தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தென்னாபிரிக்கா முன்வந்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இப் பேச்சுவார்த்தை காலத்தை சாதகமாக பயன்படுத்திய சிறிலங்கா அரசாங்கமம் இராணுவமும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு புலிகளை வெல்வதற்கான ஆயதங்களை மேற்கொண்டது. அதன் விளைவாக முள்ளியவாய்க்கால் பேரவலம் வரை தமிழர் தரப்பு செல்ல வேண்டியிருந்தது. இதன் போது உலக நாடுகள் பல மௌனம் காத்து அரசுக்கு தனது ஆதரவை வழங்கியிருந்தன.
இதன் பின் பூகோள அரசியல் நலன்களை முன்னிறுத்தி மீண்டும் தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துள்ள உலகநாடுகள் மூன்றாவது தடவையாக ஜெனீவாவில் தமிழர் பிரச்சனையை கொண்டு வந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும் நிலையில், அரசு அதிலிருந்து விடுபடும் முகமாக தென்னாபிரிக்காவின் தலைமையில் பேச்சுக்களை ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட அரசு மேற்கொள்ளும் இப் பேச்சுவார்த்தை முயற்சியில் அரசை தத்தெடுக்கும் வேலையில் கூட்டமைப்பு மீண்டும் ஈடுபட்டுள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஜெனீவா அழுத்தத்தில் இருந்து விடுபட இப் பேச்சு வார்த்தையை அரசு பயன்படுத்தவுள்ளது என்பதை அரசியல் சாணக்கியம் நிறைந்த கூட்டமைப்பு தலைமைக்கு புரியாதது அல்ல. அப்ப கூட்டமைப்பு எந்த நிகழ்ச்சி நிரலில் செல்கின்றது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது?
இது ஒரு புறமிருக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்மந்தன், சுமந்திரன், சுரேஸ்பிறேமச் சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தென்னாபிரிக்கா சென்று கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு திரும்பியுள்ளனர். தென்னாபிரிக்கா சென்ற போது செல்வம் அடைக்கலநாதன் சிங்கக் கொடியுடன் சென்று அரச விசுவாசத்தை தென்னாபிரிக்பகாவிற்கு காட்டியுள்ளார். சம்மந்தன், சுமந்திரனைத் தொடர்ந்து செல்வம் அடைக்கலநாதனும் அரசுக்கு சாதக சமிக்ஞையை காட்டியுள்ளார்.
ஆக மொத்தத்தில் 2002 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை தமிழர் தரப்பு பலமாக இருந்த போது கொண்டுவரப்பட்டு தமிழரை முள்ளியவாய்கால் வரை கொண்டு சென்றது. இப்போதைய தென்னாபிரிக்காவின் பேச்சுவார்த்தை தமிழர் தரப்புக்கு சர்வதேச நிலையில் ஏற்பட்டு வரும் சாதக நிலைமைகளை இல்லாது செய்து தமிழர் தரப்பை தனித்து விடுவதற்கான முயற்சியாகவும் அரசை காப்பாற்றுவதற்கான முயற்சியாகவும் அமையும்.
தமிழர் பிரச்சனை தீர்க்கப்படுமானால் கூட்டமைப்பின் அரசியல் பலவீனமாகும். பிரச்சனை தீராத வரைக்குமே அதனை வைத்து அரசியல் செய்ய முடியும் என்ற கருதுகோள்கூட கூட்டமைப்பிடம் இருக்கலாம் என கருதத்தோன்றுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இருப்புக்கான வேலைகளை நிறுத்தி தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து அரசியல் செய்யாது தொடர்ந்தும் இவ்வாறு நடக்குமாக இருந்தால் அடுத்த தேர்தல் அதற்கு தீர்வாக அமையும் என்பது வெளிப்படையானது.

- See more at: http://www.athirady.com/tamil-news/howisthis/359616.html#sthash.SejfqFLP.dpuf