும், மண் சரிந்து விழுந்தும் செத்திருக்கிறார்கள். ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், விவசாயம் செய்ய வழியே இல்லாத அந்த மக்கள் வாழ இந்த அரசாங்கம் என்ன செய்தது?
வெட்டியவனை சுட்ட பாவிகள் – மரத்தை அறுத்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிற பண முதலைகளை என்ன செய்ய முடிந்தது. இந்த அகங்கார திமிரை, இந்த அத்துமீறிய படுகொலைகளைத் தமிழர்கள் இனியும் நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகள் இதுவரை சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த இரு இனங்களிடையே இது இனப்பகையை உருவாக்கி விடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அது இறையாண்மையை ”பலி” வாங்கிவிடும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.
சில மாதங்களுக்கு முன் சென்னையில் அடுக்கு மாடி கட்டடம் இடி விழுந்து தரை மட்டமானது. அந்தக் கட்டட வேலையில் பணி புரிந்து பெரும்பாலானோர் ஆந்திரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள். இயற்கைச் சீற்றத்தில் இந்நிகழ்வு நடந்ததென்றாலும் தமிழகம் மனித நேயம் மற்று உறங்கிக் கிடக்கவில்லை. பதறியது தமிழக அரசு உரிய நிவாரணம் அளித்து இந்நிகழ்வு தொடர்பாக தொடர் விசாரணை நடத்தியது. ஆனால் தற்போது ஆந்திரத்தில் அப்படியான நிலையா உள்ளது. ஆந்திர முதல்வரின் மேற்பார்வையில் நடந்தேறிய நிகழ்வாக அவரது அறிக்கை செயல்பாடுகள் நமக்கு சான்றளிக்கிறது. இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல, அதையும் கடந்த தமிழினப்பகையே வெளிப்படுகிறது.
மரணமடைந்த அப்பாவித்தமிழர்களை முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அதற்கான ஓர் உண்மை அறியும் குழுவை நியமித்து, ஆந்திர- தமிழக அரசுகள் விசாரணை நடத்த வேண்டும். அந்த உண்மை அறியும் குழு, ஆந்திர அரசு மருத்துவப் பரிசோதனை செய்திருந்தாலும், இறந்தவர்களை மீண்டும் ஒரு முறை தமிழக அரசு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
அதோடு மட்டுமல்லாது இந்தக் கோர சம்பவத்திற்கு பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. கங்காராவ் மற்றும் இதில் பங்குக் கொண்ட அனைவரும் உடனே பதவி விலக வேண்டும். தவறினால் ஆந்திர அரசு அவர்களை பதவி நீக்கம் செய்து நீதிவிசாரணை தொடங்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு இருப்பத்தைந்து இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழக அரசும், ஆந்திர அரசை எதிர்ப்பார்க்காமல் ஒரு நீதியரசரை நியமித்து நீதி விசாரணை நடத்துவதோடு பத்து இலட்சம் நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும். இந்நிகழ்வினை மிக உன்னிப்பாக கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படவில்லையென்றால் அல்லது வேடிக்கை பார்த்தால் இந்தியாவிற்குள்ளேயே தமிழர்களைக் கொல்ல உங்கள் ஆதரவும் இருப்பதாக நாங்கள் உறுதி செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு இல்லையா?- சீமான் கண்டனம்
ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் முதலாளிகளாக இருக்கும் ஆந்திர முதலைகளை விட்டுவிட்டு மரம் வெட்டும் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தியும் வெறியாட்டம் போடும் ஆந்திர அதிகாரிகள், உச்சபட்ச கொடூரமாக 12 தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திர அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற கொடூரத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
திருப்பதி சேசாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகவும் அப்போது ஆந்திர வனதுறையினருக்கும் அவர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் இதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் திரைக்கதைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு கற்பனைக் கதையை சித்தரித்து 20 பேரைக் கொன்று வெறிட்டம் போட்டிருக்கிறது ஆந்திர அதிகாரத் தரப்பு. முதலில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகக் கசிந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடாக மாற்றப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட 20 பேர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்பது நெஞ்சை நொறுக்கக்கூடிய துயரமாக ஒவ்வொரு தமிழர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது. மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மரம் வெட்டுவது தவறு என்பது மறுக்க முடியாது. அதற்காக மனிதர்களை வெட்டுவது நியாயமாகிவிடுமா? வெட்டப்பட்ட மரத்தை நாளைக்கு ஒரு கன்று வைத்து நாம் உருவாக்கிவிடலாம். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை ஆந்திர அதிகாரிகளால் மீட்டுத்தந்துவிட முடியுமா? ஒரு மரக்கட்டைக்குக் கொடுக்கிற மரியாதை மனித உயிருக்குக் கிடையாதா?
அப்பாவித் தொழிலாளர்கள் மீது கொலைத்தாக்குதல் நடத்திய ஆந்திர அதிகாரிகள் செம்மரக் கடத்தலின் முதலாளிகள் மீது என்றைக்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் மரம் வெட்டியதாகச் சொல்லி தொழிலாளர்களைக் கைது செய்யும் ஆந்திர அரசு, அந்தத் தொழிலாளர்கள் யாருக்காக மரம் வெட்டினார்கள், அவர்களை மரம் வெட்டப் பணித்தது யார் என்பதை எல்லாம் என்றைக்காவது விசாரித்து அந்த முக்கியப் புள்ளிகளை என்றைக்காவது கைது செய்திருக்கிறார்களா? தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மேகதாது அணை கட்டக்கூடாது என்பதற்காக கர்நாடகா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமக்கான உரிமையைக் கேட்ட பாவத்துக்காக கேரளா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். சிங்கள இனவெறிக்கு ஆளாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் தமிழன் அடிவாங்கி வருகிறான். இந்நிலையில் செம்மரக் கடத்தல் எனக் கூறி அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாற்புறமும் தமிழனுக்கான பாதுகாப்பற்ற சூழலும் கேட்கத் துப்பற்ற நிராதரவையுமே காட்டுகிறது.
12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
20 தமிழர்கள் கோரக் கொலை- ஏப்ரல் 10 சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை வைகோ அறிவிப்பு
இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் நடக்காத கொடூரமாக 20 அப்பாவி கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர மாநிலக் காவல்துறையால் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கோரக் கொலைகள் ஆகும்.
ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல் பேர்வழிகள், தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள ஏழைத் தொழிலாளர்களிடம், ‘நாங்கள் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி வாங்கி இருக்கின்றோம்’ என்று கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று, அற்பமான கூலியைக் கொடுத்து, அங்கே மரங்களை வெட்டுகின்ற வேலையில் ஈடுபடுத்தி வந்து உள்ளனர்.
பல நேரங்களில் தொழிலாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு, காக்கி நாடா, ராஜமுந்திரி, நெல்லூர் சிறைகளில் ஏராளமான தமிழர்கள் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டு வாடி வதங்குகின்றனர் என்ற உண்மையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போதைய சம்பவத்தில், 20 தமிழர்களும் 6 ஆம் தேதி மாலையிலேயே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். எங்கோ ஒரு இடத்தில் அடைத்து வைத்து, அவர்கள் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியும், நெருப்பால் சுட்டும் சித்திரவதை செய்து உள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் நெருப்பு வைத்துக் கருக்கிய அடையாளங்கள் உள்ளன.
அரை நிர்வாணமாக உடல்கள் கிடக்கின்ற இடத்தில், செம்மரக் காடுகளே இல்லை. வெட்டவெளியாக இருக்கின்றது. ஆனால், உடல்களுக்கு அருகில் நன்கு செதுக்கப்பட்ட பழைய செம்மரக் கட்டைகளைப் போட்டு வைத்து உள்ளனர். அவர்களை அடைத்து வைத்து இருந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று விட்டு, இந்தக் கோர நாடகத்தை நடத்தி உள்ளனர். இறந்தவர்களின் உடல்களில் தலை, நெற்றி, மார்பில்தான் குண்டுகள் பாய்ந்து உள்ளன. மிக அருகாமையில் இருந்துதான் சுட்டு இருக்கின்றார்கள்.
கொலையான 20 பேர்களின் அலைபேசிகளும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதி காவல்துறை அதிகாரியாக இருக்கின்ற டி.ஐ.ஜி. காந்தாராவ், ‘செம்மரக் காடுகளுக்குள் மரம் வெட்ட யார் வந்தாலும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லுவோம்’ என்று ஏற்கனவே மிரட்டி இருக்கின்றார்.
ஏழைத் தொழிலாளர்களை ஈவு இரக்கம் இன்றிக் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டுக் கொன்ற காவல்துறையினரை வாழ்த்துகின்ற விதத்தில், ஆந்திர மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் பொலாஜா கோபாலகிருஷ்ண ரெட்டி, ‘கொள்ளையடிக்க வந்தால் சுடாமல் என்ன செய்வார்கள்?’ என்று திமிராகக் கூறி உள்ளார்.
செம்மரங்கள் வெட்டிக் கடத்துகின்ற வேலையில் இந்தத் தொழிலாளர்கள் ஈடுபடவில்லை; செம்மரக் கடத்தலில் ஈடுபடுகின்ற ஒப்பந்தக்காரன் அனுமதி இருப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்ததன் பேரில்தான் சென்று உள்ளார்கள்.
இவர்களுக்குச் செம்மரங்களைக் கடத்தவும் தெரியாது; அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கவும் தெரியாது.
கூலி வேலைக்குச் சென்று கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் தங்கள் குடும்பங்களை வாழ வைக்கும் இந்த ஏழைத் தமிழர்களைப் படுகொலை செய்த, காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் பணி இடை நீக்கம் செய்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது, ஆந்திர அரசாங்கத்தின் தலையாய கடமை ஆகும்.
ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை நடத்திய படுகொலையை ஆந்திர அரசு நியாயப்படுத்த முனைவது மனித உரிமைகளை நசுக்குகின்ற அக்கிரமம் ஆகும்.
எனவே, ஆந்திர மாநில அரசைக் கண்டித்தும், இப்படுகொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக் கோரியும், நீதியை நிலைநாட்டுவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நேரடி நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், ஏப்ரல் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, எனது தலைமையில் முற்றுகை அறப்போர் நடத்தப்படும்.
பத்தாம் தேதி காலை 10 மணிக்கு வேலூர் மாநகரில் இருந்து அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்ல இருப்பதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt7D.html
Geen opmerkingen:
Een reactie posten