தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

புலிகள் மீள ஒருங்கிணையவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

மகிந்தருக்கு நிதியை நிறுத்தாதீர்கள்! கனடியப் பிரதமரிடம் சங்கரி மன்டாட்டம்

இது தொடர்பில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் காப்பருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேன்மைதங்கிய ஸ்ரீபன் காப்பர்,
கனடிய பிரதம அமைச்சர்,
ஒற்றாவா,
கனடா.
மேதகு பிரதம அமைச்சர் அவர்களே!
பொதுநலவாய நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை இடைநிறுத்தம்
பொதுநலவாய நாடுகளில் ஒன்றாகிய இலங்கையின் ஓர் மூத்த தமிழ்பிரஜை என்ற வகையில் பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு உங்கள் அரசால் வழங்கும் பணத்தை இடைநிறுத்துவதாக தங்கள் அரசு எடுத்த முடிவை மீள்பரிசீலிக்குமாறு உரிமையுடன் வற்புறுத்தி வேண்டுகிறேன். அம்முடிவு உங்கள் உரிமையாக இருப்பதால் நான் இதை ஓர் சவாலாகவோ குற்றமாகவோ எடுக்கவில்லை.
ஆனால் மிக்க மரியாதையுடன் இத்தீர்மானமானது கால்நூற்றாண்டுகளுக்கு மேல் நடைபெற்ற யுத்தத்தினால் சொல்லொணாத துன்பத்தை அனுபவித்த நீங்கள் அனுதாபப்படும் அதே மக்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மக்கள் தம் சொத்துக்களை ஏறக்குறைய முற்றாக இழந்தும் ஏனைய மாவட்டங்களில் தம் சொத்துக்களில் பெரும்பகுதியை இழந்துமுள்ளனர்.
ஐயா, அரசியலில் 60 ஆண்டுகளுக்குமேலும், 80 வயதைத் தாண்டியும், 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து 2006ஆம் ஆண்டுக்குரிய பொறுமையையும் அகிம்சையையும் முன்னெடுக்க வழங்கப்படும் யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருதைப் பெற்றவன்நான். உங்களுடைய நாடு எமது நாட்டுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு பற்றியும், எமது நாட்டை முன்னேற்ற உங்கள் நாடு தந்த உதவிகள்பற்றியும் நாம் நன்கு அறிவோம்.
நம்நாட்டு பிரதம அமைச்சர்களில் ஒருவராகிய அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் பெயரைச் சுமந்து நிற்கும் கட்டுநாயக்கவில் – இரு நாடுகளின் உறவை உறுதிப்படுத்தும் நிரந்தரச் சின்னமாக விளங்கும் சர்வதேச விமான நிலையம் உங்கள் நாடு தந்துதவிய பெரும் உதவிகளில் ஒன்றாகும்.
உங்கள் நாட்டின் 9 மாகாணங்களின் பெயர்களை தனித்தனி சுமந்துநிற்கும் டீசல் புகையிரத என்ஜின்கள் நம்நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில் பெட்டிகளை இன்றும் இழுத்துச் செல்கின்றன. உங்கள் நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பு தந்துதவிய இதுபோன்ற உதவிகளை நம்நாட்டு மக்கள் இன்றும் நன்றியோடு நினைவுகூருகின்றார்கள்.
உங்களுடைய நாட்டை எப்போதும் நல்ல நட்பு நாடு என்று மட்டும் கருதாமல் எமது நாட்டின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட நாடாகவே கருதுகிறேன். கடந்த நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்ளாதது எனக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றையும் இலங்கை ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு6.11.2013 தேதியிட்டு கடிதம் எழுதியிருந்தேன். (பிரதி இணைக்கப்பட்டுள்ளது) மேலும் உங்கள் நாட்டின் பிரஜா உரிமைபெற்ற பல நண்பர்களும், உறவினர்களும் உங்குள்ளார்கள். நானும் பலதடவைகள் உங்கள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளேன்.
அன்புடையீர் எமது இனப்பிரச்சினை சம்பந்தமாக ஓர் பொன்னான வாய்ப்பு எம்மைத் தேடிவந்தும் அதைத் தவறவிட்டுவிட்டோம் என இன்றும் கவலையுடன் உள்ளேன். இக்குற்றத்தை நம்நாட்டுத் தமிழ்த் தலைமையும், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும். எமது பிரச்சினை விரிவாக ஆராயக் கூடிய அரங்கம் பொதுநலவாய நாட்டு மேடையே என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர். பேச்சுவார்த்தைக்கும் நல்லதொரு ஆரம்பமாக அமைந்திருக்கும்.
பிரித்தானியப் பிரதமமந்திரி டேவிட் கமரோன், 54 நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அவை அனைத்தையும் பொது நலவாய அமைப்பில் அங்கத்துவப்படுத்திய நாட்டின் பிரதமர் ஆவார். இந்தியப் பிரதமரும் தாங்களும் இந்த மாநாட்டுக்கு வருகைதந்திருப்பின் இருவரும் பிரித்தானியப் பிரதமருடன் இணைந்து இலங்கைப் பிரச்சினை சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வாய்ப்பாக அமைந்திருக்கும். இதுபோன்றதொரு மாநாட்டிலேயே தென்னாபிரிக்காவின் இன வெறிப் பிரச்சினை ஆராயப்பட்டு இறுதியில் ஒரு சிறு குழுவால் பிரித்தானியாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் எதுவித தடையுமில்லாதிருந்தும் இப்பிரச்சினையை எடுத்திருக்க வேண்டியவர்கள் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. மனித உரிமை மீறல் பிரச்சினையுடன் இனப்பிரச்சினையையும் தாராளமாக எடுத்திருக்க முடியும். பிரித்தானியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் மனித உரிமை மீறல் பிரச்சினையை மட்டும் இறுகப்பற்றிக் கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ்த் தலைமை இனப்பிரச்சினை பற்றிப் பேசக்கூடிய சிறந்த அரங்கு பொதுநலவாய அரங்கம்தான் என்று நன்கு தெரிந்திருந்தும் எவரின் முயற்சியுமில்லாமல் தானாகத் தேடிவந்த சந்தரப்பத்தைப் பயன்படுத்தாது பிரித்தானியப் புலம்பெயர்ந்தவர்கள் கூறியதை அன்றி வேறு எதுவித பிரச்சினையிலும் தலையிடத் தயாராக இல்லை. இனப்பிரச்சினை உட்பட.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை மாநாட்டு பிரதிநிதிகள் இங்கிருந்த காலத்தில் 15.11.2013 தொடக்கம் 20.11.2013 வரை ஓர் சத்தியாக்கிரக ஒழுங்கைச் செய்திருந்தனர். அது மட்டும்தான்.
ஐயா, எனது ஆதங்கத்தை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதேபோன்ற ஒரு மாநாட்டில்தான் தென்னாபிரிக்க மக்களின் பிரச்சினை எடுக்கப்பட்டு இறுதியாக ஒரு உபகுழுவால் வெற்றிகரமாக லண்டனில் நிறைவேற்றப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தாங்கள் இந்திய, பிரித்தானிய பிரதமர்களுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்போடு எமது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சி எடுப்பீர்கள் என நம்பி ஆறுதலடைகிறேன். அதற்கு முன்னோடியாக சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பைப் பெற இடைநிறுத்தப்பட்ட உங்கள் தீர்மானத்தை மீள் பரிசீலித்து நிதியை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன்,Sainkare
http://www.jvpnews.com/srilanka/66334.html

புலிகள் மீள ஒருங்கிணையவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதாக கூறப்பட்ட போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கருத்துக்களுக்கு பதிலளித்து தமது சக்தியையும் நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுரேஸ் பிரேமசந்திரன், ஆனந்தி சசிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய விடுத்திருந்த கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் தோல்வியடைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைமையைப் பின்பற்றி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/66338.html

Geen opmerkingen:

Een reactie posten