கிளிநொச்சியில் நேற்று (17.04.14) அதிகாலையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கோபி உள்ளிட்டவர்களை நெடுங்கேணியில் சுட்டுக்கொன்றதாக சொல்லிய இராணுவம் இன்னும் யாரைத் தேடுகின்றனர் என்று கிளிநொச்சிப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நேற்றைய தினம் அதிகாலைவேளையில் வீட்டுப் படலைகளைத் திறக்கும்போது துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் நிறைக்கப்பட்டிருந்ததாக கிளிநொச்சி பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த சில நாட்களின் பின்னர் மீண்டும் இராணுவத்தினர் இவ்வாறு சுற்றிவளைத்திருந்தமை தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிளிநொச்சி ஆனந்தபுரம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட கிராமங்களே நேற்றையதினம் இலங்கை அரச படைகளின் திடீர் அதிரடிச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. வீதிகளை சுற்றிவளைத்து மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்த இராணுவம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.
இனால் குறித்த கிராமங்கள் நேற்று மதியம் வரையில் மிகவும் பதற்றமாக காணப்பட்டன. வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினர் வீட்டையும் காணிகளையும் நோட்டமிட்டதுடன் வீடுகளில் வசிப்பவர்களின் விபரங்களையும் கேட்டுப் பதிவு செய்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளித்த தலைவர்களை தேடுவதாக குறிப்பிட்டு கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக சோதனைகள், பதிவுகள், கைதுகள் என்று கிளிநொச்சிப் பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது. தமது இயல்பான வாழ்வு பாதிக்கப்பட்டதாகவும் குறித்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/66095.html
Geen opmerkingen:
Een reactie posten