தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

தடுப்பிலுள்ள கர்ப்பிணிப் பெண் மீது வல்லுறவு: குற்றச்சாட்டை பொலிஸார் மறுப்பு



ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதிச் சந்தர்ப்பம்: நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 10:20.13 AM GMT ]
வடக்கு கிழக்கில் தற்போது நடைபெறும் இராணுவ அச்சுறுத்தல்கள், கைதுகள், நில அபகரிப்புகள் மற்றும் அச்சம் நிறைந்த சூழல் தொடர்பாக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர்சபையின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத் தொடரில் சி.சிறீதரன் எம்.பி ஆற்றிய உரை வருமாறு.
கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே,
தற்போது நடைபெறுகின்ற பொருளாதாரம் தொடர்பான திருத்தச் சட்டமூலங்கள் பற்றிய விவாதத்திலே, வடக்குக் கிழக்கில் இடம்பெறுகின்ற சில துன்பகரமான சம்பவங்கள் பற்றியும் மக்களுடைய அச்ச சூழல் பற்றியும் நான் இங்கு கூற விரும்புகின்றேன்.
2014.03.13ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பகுதியில் பாலேந்திரன் ஜெயக்குமாரி, இவரின் 12 வயதுச் சிறுமி பாலேந்திரன் விபூசிகா ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் மக்கள் கடும் பதற்ற நிலையில் காணப்படுகிறார்கள்.
மனம் திறந்து மற்றவர்களுடன் பேச அச்சப்படுகிறார்கள். துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாங்கள் வாழ்வதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். 2014.03.26ஆம் திகதி கிளிநொச்சியைச் சேர்ந்த மோகன் கேதீஸ், வடமராட்சி உடுப்பிட்டியைச் சேர்ந்த துரைராசா அமுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2014.04.05ஆம் திகதி சனிக்கிழமை நடு இரவில் உரும்பிராயில் மூன்று தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதே தினம் முல்லைத்தீவில் 05 பேரும், சாவகச்சேரியில் 03 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2014.04.07 திகதி வடமராட்சியைச் சேர்ந்த பத்திநாதர் அலமன்றோஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை வெள்ளை வானில் வந்தோரால் ஆனையிறவில் வைத்து துப்பாக்கிவெடி பிறப்பிக்கப்பட்டு, வானுக்குள் தூக்கி போடப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனைவிட 2014.04.08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 11.00 மணியளவில் கறுப்புநிற வாகனத்தில் வந்தோரால் ஊர்காவற்றுறையிலுள்ள அவரின் வர்த்தக நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2014.04.07ஆம் திகதி காலை பருத்தித்துறை கடற்கரையில் வைத்து, ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி, மச்சான் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் கைக்குண்டு வைத்திருந்ததாக தாங்களே இடத்தைக் காட்டி, அப்பாவி இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இதுவரை 48 பேருக்குமேல் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமைகள் அங்குள்ள மக்களிடத்தில் ஓர் அச்ச சூழலையும், ஒரு பயந்த நிலையையும் இரத்தம் உறைந்த நிலையில் வாழ வேண்டிய சூழலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அண்மைய நாட்களில் குறிப்பாக கடந்த வாரம் பல கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு, மக்கள் வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டு, அவர்களுடைய உடைமைகள், ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
அண்மையில் தர்மபுரம், வட்டுக்கோட்டை கிராமங்களோடு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அம்பாள்குளம், கிருஷ்ணபுரம், செல்வாநகர் போன்ற கிராமங்களும் கடுமையாக சுற்றிவளைப்புத் தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் இரத்தம் உறைந்த ஒரு அச்ச சூழலில் வாழ்கின்றார்கள். இதைவிட, வீதித் தடைகள் போடப்பட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்ட மக்கள் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா ஓமந்தை தடைமுகாம் சோதனைச் சாவடியில் மீண்டும் அடையாள அட்டை, பொருட் பரிசோதனைகள் இராணுவ மற்றும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் நிறைவுற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள், வகை தொகையற்ற கைதுகள், இராணுவத்திற்கு பெண் பிள்ளைகளைச் சேர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்பிலவு கிராமத்தில் 18 - 25 வயதுக்கிடைப்பட்ட பெண்கள் கட்டாயமாக இராணுவத்திற்குச் சேர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஜெயபுரம் என்ற கிராமத்தில் பாடசாலை மாணவிகள் இராணுவத்தில் சேருமாறு வற்புறுத்தப்படுகின்றார்கள்.
2013ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) பரீட்சை எழுதிய மாணவிகள் பரீட்சையில் சித்தி பெறாவிட்டாலும்கூட, அவர்களை நீங்கள் இராணுவத்தில் சேருங்கள் என வீடுவீடாக இராணுவத்தினர் சென்று வற்புறுத்துகின்றார்கள். இதனால், அவர்கள் மிகவும் துன்பகரமான ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
ஆகவே, இன்றைய நாட்கள் வடக்குக் கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய சோதனை நாட்களாக - அச்சம் நிறைந்த நாட்களாக காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி அண்மையில், யாழ். கட்டளைத் தளபதி அவர்கள் வலிகாமம் வடக்கிலே ஒருபோதும் மீள்குடியேற்றம் சாத்தியப்படாது என்று எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ விநாயகமூர்த்தி அவர்களிடம் தெரிவித்ததை யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற தினக்குரல், வலம்புரி பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.
இந்த மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கையில், நீதிமன்றத்தினுடைய உத்தரவையும் மீறி, ஓர் இராணுவத் தளபதி இவ்வாறு கூறியிருக்கின்றார் என்றால், இந்த நாட்டில் நீதியின் ஆட்சி - சட்டத்தின் ஆட்சி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே,
பொருளாதார அபிவிருத்தி பற்றிப் பேசுகின்றோம். ஒரு நாட்டில் நல்லெண்ணமும் சமாதானமும் விட்டுக்கொடுப்பும் இன ஐக்கியமுமில்லாத அபிவிருத்தி, ஒரு பூரண அபிவிருத்தியாகக் கொள்ளப்படமாட்டாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்மையிலே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில்கூட, நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்குமாறும் உண்மைகளைக் கண்டறியுமாறும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாவது தடவையாகவும் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட அந்த தீர்மானமானது இலங்கைக்குத் தரப்பட்டிருக்கும் கடைசி சந்தர்ப்பமாகவே நாங்கள் கருதுகின்றோம்.
இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டும். அந்த வகையில், தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மற்றும் இங்கிருக்கின்ற ஏனைய இன மக்களும் சமாதானமாக வாழவேண்டுமானால் இங்கு நடந்த குற்றங்களுடைய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையிலே தமிழர் தரப்புக்காக பேசுகின்றவர்களுடைய கட்சியைக்கூட தடை செய்கின்ற அளவுக்கு இந்த நாட்டினுடைய நிலைமை சென்றிருக்கின்றது. நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
ஆனால், ஏற்கெனவே நீதிமன்றத்திலே வலிகாமம் வடக்கைச் சேர்ந்த மக்கள் - 2,000 பேர் - தாங்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக வழக்குத் தாக்கல் செய்தார்கள்.
ஓர் இராணுவத் தளபதி நீதிமன்றத் தீர்ப்பைக்கூட மீறி அவர்களை அங்கு போக முடியாதென்று சொல்கிறாரென்றால், இந்த நாட்டினுடைய நீதித்துறை கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது.
சட்டத்தினுடைய நியாயாதிக்கம், சட்டத்தினுடைய ஆட்சி, நீதித்துறையினுடைய ஆட்சி என்பன இந்த நாட்டிலே நிலவுகின்றதாவென்ற கேள்வி பலரிடம் இருக்கின்றது. ஆகவே, இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளிநாடுகளிலிருக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களை அல்லது தனிநபர்களை தடை செய்வதன் மூலம் இங்கு சமாதானத்தைக் கொண்டுவரலாமென்று எங்களால் கருத முடியாது.
சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு தேசிய இனங்களுக்கிடையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே புரையோடிப் போயிருக்கின்ற இன வேறுபாட்டை - கருத்து வேறுபாட்டை களைய வேண்டுமானால் அவர்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தினுடைய பொன்னாவெளி என்ற கிராமத்திலே அவர்களுடைய பாரிய வளமான முருகைக் கற்களைத் தோண்டியெடுத்து டோக்கியோ சீமெந்து ஆலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் வடக்கு மாகாண சபைக்குக்கூடத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குள் அந்த மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபொழுது - தமிழ் மக்கள்மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டபொழுது, இந்தியப் பிரதமராகவிருந்த மதிப்புக்குரிய அன்னை இந்திரா காந்தி அவர்கள் இந்திய பாராளுமன்றத்திலே அதனை systematic genocide என்று சொன்னார்.
அந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்குப் பின்னர் 2009 இலே இந்த மண்ணிலே மீண்டும் ஓர் இன அழிப்பு நடைபெற்றது. இப்பொழுதும் ஒரு கட்டமைக்கப்பட்ட -structural genocide இங்கே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே, இவற்றுக்கு முடிவு எட்டப்பட வேண்டும். இங்கே நாங்கள் பேசுகின்ற பொழுதுகூட அங்கே பல இளைஞர்கள் காணாமற் போகின்றார்கள். பட்டப்பகலிலே கைது செய்யப்படுகின்றார்கள்.
கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே,
தமிழர் பிரதிநிதிகளாக இந்த மண்ணிலே இருக்கின்ற நாங்கள் எங்களுடைய கருத்துக்களை இந்த உயர் பீடத்துக்கூடாகச் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றோம். தமிழர்கள் தங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்கோ, சுதந்திரமாகப் பேசுவதற்கோ முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
இதனை இந்த மன்றத்திலே உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்கள் அன்றாடம் வாழ முடியாமல் தடுக்கப்படுகின்றார்கள். தமிழ் இளைஞர்கள் இந்த மண்ணிலே இருந்து ஏனைய நாடுகளுக்கு ஓடுவதற்கான அல்லது கலைக்கப்படுவதற்கான திட்டங்கள்தான் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
அரச பயங்கரவாதம் அங்கு கட்டவிழ்த்து விடப்படப்பட்டிருக்கின்றது. அந்த மக்கள் பேச முடியாதிருக்கின்றார்கள், அச்சப்படுகின்றார்கள், அவர்கள் வெளியிலே வர முடியாமல் இருக்கின்றார்கள்.
அந்த மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்! வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிந்துவிட்டது; அபிவிருத்தி நடக்கின்றது; சமாதானம் நிலவுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆனால், இதுவரை அந்த மண்ணிலே என்ன நடக்கின்றது? என கேள்வி எழுப்பி தன் உரையை நிறைவு செய்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnw2.html
தடுப்பிலுள்ள கர்ப்பிணிப் பெண் மீது வல்லுறவு: குற்றச்சாட்டை பொலிஸார் மறுப்பு
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 09:59.59 AM GMT ]
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி வடக்கில் கைது செய்யப்பட்ட பெண்கள் பொலிஸ் காவலில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

10 பெண்கள் உட்பட 65 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளை அடுத்து 5 ஆண்கள் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய 60 பேர் தொடர்பில் விசாரணைகளை நடத்தப்பட்டு வருகின்றன.
தடுத்து வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.
கைது செய்யப்பட்ட 10 பெண்களில் 8 பேர் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும். அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள தடுப்பு முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை உறவினர்கள் சந்திக்கவும் மருத்துவர்கள் பரிசோதனை செய்யவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிடம் வசதிகளை வழங்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் தமிழர்களும், சில ஊடகங்களும் தடுப்பில் உள்ளவர்கள் தொடர்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சந்தேக நபர்கள் மட்டுமே அவர்களிடம் புலிகளுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnw1.html

Geen opmerkingen:

Een reactie posten