2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அவுஸ்திரேலியா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட The International New York Times ஊடகத்தில் *BEN SAUL எழுதியுள்ள கருத்துப்பகிர்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
எவ்வித விசாரணைகளுமின்றி கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவொன்றில் 52 வரையானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2012ம் ஆண்டிலிருந்து இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்கொலை முயற்சிகள் இவர்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதற்கு சான்று பகர்கின்றன. இவ்வாறான தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் போர்வை ஒன்றால் தன்னைத் தானே மூச்சுத் திணறவைத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். பிறிதொருவர் தன்னைத் தானே மின்சாரம் பாய்ச்சி தற்கொலைக்கு முயற்சித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள பிறிதொருவர் தன்னைத் தானே வெட்டி தனது உடலிலிருந்து வெளியேறிய இரத்தத்தின் மூலம் சுவரில் செய்தியொன்றை எழுதியிருந்தார். இவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பதை ஏற்பதற்கு அரசாங்கம் மறுத்துவருகிறது.
இந்தத் தீவு அமெரிக்காவால் அமைக்கப்பட்ட குவான்ரனாமொ சிறைச்சாலை அமைந்துள்ள கியூபாத் தீவு அல்ல. இது அவுஸ்திரேலியா என்கின்ற தீவாகும். செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின்னர், கடந்த ஒரு பத்தாண்டாக அமெரிக்கா தனது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை' உலகின் அமைதி மிக்க இடத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தஞ்சம் புகுந்துள்ள அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசாங்கமானது பல்வேறு பாதுகாப்பு ஆபத்துக்களை விளைவித்துள்ளது.
சிட்னியின் புறநகர்ப் பகுதியில் உள்ள விலாவூட், மெல்பேனுக்கு அருகிலுள்ள மரிபிர்னொங்க் ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியா தடுப்பு நிலையங்களை அமைத்துள்ளது. இதேபோன்று சிறிலங்காவில் தொடரப்பட்ட 26 ஆண்டுகால யுத்தத்தின் விளைவாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த சிறிலங்காத் தமிழர்களில் 46 பேர் மற்றும் மியான்மாரைச் சேர்ந்த றோகின்ஜா முஸ்லீம்கள், குவைத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆப்கானைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 52 பேருக்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்காது இவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைத்துள்ளது.
இவர்களுக்கு எதிராக எவ்வித நீதி சார் நடவடிக்கைகளும் எடுக்காது மனிதாபிமானத்திற்கு எதிராக இவர்கள் சட்ட ரீதியற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட்டில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. 1980ல் அவுஸ்திரேலியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1966 அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சாசனத்தை இந்நாட்டு அரசாங்கம் 150 தடவைகள் மீறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெப்ரவரி 18 இற்கிடையில் இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களைக் காரணங் காட்டி அவுஸ்திரேலியா இதனை ஏற்கமறுத்தது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக விடுவிப்பதுடன், தேசியச் சட்த்தின் கீழ் இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
குழந்தைகள் உட்பட சிறுவர்களையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. 2009ல் எட்டு வயதிற்குக் குறைந்த மூன்று சிறார்கள் விலாவூட் சிறைச்சாலையில் அவர்களது பெற்றோருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு சிறார்கள் தடுத்து வைக்கப்பட்டமையானது இவர்களது உளவியல் அபிவிருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இக்குடும்பத்தின் நிலைப்பாடு தொடர்பாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மீள மதிப்பீடு செய்ததன் பின்னர் இறுதியாக கடந்த ஆண்டு இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அவுஸ்திரேலியாவில் காலவரையறையற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாதம் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் திணைக்களத்தின் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான உறுதிப்படுத்தல்கள் போதியளவாக இருக்கவில்லை. இவற்றுக்கான சாட்சியங்கள் சட்டரீதியாகப் பெறப்படவில்லை. ஏன் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் என்பதற்கான அடிப்படைக் காரணம் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் மீது சுயாதீனமாக எந்தவொரு நீதிமன்றமும் விசாரணை மேற்கொள்ளவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உண்மையில் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனரா என்பது அறியப்படவில்லை.
விலாவூட் மற்றும் மரிபிர்னொங்க் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் வன்முறைகளில் ஈடுபடலாம் என பாதுகாப்பு அமைப்பின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பைப் பேணலாம் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் சிலர் புலிகள் அமைப்புடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ளனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்திருக்கலாம் அல்லது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தமிழ் மக்களுக்கான சட்டவாளராகக் கடமையாற்றியிருந்தார். பிறிதொருவர் பொதுமக்களுக்கான பதுங்குகுழிகளை அமைத்துக் கொடுத்திருந்தார். கடந்த காலங்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடாதவர்களுக்கு மாத்திரம் 2010 மற்றும் 2011களில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதி நிலையை வழங்கியது.
இன்றுவரை எவ்வித விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என அனைத்துலக மட்டத்தில் அழுத்தம் இடப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, யப்பான், இந்தோனேசியா போன்ற ஜனநாயக நாடுகளில் தனது மதிப்பை இழக்கக் கூடாது என அவுஸ்திரேலியா கருதுகிறது.
அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய பொருளாதாரப் பங்காளியான சீனா இந்த விடயத்தில் அவுஸ்திரேலியாவுக்கு உதவக்கூடும். கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுக்களின் போது அவுஸ்திரேலியாவின் அகதிகள் கோட்பாட்டை சீனா வரவேற்றிருந்தது. 2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அவுஸ்திரேலியா தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும். விலாவூட் மற்றும் மரிபிர்னொங்க் சிறைச்சாலைகள் மனிதாபிமானத்திற்கு எதிரானவை என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கூட ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்படலாம். இதற்கான போதிய ஆதாரங்களை ஐ.நா விசாரணை அறிக்கை வழங்குகிறது. அவுஸ்திரேலியா நீதிமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியேற்படும். இது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தண்டனையை அனுபவிக்க வேண்டியேற்படும்.
அமெரிக்காவின் குவான்ரனாமோ சிறைச்சாலை தொடர்பாக அவுஸ்திரேலியா கேள்வியெழுப்பக் கூடும். இங்கு அமெரிக்கா பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சிறைச்சாலையில் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ள போதிலும் இதனை மூடுவதற்கு ஒபாமா அரசாங்கம் பின்னடித்து வருகிறது.
ஆனால் 12 ஆண்டுகளாக எவ்வித விசாரணையுமின்றி குவான்ரனாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்ஜீரியன் ஒருவரை நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக இந்த மாதம் அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இச்சிறைச்சாலையின் நிலைப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நீதிச் சேவை விசாரணை செய்ய வேண்டும் என அமெரிக்க சமஸ்டி நிர்வாகம் கடந்த மாதம் அறிவுறுத்தியிருந்தது. இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அமெரிக்கா முன்னேற்றகரமான மனிதாபிமான ரீதியான நடவடிக்கைகளை எடுத்தால் அவுஸ்திரேலியா இதனைத் தனது கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். |
Geen opmerkingen:
Een reactie posten