கனடிய மனிதவுரிமை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெண்கள் தினக் கருத்தரங்கில் மேற்படி கருத்தைத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜோன் ஆர்கியு அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் பெண்கள் மாத்திரமல்ல அனைத்து இனப் பெண்களிற்கும் எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சர்வதேசம் இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கனடியத் தேசிய நீரோட்டத்தின் இணைவாக பல்லின மக்களையும் ஒன்றிணைத்த நிகழ்வாக கனடிய மனிதவுரிமை மையம் ஒன்ராறியோ சட்டசபையில் நடத்திய பெண்கள் தின கருத்தரங்கு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சிறீலங்காவில் தமிழ் பெண்களிற்கு இடம்பெற்ற இப்போதும் இடம்பெற்று வரும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து அக்கறையோடு அறிந்து கொண்டனர்.
தமிழ்ப் பெண்கள் விவகாரத்தை இன்னொரு படி மேலாக கொண்டு சென்ற இந் நிகழ்வில் சிறீலங்காவில் தமிழ் பெண்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் ஈரான் ஆப்கான் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என்பன தொடர்பான துறைசார் வல்லுனர்களின் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது.
சட்டசபை அமர்வு இடம்பெற்ற நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதால் பல ஒன்றாரியோ சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து நிகழ்வில் சிறிதுநேரம் கலந்து கொண்டதுடன், தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் கனடிய மனிதவுரிமை மையத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வின் ஒரு கட்டத்தில் இருக்கை நிரம்பிய போது நின்ற நிலையில் பலர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதும், பலரும் உள்ளே செல்வதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது ஒன்றாரியோ சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் திரும்பி செல்ல நேர்ந்தது.
இந்த நிகழ்வில் ஈரானில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மற்றும் தலிபான்களால் ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தானில் பெண்கள் படும் இடர்கள் மதத்தை முன்னிலைப்படுத்தும் சட்டங்கள் போன்ற விபரங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
ஈழத்தமிழர்களின் துயர்களிற்கான குரலாக ஆரம்பிக்கப்பட்ட கனடிய மனிதவுரிமை மையம் இன்று கனடிய அரசுடனும் ஏனைய கட்சிகளுடன் ஒரு நெருக்கமான தொடர்பை பேணி வருதோடு தமிழர்களின் துண்பங்களை அவர்களிற்கான நீதிக்கான நியாயங்களை இராஜதந்திர அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வுகளின் வரிசையில் இந்த நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten